எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 50
அத்தியாயம் 50 :
நாட்கள் அழகாகக் கடந்து செல்ல...ஒருவழியாக கெளதம்...சுமித்ராவின் திருமண நாளும் வந்தது.அனைத்து ஏற்பாடுகளையும் ஆதித்யன் மற்றும் கெளதம் ஆகிய இருவருமே கவனித்துக் கொண்டனர்.சுமித்ராவிற்குத் தேவையான நகைகள் வாங்குவதில் இருந்து...முகூர்த்த புடவை எடுப்பது வரை...என் அனைத்தையுமே கெளதமே பார்த்துக் கொண்டான்.
ஏனோ....தங்களுடைய திருமணத்திற்கான ஏற்பாட்டில் சுமித்ராவின் தந்தையின் பங்களிப்பை அவன் விரும்பவில்லை.பெற்ற மகளைக் கொல்லக் கூடத் தயங்காத அந்த மிருகங்களின் எண்ணங்கள் கூட....தங்கள் திருமணத்தின் மேல் விழக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.
இந்த இடைப்பட்ட ஏழு நாட்களில்...கௌதமும்...சுமித்ராவும் தங்களது காதலை பேசிப் பேசியே வளர்த்தனர்....!திருமணத்திற்கு சிறிது நாட்களே இருந்ததால்....சுமித்ராவின் அம்மா....அவளை அலுவலகத்திற்கு அனுப்ப மறுத்து விட்டார்....!பகல் முழுவதும் கௌதமை திருமண வேலைகள் ஆக்கிரமித்துக் கொள்ள....பால் நிலா சிந்தும் இரவுப் பொழுதை தங்களது காதலுக்காக பயன்படுத்திக் கொண்டான்.
ஆதித்யனும்...திருமண வேலைகள் சம்மந்தமாக வெளியே அலைய வேண்டி இருந்ததால்....ஆபிஸை நித்திலாதான் பார்த்துக் கொண்டாள்....!
இப்படியாக....திருமண நாளும் அழகாக விடிந்தது....!சில பல தடங்கல்களுக்குப் பிறகு....இதோ இப்பொழுது....தன் காதல் கண்மணியின் கரம் பிடிப்பதற்கான பொன்னான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு...மணமகனாய் கம்பீரமாய் மணமேடையில் அமர்ந்திருந்தான் கெளதம்....!
ஐயர் கூறும் மந்திரங்களுக்கு செவி சாய்த்து....அதை திருப்பி உச்சரித்துக் கொண்டிருந்தவனின் விழிகள்...தன்னவளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தது....!அவளும் வந்தாள்....!அந்த வானலோகத்து நங்கைகளையும் தோற்கடிக்கும் அழகோடு....அவன் எடுத்துக் கொடுத்த அரக்கு வண்ண பட்டுப்புடவையில்....மிதமான அலங்காரத்தில்....வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவந்திருக்க....தேவதையைப் போல் நடந்து வந்தவளிடம் இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் அவன்....!
இவன் இங்கு திணறிக் கொண்டிருக்க...அவனுக்கு அருகில் மாப்பிள்ளைத் தோழனாய் அமர்ந்திருந்த ஆதித்யனும்....தன் நண்பனுக்கு சற்றும் குறையாத திணறலை சந்தித்துக் கொண்டிருந்தான்.
இளஞ்சிவப்பு வண்ண பட்டுப் புடவையில்...அழகுக்கே சவால் விடும் பேரழகோடு சுமித்ராவின் அருகில் வந்து கொண்டிருந்த நித்திலாவைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன ஆதித்யனுடைய கண்கள்....!அவனுக்கு சற்றும் குறையாத காதல் பார்வைகளை....ஆதித்யனை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தாள் நித்திலா....!தன்னவனை முதல் முறையாக பட்டு வேட்டி சட்டையில் பார்க்கிறாள் அல்லவா...?அந்த மயக்கம் அவள் விழிகளில் குடி கொண்டிருந்தது...!
வெள்ளை பட்டு வேட்டி சட்டையில் ஆண்மைக்கு இலக்கணமாய் அமர்ந்திருந்த கௌதமிற்கு அருகில்....பெண்மையின் பேரழகிற்கு இலக்கணமாய் அமர்ந்திருந்தாள் சுமித்ரா.இருவர் விழிகளும் காதலாலும்...கனவுகளாலும் நிரம்பியிருந்தன....!
"கெட்டி மேளம்....!கெட்டி மேளம்....!",
வேத மந்திரங்கள் முழங்க....தேவ தேவர்களின் ஆசிர்வாதத்தோடும்....சுற்றியிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்தொலிகளோடும்....மங்கள நாணை கையில் ஏந்தினான் கெளதம்.தன்னவன் போடும் மூன்று முடிச்சை எதிர்பார்த்து....தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அந்த மங்கை...!
அந்த பொன் தாலியை அவள் கழுத்தில் அணிவிப்பதற்காக எடுத்துச் சென்றவனின் கைகள்....அதை அணிவிக்காமல் சற்று தாமதிக்க....சரியாக அதே நேரம் அவளும் நிமிர்ந்து அவனை நோக்கினாள்....!இருவரின் விழிகளிலும் அப்படியொரு காதல்....!
'வாழ்வின் எல்லை வரை நீயும் நானும் காதலோடு பயணிப்போம்....!' என்ற உறுதிமொழியைத் தன் கண்களின் மூலமாக அவளது விழிகளுக்கு எடுத்துரைத்தவன்....அவளுடைய விழிகளைத் தன் காதலால் கட்டிப் போட்டபடி....அவளது சங்கு கழுத்தில் மஞ்சள் தாலியை அணிவித்து மூன்று முடிச்சிட்டான்....!
தன் மார்பில் தவழ்ந்த தாலியின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டவளின் விழிகள் தாமாக மூடிக் கொண்டன...!அவள் இமைகளின் ஓரத்தில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் எட்டிப் பார்த்தது....!
மென்மையாய் அதை சுண்டி விட்ட கௌதமை...தன் விழி திறந்து பார்த்தவளின் பார்வையில் காதல்....காதல் மட்டுமே நிறைந்திருந்தது....!'வேண்டாம்...' என்பதாய் தலையசைத்தவனின் கண்கள்....'இனி நீ எதற்காகவும் அழக்கூடாது....' என்ற செய்தியை பிரதிபலித்தன...!
ஐயர் கூறியபடி குங்குமத்தை எடுத்துச் சென்று அவள் நெற்றி வகிட்டிலும்....மாங்கல்யத்திலும் சூட்டி விட்டு....அவளை முழுமையாகத் தன் மனைவியாக....தன்னில் சரிபாதியாக அங்கீகரித்துக் கொண்டான் கெளதம்.
இதை அனைத்தையும் கண்ணீர் நிறைந்த விழிகளோடும்....தாய்மையின் கனிவோடும் பார்த்துக் கொண்டிருந்தார்....சுமித்ராவின் தாய் ருக்மணி.அவளது தந்தையும்...சித்தப்பாவும் தோற்றுப் போன அவமானத்துடன் நடப்பதை வெறித்துக் கொண்டிருந்தனர்.அதற்கு ஏற்றார் போல்...அவர்களது உறவினர்களும்...அவ்வப்போது "என்ன...பையன் நம்ம சாதி இல்லையா....?",எனக் கேட்டு கேட்டு அவர்களுடைய ஆத்திரத்தைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய ஆத்திரமும் கோபமும் இந்தத் தம்பதிகளை ஒன்றும் செய்யப் போவதில்லை...!ஏனென்றால்....இவர்களுக்குத்தான்...'காதல்' என்னும் மாபெரும் சக்தி துணையாக இருக்கிறது அல்லவா....?
அதன் பிறகும்....பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் என்று நேரம் கடந்து கொண்டிருந்தது.
"அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கிறேம்மா.....!",நித்திலாவின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவியபடி கூறினார் லட்சுமி....ஆதித்யனின் அம்மா...!
அவனது மொத்தக் குடும்பமும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தது.அவர்களிடம் நித்திலாவை அறிமுகப்படுத்தி வைத்தான் ஆதித்யன்.
"என் பேராண்டி ஏன் மந்திரிச்சு விட்டக் கோழி மாதிரி திரிஞ்சான்னு இப்போத்தானே தெரியுது....!என்னுடைய பேத்தி அவ்வளவு அழகு.....!",பாசத்துடன் நித்திலாவின் கைகளைப் பற்றிக் கொண்டார் கமலா பாட்டி.
"வாழ்க்கையிலேயே முதல் முறையா என் பேரன் அரண்டு போய் நின்னது உன் விஷயத்துல மட்டும் தான் மா....!'என் அப்பாக்கிட்ட சொல்லி வைச்சிடுவேன்...!'ன்னு அவனையே மிரள வைச்ச நீ....பெரிய ஆள்தான் மா....!",வழக்கம் போல் சுந்தரம் தாத்தா கலகலப்பாக பேசினார்.
"இப்படிப்பட்ட மருமகள்தான் எனக்கு வேணும்.....!இவனை எப்பவும் மிரட்டியே வைச்சிரு ம்மா.....!அப்பத்தான் இந்த முரட்டுப் பையனை சமாளிக்க முடியும்.....!",மாணிக்கமும் குறும்புடன் அந்தப் பேச்சில் கலந்து கொண்டார்.
நித்திலாவைச் சுற்றி நின்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க....அனைவருக்கும் ஒரு வெட்கப் புன்னகையை பதிலாகத் தந்தபடி நின்றிருந்தாள் நித்திலா.
முதன் முதலில்....புகுந்த வீட்டு உறவுகளை எதிர் கொள்ளும் போது எந்தப் பெண்மையுமே தடுமாறத்தான் செய்யும்....!அதில் நித்திலா மட்டும் விதிவிலக்கா என்ன....?அவர்களிடம் எப்படி பேசுவது...அவர்களது கலகலப்பான பேச்சை எப்படி எதிர்கொள்வது...என்று சிறிது தடுமாறிக் கொண்டுதான் இருந்தாள்.
அவளது மருண்ட விழிகளில் இருந்தே....அவளது பயத்தைக் கண்டு கொண்டான் ஆதித்யன்.மெல்ல அவளைப் பார்த்து 'நான் இருக்கிறேன்....!',என்பதைப் போல கண்களை மூடித் திறந்தான்....!அவ்வளவுதான்....!அந்தச் சிறிய கண்ணசைவிற்குத்தான் எத்தனை சக்தி.....!அவனுடைய அந்தச் சிறிய செய்கையில்....அவள் தன் மனதிற்குள் இருந்த அத்தனை தயக்கங்களையும்....அச்சத்தையும் விட்டொழித்தாள்...!
அதற்குள் மருமகளின் தடுமாற்றத்தை உணர்ந்து கொண்ட லட்சுமியும்,"சரி.....!எல்லோரும் மாறி மாறி பேசி என் மருமகளைப் பயமுறுத்தாதீங்க.....!நீ வாம்மா.....!நாம போய் அங்கே உட்காரலாம்....!",அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.
"அம்மா.....!அவளை எங்கே கூட்டிட்டுப் போறீங்க.....?அவளுக்கு கொஞ்சம் வேலையிருக்கு.....!",அவசர அவசரமாகப் பேசினான் ஆதித்யன்.
அவனுக்கு அவன் கவலை....!அவளை சாதாரணமாகப் புடவையில் பார்த்தாலே....மயங்கிக் கிறங்கிப் போய்விடுவான் அவன்.....!அதுவும்...இன்று பட்டுபுடவைக் கட்டிக்கொண்டு....அவன் வாங்கிக் கொடுத்த வைர நகையை அணிந்து கொண்டு....தோளில் வழியும் மல்லிகைச் சரத்துடன் வளைய வருபவளைக் கண்ட பின்பும்....அவன் நிலைமையைப் பற்றி சொல்ல வேண்டுமா....?அவளது புடவை மடிப்பில் சிக்கி அவன் மனம் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது....!
அந்த மனதை மீட்பதற்காக....நித்திலாவின் அருகாமையை நாடினான் அந்தக் காதல்காரன்....!இதை எதையும் அறியாமல்...நித்திலாவை நடுவில் அமர வைத்து....அவளைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டு கதைப் பேசத் தயாராகியது அவனுடைய குடும்பம்.
"டேய்....!இன்னைக்குத்தான் என் மருமகளையே நீ என் கண்ணில காண்பிச்சிருக்கிற....!நான் கிளம்பற வரைக்கும் இவள் என் கூடத்தான் இருப்பாள்....!எந்த வேலையா இருந்தாலும் நீயே பார்த்துக்கோ....!எங்களைத் தொல்லை பண்ணாதே....!",விரட்டினார் லட்சுமி.
"இவ்வளவு நாள் வீட்டுக்கு வரமாட்டேன்னு உங்க மருமகள்தான் அடம் பிடுச்சுக்கிட்டு இருந்தா....!என்னன்னு அவளையே கேளுங்க....!",அவளது அருகாமை கிடைக்காத கடுப்பில் சற்று எரிச்சலுடன் கூறினான் ஆதித்யன்.
அவன் திடீரென்று தன்னை மாட்டிவிடவும் திருதிருவென விழித்த நித்திலா,"அது....வந்து...அத்தை....எங்க அம்மா அப்பா சம்மதிக்காம....அங்கே நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு எனக்குக் கொஞ்சம் தயக்கமா இருக்கு.....!அதனாலதான் வீட்டுக்கு வரலை....!",தயங்கித் தயங்கி கூறி முடித்தாள்.
அந்த நொடி....அந்த மாமியாரின் உள்ளத்தில் நீக்கமற இடம் பிடித்தாள் நித்திலா.'பெற்றவர்களிடம் இவ்வளவு மரியாதை வைத்திருப்பவள்....நிச்சயம் புகுந்த வீட்டினரிடமும் மரியாதையாகத்தான் பழகுவாள்....!நல்ல குணமான பெண்....!',அவரது மனது சான்றிதழ் வழங்க....அவரது கண்கள் பாராட்டுதலாய் தன் மகனை நோக்கியது.
'ரொம்ப அருமையான பெண்ணை தேர்ந்தெடுத்திருக்கிறாய்....!', எனும் பாராட்டு அதில் தொக்கி நின்றது.
அதில் அந்த ஆண்மகன் கர்வம் கொண்டான்....!கணவனின் கர்வம்...மனைவியின் பண்புக்குள் ஒளிந்திருக்கிறது...என்பது எவ்வளவு சாத்தியமான வார்த்தை....!அவன் விழிகள் காதலோடு தன்னவளின் மேல் படிந்தது.
"அதுவும் சரிதான் ம்மா....!உன் அம்மா அப்பா சம்மதத்துக்குப் பிறகு...முழு உரிமையோடு நீ....நம்ம வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கணும்.....!",கனிவுடன் கூறினார் அந்தத் தாய்.
"சரி...சரி...!இதையெல்லாம் விடுங்க....!நித்தி கண்ணா....!உங்க ஆபிஸ்ல எவ்வளவோ நல்ல பசங்க இருந்தும்.....அவங்களை எல்லாம் கண்டுக்காம இவனுக்கு எதுக்குமா ஒகே சொன்ன....?சரியான முரட்டு பையனாச்சே இவன்.....!",ஆதித்யனைப் பார்த்து போலியாக முகத்தைச் சுளித்தபடியே சுந்தரம் தாத்தா வினவ..
"என்ன பண்றது தாத்தா.....!விதி வலியது.....!",உதட்டைப் பிதுக்கியபடி சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறியவளின் விழிகள் மட்டும் காதலாய் ஆதித்யனைப் பார்த்திருந்தது.
'என்னடி.....?சலிச்சுக்கிறே.....!',அவனது பார்வை அவளைக் கேள்வி கேட்டது.
உதட்டைச் சுளித்து அழகு காட்டினாள் அவள்....!
அதற்குள் சுந்தரம் தாத்தாவின் பேச்சுக்குரல் அவளைக் கலைக்க...அவள் தன் கவனத்தை அவர் புறம் திருப்பினாள்.
"உண்மைதான் ம்மா...!விதி வலியதுதான்....!இந்த முசுட்டுப் பையனுக்கு இப்படி ஒரு தங்கமான பொண்ணு கிடைச்சிருக்கே....!இருந்தாலும்....இவனுடைய மிரட்டலுக்கெல்லாம் நீ பயப்படாதே.....!ஓவரா மிரட்டினான்னா...இந்த தாத்தாக்கிட்ட சொல்லு....நான் பார்த்துக்கிறேன்.....!",அவர் அபயக்கரம் நீட்ட..
"கண்டிப்பா தாத்தா....!உங்ககிட்டேதான் சொல்லுவேன்....!அங்கே பாருங்க....இப்போ கூட என்னை முறைச்சுக்கிட்டே நிற்கிறாரு.....!",குழந்தைத்தனமாய் அவள் புகார் வாசித்தாள்.
உண்மையிலுமே....அவன்...அவளை முறைத்துக் கொண்டுதான் நின்றிருந்தான்.
'மனுஷனோட அவஸ்தையை புரிஞ்சுக்காம...ஜாலியா இங்கே உட்கார்ந்து அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கா பாரு.....!',என்று அவன் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.இருந்தும் மனதிற்குள்.... தன் தாத்தாவோடு சேர்ந்து அவள் பண்ணும் குறும்புகளை ரசித்துக் கொண்டுதான் இருந்தான்.
"டேய்....!என் பேத்தியை எதுக்கு டா முறைக்கிற.....?முதல்ல இடத்தைக் காலி பண்ணு....!உனக்கு இங்கே என்ன வேலை....?",அவனை விரட்டினார் சுந்தரம் தாத்தா.
அவரது அட்டகாசத்தைத் தாங்க முடியாமல்,"பாரு கமலு....!உன் புருஷன் பண்ணற அநியாயத்தை.....!",தன் பாட்டியிடம் முறையிட்டான் அந்த செல்லப் பேரன்.
"என்ன....?தாத்தாவும் பேத்தியும் சேர்ந்துக்கிட்டு என் பேரனை மிரட்டறீங்களா....?என் பேரனுக்கு சப்போர்ட்டா நான் இருக்கேன்.....!",தன் பேரனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்....தன் மருமகளிடம் திரும்பி..."நீ ஏன் லட்சுமி அமைதியா உட்கார்ந்திருக்கிற....?உன் பையனை இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு விரட்ட பார்க்கறாங்க....!",தன் மருமகளையும் கூட்டு சேர்க்க..
"அய்யோ அத்தை.....!நான் இனி என் மருமகளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்.....!நீங்களாச்சு....!உங்க பேரனாச்சு....!",என்று கழண்டு கொள்ள..
"போங்க.....!எங்களுக்கென்ன வந்துச்சு.....?நானும் என் பேரனும் மட்டுமே போதும்.....!உங்க எல்லாரையும் சமாளிச்சிடுவோம்.....!",தைரியமாகப் போர்கொடியைத் தூக்கினார் கமலா பாட்டி.
அங்கு ஒரு கலகலப்பான குடும்பச் சூழல் உருவானது...!நித்திலாவும் தன் தயக்கத்தை விட்டொழித்து...அவர்களுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்.ஆதித்யன்தான் இங்கு காதில் புகை வராத குறையாக அமர்ந்திருந்தான்.
அவளைத் தனியே வருமாறு அவன் சைகை செய்தும்....அதை அவள் கண்டு கொள்ளாமல்....லட்சுமியின் முந்தானையை பிடித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தாள்....!தன் குடும்பத்தினரிடம் வெகு பாந்தமாக பொருந்திக் கொண்ட நித்திலாவை விழிகள் நிறையக் காதலுடனும்.....மனம் முழுக்க நிறைவுடனும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்...!
இப்படியாக நேரம் விரைய....மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நேரமும் வந்தது.
சுமித்ராவின் குடும்ப வழக்கப்படி....திருமணமான தம்பதிகளை முதலில் பெண் வீட்டிற்குத்தான் அழைத்துச் செல்வர்...!என்னதான் கோபமாக இருந்தாலும்....சுமித்ராவின் தந்தை இந்த சடங்கையெல்லாம் முறையாக கடைபிடித்தார்....!
ராஜவேலுவும்....தங்க துரையும் கௌதமை அழைக்க வர....அவனோ..."என்னால உங்க வீட்டுக்கெல்லாம் வர முடியாது.....!",என்று பிடிவாதமாக மறுத்தான்.
இருவரும் அதிர்ச்சியுடன் அவனை நோக்க...சுமித்ராவின் தாய் முன்வந்து கெஞ்ச ஆரம்பித்தார்.
"மாப்பிள்ளை.....!உங்க கோபம் எனக்குப் புரியுது....!ஆனால்....இது சடங்கு மாப்பிள்ளை....!எங்க சம்பிரதாயப்படி முதல்ல பொண்ணு மாப்பிள்ளையை....பெண்ணோட வீட்டுக்குத்தான் அழைச்சிட்டுப் போவாங்க....!",
"அப்படிப்பட்ட சம்பிரதாயம் எனக்குத் தேவையில்லை அத்தை.....!நான் இப்படி பேசறது தப்புதான்...!என்னை மன்னிச்சிடுங்க.....!என்னை 'அநாதை'ன்னு சொன்னவங்களோட வீட்டு வாசல்படியை மறுபடியும் மிதிக்க நான் தயாரா இல்ல....!உங்களுக்கு எப்போவெல்லாம் தோணுதோ....அப்பவெல்லாம் வந்து உங்கப் பொண்ணை பார்த்துட்டு போகலாம்.....!அதுல...எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல....!ஆனால்....உங்க வீட்டுக்கு வருவேன்னு மட்டும் நீங்க எதிர்பார்க்க வேண்டாம்....!",அழுத்தமான குரலில் உரைத்தான் அவன்.
அவனது வார்த்தைகளில்...'இனி...நானோ இல்லை என் பொண்டாட்டியோ உங்க வீட்டு வாசல்படியை மிதிக்க மாட்டோம்....!'என்ற செய்தி ஒளிந்திருந்தது.சுமித்ராவும் அதை உணர்ந்து கொண்டாள்....!சுற்றியிருந்த அவளது பிறந்த வீடும் அதை உணர்ந்து கொண்டது.....!
அவனது பிடிவாதமான குரலில்....சுமித்ராவின் தாய் அமைதியாகி விட....சுமித்ரா மெளனமாக கண்ணீர் வடித்தாள்.என்னதான் கோபமாக இருந்தாலும்....அடித்தாலும் பிடித்தாலும் பிறந்த வீடு...பிறந்த வீடுதானே....?தாய் மடி தரும் சுகத்தை....கணவனின் தோள் தந்து விடுமா என்ன....?
'இனி...தன் பிறந்த வீட்டை விட்டுத் தான் விலகித்தான் இருக்க வேண்டும்....!',என்ற நிதர்சனம் அவள் விழிகளில் கண்ணீரைக் கொண்டு வந்தது.
அவளது கண்ணீரைக் கண்ட கெளதம்....ஆறுதலாக அவள் தோளைச் சுற்றி அணைத்துக் கொண்டான்.
"அழாதேடா....!உனக்கு விருப்பம் இருந்தால்...உங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வா....!ஆனால்...நீ தனியாகத்தான் போகணும்....!நான் வர மாட்டேன்....!",அவன் குரலில் ஒரு ஒட்டாத தன்மை இருந்தது.
தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு....அவன் கண்களை நோக்கியவள்,"என் புருஷனை விட்டுட்டு நான் மட்டும் எங்கே போகட்டும்....?நான் ஏற்கனவே சொன்னதுதான் மாமா....நீங்க காட்டற வழியில...உங்க கை பிடிச்சுக்கிட்டு நடந்து வர நான் தயாரா இருக்கேன்....!",காதலுடன் கூறியவளைப் பார்த்தவனின் மனம் அமைதியடைந்தது.
'இவள் என்னவள்....!' என்று கர்வமாய் நிமிர்ந்தான்.
உறவினர்களுக்கு முன்னால் 'என்ன செய்வது....?' என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்ற ராஜவேலுவையும்.....தங்க துரையையும் நோக்கியவன்,"நீங்க என் வீட்டுக்கு வர்றதை நான் தடுக்க மாட்டேன்.....!அத்தை....!நீங்களும் கிளம்புங்க....!நம்ம வீட்டுக்குப் போனதுக்குப் பிறகு....நீங்க செய்ய வேண்டிய சடங்கையெல்லாம் செய்யுங்க....!",என்றவன்...ஆதித்யனை அழைத்து....வீட்டிற்கு முன்னதாக சென்று அனைத்தையும் தயார் செய்யச் சொன்னான்.
மற்ற உறவினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க....மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே மண்டபத்தில் எஞ்சியிருந்தனர்.நடக்கும் கூத்தை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும்....'கல்யாணம் முடிந்து விட்டது....!இனி...மாப்பிள்ளையை பகைத்து என்ன செய்வது.....?',என்ற மனநிலையில் இருந்தனர்.
மணமக்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஆதித்யனும்....நித்திலாவும் எடுத்துக் கொள்ள....லட்சுமியும்...மாணிக்கமும் முன்னே சென்று வீட்டில் ஆக வேண்டியதைக் கவனித்தனர்.அவர்களைப் பொறுத்தவரை கௌதமும் அவர்களுக்கு ஒரு மகனே.....!எனவே....விருப்பமுடன் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.
தாத்தாவும்....பாட்டியும் அலுப்பு காரணமாக ஓய்வெடுக்க வீட்டிற்குச் சென்று விட்டனர்.மண்டபத்தில் இருக்கும் உறவினர்களுக்கு வண்டியை ஏற்பாடு செய்து...அவர்களை கௌதமின் வீட்டிற்கு அனுப்பி விட்டு....ஆதித்யன்..நித்திலா...மற்றும் கெளதம்..சுமித்ரா ஜோடிகள்...ஆதித்யனின் காரில் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
மண்டபத்தைக் காலி செய்யும் பொறுப்பை பாலா எடுத்துக் கொண்டான்....!'உன் காதலை மறந்து விடு...!நித்திலா....இன்னொருவனுக்கு சொந்தமானவள்....!' என்று மூளை கட்டளையிட்டாலும்.....காதல் கொண்ட மனம்....நாய்க்குட்டியாய் அவள் காதலை வேண்டி...அவள் காலடியில் மண்டியிடத்தான் செய்தது....!
அதிலும்....ஆதித்யனை நோக்கி அவள் வீசிய காதல் பார்வைகள்....பதிலுக்கு அவன் கண்களில் தெறித்த மின்னல்....அவனுடைய குடும்பத்தினரிடம் சகஜமாய் இவள் பழகிய விதம்....என அனைத்தையும் பார்த்தவனின் மனம் ஊமையாய் கதறித் துடித்துக் கண்ணீர் வடித்தது....!
அவளுக்கு முன்னால் இயல்பாய் நடமாட முடியாமல்...தவித்துக் கொண்டிருந்தவனிடம் வந்து..'சுமித்ரா வீட்டிற்குச் செல்லலாம்....!' என்று நித்திலா அழைத்தாள்.
இதற்கு மேல்...அவள் இருக்கும் இடத்தில் இருந்தால்....'தன்னை மீறி ஏதேனும் உளறி விடுவோம்....!' என்ற பயத்தில்...அவசர அவசரமாக மண்டப வேலையை எடுத்துக் கொண்டான்.
மண்டபத்தைக் காலி செய்யும் போது....நம் ஆட்களில் யாரேனும் ஒருவர் இருக்க வேண்டும் என்ற காரணத்தால்....நித்திலாவும் அவனை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.
" வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வாம்மா.....!",மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற லட்சுமி....சுமித்ராவிடம் கூறினார்.
இதழ்களில் தவழ்ந்த புன்னகையோடு....விழி முழுக்க கனவுகளை சுமந்து கொண்டு....நாணத்தில் அந்தி வானமாய் கன்னங்கள் சிவந்திருக்க....தன் மணாளனின் கரம் பற்றிக் கொண்டு....தாங்கள் வாழப் போகும் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள் சுமித்ரா.
"வெல்கம் டூ ஹோம் அண்ணி....!",ஆர்பாட்டமாய் அவனைக் கட்டிக் கொண்டு குதித்தாள் திவ்யா.தன் அண்ணனின் திருமணத்தில் அவள் மனம் நிறைந்திருந்தது.சுமித்ராவின் குணமும்....அவள் பழகும் விதமும் அவளைக் கவர்ந்திருந்தது....!எனவே...மகிழ்ச்சியோடு வளைய வந்து கொண்டிருந்தாள்.
அதன் பிறகு....மணமக்களுக்கு பால்...பழம் கொடுப்பது...மோதிரம் எடுப்பது என பல சடங்குகள் நடைபெற....நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது.இந்த சடங்குகளையெல்லாம் முடித்து விட்டு....சுமித்ராவின் குடும்பம் கிளம்பி விட...தன் தாயின் பரிவை நினைத்து மீண்டும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் அவள்....!அவளருகில் அமர்ந்து இதமாகப் பேசியபடியே அவள் மனநிலையை மாற்றினான் கெளதம்.
இரவு நெருங்க....முதலிரவுக்கான ஏற்பாடுகளைத் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி....ஆதித்யன் தனது அம்மாவையும் அப்பாவையும் அனுப்பி வைத்தான்.ஏற்கனவே....கௌதமின் உறவினர்கள் கிளம்பியிருந்தனர்.
போகும் போது...திவ்யாவை தங்களுடன் அழைத்துக் கொண்டார் லட்சுமி.கௌதம் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் சமயங்களில்....அவள் ஆதித்யன் வீட்டில்தான் தங்குவாள்.கௌதமைப் போல்...ஆதித்யனும் அவளிடம் பாசமான ஒரு அண்ணனாக நடந்து கொள்வான்.....!அதிலும்...அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதால்....திவ்யாவின் மேல் அவனுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு...!
கௌதமும்...சுமித்ராவும் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.பூனை நடை நடந்து...அறைக்குள் நுழைந்த ஆதித்யன்...கதவை அழுந்த மூடித் தாளிட்டான்.மெத்தையில் மல்லிகைப் பூக்களைத் தூவிக் கொண்டிருந்த நித்திலா....தன் முதுகிற்குப் பின்னால் ஒலித்த கதவைத் தாளிடும் சப்தத்தைக் கேட்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்....!
அவளுக்குத் தெரியும்....அது ஆதித்யன் என்று....!காலையில் இருந்து அவனிடம் தனியாக அகப்படாமல் போக்குக் காட்டிக் கொண்டு....அவனை சீண்டி விட்டு இருக்கிறோம்....!இனி அவன் அமைதியாக இருக்க மாட்டான்...என்ற நினைவில் அவள் இதழ்களில் ரகசியப் புன்னகை ஒன்று உதித்தது....!
'இதோ....!இப்பொழுது வந்து விடுவான்....!வந்த உடனே என்னை அணைத்துக் கொள்வான்....!' இதயம் தடதடக்க....இமைகள் படபடக்க....அவனைத் திரும்பியும் பார்க்காமல் அப்படியே நின்றிருந்தாள் நித்திலா....!அவளுடைய எதிர்பார்ப்பை அவன் பொய்யாக்கவில்லை....!
வேகமாக அவளை நெருங்கியவன்....அதை விட வேகமாக அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்தான்.அவனுடைய உதடுகள் ஒரு வித வேகத்துடன் அவளது பின்னங்கழுத்தில் புதைந்தன....!இடையை வளைத்த அவனுடைய கரங்கள்....அழுத்தத்துடன் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டன....!
வேக வேகமாக வெளியேறிய அவனுடைய மூச்சுக்காற்றின் தாபத்தில்....அவள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தாள்....!என்ன அதிசயம்....!அவனுடைய மூச்சுக்காற்று அவளை சாம்பலாக்கியது என்றால்...அவன் பதித்த ஒவ்வொரு முத்தமும்....அவளைக் காதலுடன் உயிர்த்தெழச் செய்தது....!
"நமக்கு எப்போ டி....இந்த மாதிரி பர்ஸ்ட் நைட் நடக்கும்.....?",கேட்டவனின் உதடுகள் அவளது தோள்வளைவைப் பிடித்து செல்லமாகக் கடித்து வைத்தன.
"ம்....!நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்....!",கூறியவளின் குரல் மயக்கத்தில் தோய்ந்து வந்தது.
"ம்ஹீம்....!அது வரைக்கும்...ஐ காண்ட் வெயிட்.....!",அவனது விரல்கள் வழக்கம் போல் அவளது மேனியில் தனது ஊர்வலத்தை ஆரம்பிக்க...அவனது உதடுகளோ...அவளது வெற்று முதுகில் முத்தாரத்தை சூட்ட ஆரம்பித்தது....!
"வே...வேண்டாம்.....!",அவளது வாய் கூறியதே தவிர....அவளுடைய கரங்கள் அவனைத் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.மாறாக....அவளது உடல் பாகாய் குழைந்து அவன் கையில் உருகியது.
"பேபி.....!",காதல் போதை பித்துக் கொள்ளச் செய்ய...எதற்கு என்று தெரியாமலேயே....அவளை அழைத்தான் அந்த மாயக்காரன்.
"ம்.....!",ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக 'உம்' கொட்டினாள் அந்த மங்கை.
"பேபி.....!",அவன் மீண்டும் அழைக்க..
"ம்....!",மீண்டும் 'உம்' கொட்டினாள் அவள்.
"பேபி....!",
ம்....!",
"ஐ காண்ட் வெயிட் டில் அவர் மேரேஜ்.....!நம்ம பர்ஸ்ட் நைட்டை மட்டும் இப்பவே கொண்டாடலாமா....?",அவன் கரங்கள் சும்மாவும் இருக்காமல்....அவள் மேனியில் எல்லைகளை கடக்க ஆரம்பிக்க.....பட்டென்று தன் உணர்வுக்கு வந்தவள்....அவன் கைகளுக்கு உள்ளேயே சுழன்று திரும்பி....அவன் முகத்தைப் பார்த்தாள்.
தன் கழுத்தில் பதியப் போன அவனது முகத்தைப் பிடித்து நிமிர்த்தி....வலுக்கட்டாயமாக தன்னைப் பார்க்க வைத்தவள்....அவன் கண்களுக்குள் காதல் பார்வை ஒன்றை செலுத்தினாள்.அவள் காதலில் கட்டுண்டவனாய்....அவள் விழிகளையே பார்த்திருந்தான் அவன்....!அவள் இம்மியளவும் தன் பார்வையை அவன் கண்களை விட்டு விலக்கவில்லை....!
எவ்வளவு நேரம்...அவள் விழிச் சிறைக்குள் குடியிருந்தானோ....தெரியவில்லை...!சன்னலில் வழியாக வந்த சத்தத்தில்....தன்னை சுதாரித்துக் கொண்டு...அவளை அமைதியாக அணைத்துக் கொண்டான்.
"ம்ப்ச்.....!ஏண்டி இப்போ வேண்டாம்ங்கிற.....?",அணைத்தவன் சும்மாவும் இருக்காமல்...அபத்தமாய் கேள்வியொன்றை வேறு கேட்டு வைத்தான்....!அவளுக்கு சிரிப்புதான் வந்தது....!
"ஏன்னா....நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல.....!",தன் தோளில் முகம் புதைத்திருந்தவனின் தலைமுடியை மென்மையாக கோதி விட்டவாறு கூறினாள் அவள்.
"அதுதான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சே....?அப்புறம் ஏன் மறுக்கிற.....?",அவன் அந்த செயின் விஷயத்தைக் குறிப்பிட்டான்.
"நம்மை பொறுத்த வரைக்கும்....நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுதான்....!.ஆனால்...ஊரறிய நீங்க இன்னும் என் கழுத்துல தாலி கட்டலையே.....?",
"ம்ப்ச்....!இப்பவே வா.....!உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசலாம்.....!நாளைக்கே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்....!",சிறு குழந்தையின் பிடிவாதம் அவன் குரலில்.
இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவள்,"இப்படி அவசர அவசரமா நம்ம கல்யாணம் நடந்தால் நல்லாவா இருக்கும்....?நம்மளுடைய கல்யாணம்....இந்த ஊரையே கூட்டி....ரொம்ப பிரம்மாண்டமா நடக்க வேண்டாமா....?தேவலோகமே தோற்றுப் போகிற மாதிரி அலங்காரத்துல...நமக்கு கல்யாணம் நடக்கப் போகிற மண்டபம் ஜொலிக்க வேண்டாமா.....?இது எல்லாத்துக்கும் மேல...நம்ம அத்தனை சொந்தக்காரங்களும் கூடியிருக்க...நம்ம நண்பர்களோட கிண்டல் பேச்சுக்கு .நடுவுல...மேள தாளம் முழங்க நம்ம கல்யாணம் நடக்க வேண்டாமா.....?",மிக அழகாய் அவனைத் திசை திருப்பினாள் அவள்...!
கண்களில் கனவு மின்ன பேசியவளுக்கு அப்பொழுது தெரியவில்லை.....!இது எதுவும் இல்லாமல்...இவ்வளவு ஏன்....அவளது விருப்பமே இல்லாமல்....அவளது கல்யாணம் நடந்தேறப் போகிறது...அதுவும் கூடிய விரைவில் என்று....!
குழந்தையிடம் மிட்டாய் ஆசை காட்டி சமாதானப்படுத்துவது போல்....அவனிடம் திருமணக் கனவுகளைக் கூறி சமாதானப்படுத்தினாள் அவள்....!
அவனா அதற்கெல்லாம் அடங்குபவன்....?அவள் கூறியதற்கெல்லாம் சமர்த்துப் பிள்ளையாய் 'உம்' கொட்டி விட்டு....அவள் முடித்ததும்..
"ஆனால்...எனக்கு இப்பவே நீ வேணும் போல இருக்கே....!",என்றான் ஏக்கமாக.
அவனுடைய அந்த ஏக்கத்திலும்...தாபத்திலும் அவளது கன்னி மனம் கரைந்தது என்னவோ உண்மைதான்.....!ஆனால்....அதற்காக அவன் கைகளில் இப்பொழுதே தன்னைத் தந்துவிட முடியாதல்லவா....?
தன்னவனிடம் சரணடையத் துடித்த உடலையும்....மனதையும் முயன்று அடக்கியபடி...அவன் முகத்தைத் தன் தோளில் இருந்து நிமிர்த்தியவள்,"எடுத்துக்கலாம்....!ஆனால்....நம்ம கல்யாணத்துக்குப் பிறகு....!",கூறியவளுக்கு அப்பொழுது தெரியவில்லை....தங்களது திருமணம் முடிந்தும் அவள்....அவனுக்குத் தன்னைத் தரப் போவதில்லை என்று....!
மென்மையாக உரைத்தவள்....அவன் மூக்கைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து....அவன் நெற்றியில் 'நச்'சென்று முத்தம் பதித்தாள்....காதலாக....!
அந்த ஒற்றை முத்தத்தில்....அவனுடைய தாபம் அடங்கி விடுமா...?பொங்கி எழுந்து அவனை எரித்த மோகத் தீ குளிர்ந்து விடுமா.....?குளிர்ந்தது.....!அவள்...அவன் நெற்றியில் பதித்த அந்த ஒற்றை முத்தத்திற்குள்....பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த அவனுடைய உணர்வுகள் வாலைச் சுருட்டிக் கொண்டு அடங்கின.....!மென்மையாய்....மிக மென்மையாய் அவளை அணைத்துக் கொண்ட அவனுடைய அணைப்பில்....அவளுடைய கன்னி மனதின் சலனங்கள் அணைந்தன.....!
இதுதான் காதல்.....!காதலிப்பது பெரிதல்ல.....!வரைமுறை தாண்டாமல் அந்தக் காதலை கல்யாணம் வரை நடத்திச் செல்வதில்தான்....அந்தக் காதலின் வெற்றியே அடங்கியுள்ளது....!அது....காதலுக்கு காதலர்கள் செய்யும் மரியாதை.....!இந்தக் காதலுக்கு...எல்லையைக் கடக்காமல்....எல்லையைக் கடக்கவும் தெரியும்....!உரிமைகளை மீறாமல்....உணர்வுகளை வெற்றி கொள்ளவும் தெரியும்....!
கண்ணுக்குத் தெரியாத பண்பாடு...சமூகம்....கலாச்சாரம் போன்ற உணர்வுகளால் நெய்யப்பட்டவர்கள் நாம்.....!அந்த உணர்வுகளை அழகாக கையாளுவதில்தான் நம் நாகரிகம் அடங்கியுள்ளது.....!
நித்திலாவிற்கு நன்கு தெரியும்....!ஆதித்யனுடைய பலவீனம்....தன்னைப் புடவையில் பார்ப்பது என்று.....!அவனது பலவீனத்தை தன்னுடைய காதலால் சரி செய்து....மிக அழகாக அவனுடைய உணர்வுகளை வெல்வதற்குத் துணையாய் அவனுடன் கரம் கோர்த்தாள்....அவனுடைய சகதர்மிணி....!
காதலில் இந்தப் பொறுமை மிக அவசியம்.....!காதலில் அனைத்துமே ஒரு வித அழகுதானே....!
ஒருவாறாக....கெளதம்...சுமித்ராவிற்காக அறையை அலங்கரித்து விட்டு இருவரும் வெளியே வரும் போது வெகுநேரம் ஆகியிருந்தது.
வெளியே வந்த ஆதித்யனை நோக்கி....அனல் பார்வை ஒன்றை வீசிய கெளதம்,"டேய்....!பர்ஸ்ட் நைட் எங்களுக்குத்தான்.....!உங்களுக்கு இல்ல....!ஞாபகம் இருக்கா....?நானும் நீ இப்போ வெளியே வருவ...அப்போ வெளியே வருவேன்னு பார்த்துட்டே இருக்கேன்....!நீ வந்த பாடா இல்லை....!",படபடவென்று அவன் பொரிய..
"கூல்....கூல் டா மச்சான்...!உனக்காக ரூமை ரெடி பண்றதுல கொஞ்சம் லேட் ஆகிடுச்சு....!",கௌதமின் தோள் மீது கை போட்டபடியே ஆதித்யன் அவனை சமாதானப்படுத்த..
"பார்த்து டா....!ரூமை ரெடி பண்றேன்னு...எனக்கு ஒரு மருமகனையோ...மருமகளையோ ரெடி பண்ணிடாதே....!அப்புறம் மச்சான்....நான் சொன்ன மாதிரி மதுரை மல்லியை வைச்சு அலங்காரம் பண்ணியிருக்கிறயா....?",கெளதம் கண்ணடிக்க..
இவர்களது பேச்சில் பெண்கள் இருவரும் வெட்கப் புன்னகையுடன் சமையலறைக்குள் ஓடி விட்டனர்.
"அதெல்லாம்....நாலு கூடையை கொட்டி வைச்சிருக்கிறேன்....!",பதிலுக்கு குறும்பாக புன்னகைத்தான் ஆதித்யன்.
நேரமாவதை உணர்ந்து ஆதித்யனும்....நித்திலாவும் மணமக்களுக்குத் தனிமையை அளித்து விட்டுக் கிளம்பினர்.
"சரி டா மச்சான்.....!நாங்க கிளம்பறோம்.....!ஹேப்பி மேரிட் லைஃப்.......!",நண்பனைக் கட்டிப்பிடித்து தன் வாழ்த்தைப் பகிர்ந்தவன்..
சுமித்ராவிடம் திரும்பி,"வாழ்த்துக்கள் ம்மா....!அப்புறம் இவன் ஏதாவது குறும்பு பண்ணினா சொல்லு....அண்ணன் நான் பார்த்துகிறேன்....!",என்று புன்னகைக்க..
"தேங்க்ஸ் அண்ணா....!",அழகாய் முறுவலித்தாள் சுமித்ரா.
"சரி...சரி....!இப்படியே பேசிக்கிட்டே நிற்காதீங்க.....!நாம கிளம்பலாம்...!பை அண்ணா....!வர்றோம் சுமி....!",தோழியைக் கட்டியணைத்து விடை பெற்றாள் நித்திலா.
சுமித்ராவிடம் அவ்வளவு நேரம் குடியிருந்த தைரியம் விடைபெற்று பறந்து விட....ஒரு வித பதட்டம் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டது....!
முதல் இரவு.....!திருமணமான தம்பதிகளுக்கான ஒரு சுப இரவு....!ஒற்றை வார்த்தையில் வர்ணிக்க கூடியதா....இந்த முதல் இரவு.....!இது அள்ளித் தெளிக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா....என்ன.....?என்னவென்று சொல்வது.....இந்த இரவை....!
ஆயிரமாயிரம் பதட்டம்....லட்சம் லட்சமாய் தோன்றும் நாணம்....கோடி கோடியான தயக்கம்....என் அனைத்தும் உணர்வுகளின் சங்கமம் தான் இந்த முதல் இரவு....!அது மட்டுமா.....!லட்சம் கோடி பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் அணிவகுத்து இதயத்திற்குள் போர் தொடுப்பது இந்த முதலிரவில் தான்.....!காமன்...தன் மலர்க்கணையை காதல் என்னும் தேனில் நனைத்து....அம்பெய்வது இந்த முதலிரவில்தான்.....!
அது மட்டுமல்ல....!காதல்...தன் மொத்த பரிவாரங்களுடன் காதலர்கள் மேல் தன் ஆட்சியை நிலைநிறுத்துவதும்.....இந்த முதல் இரவில்தான்.....!
தன் உயிரை....அவள் உயிராய் மாற்றும் இந்த முதல் இரவு....!தன் சுவாசத்தை அவன் இதயத்துடிப்பாய் மாற்றும் இந்த முதல் இரவு.....!
இருவரையும் வழியனுப்பி விட்டு....ஹால் கதவை அடைத்துத் தாளிட்டபடி திரும்பிய கௌதமின் விழிகளில்....மருண்ட விழிகளோடும்....படபடக்கும் இதழ்களோடும் நின்றிருந்த அவனது காதல் மனைவி வந்து விழுந்தாள்....!
புதிதாகப் பிறந்த வேட்கையோடு....மோகமும் போட்டி போட.....விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டு அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான் கெளதம்.இமைகள் படபடக்க பின்னால் நகர்ந்தாள் அவள்.
'எங்கே...துடிக்கும் இதயம் வெளியே வந்து விழுந்து விடுமோ....?' என்று எண்ணும் அளவிற்கு....அவளின் இதயம் வேகவேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது...!கணவனின் தாபப் பார்வையில்....மென்மையான பெண்ணவளின் தேகத்தில் பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது....!
இம்மியளவும் அவள் விழிகளை விட்டுத் தன் பார்வையை அகற்றாமல்....அவளை நெருங்கினான் கெளதம்....!மேனி படபடக்க...பின்னால் அடி எடுத்து வைத்தாள் சுமித்ரா....!
அவன் நெருங்க...இவள் விலக...அவன் முன்னேற....இவள் பின்னேற...என ஒரு அழகான கண்ணாம்பூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது அங்கே....!
'வாடி....!' ஒற்றை விரலை நீட்டி கண்ணசைவில் அவன்...அவளை அழைக்க..
'ம்ஹீம்....!' தலையாட்டியபடி பின்னால் நகர்ந்தாள் அவள்.
அவளை எட்டிப் பிடித்து விடும் நோக்கத்தோடு....அவன் வேகமாய் அடி எடுத்து வைக்க....அவளோ....அவன் கைக்கு சிக்காது....அவனைப் பார்த்தபடியே வேக வேகமாக பின்னால் நகர்ந்தாள்.
"ஏய்ய்....!என்கிட்டேயே விளையாடறியா டி...என் செல்ல பொண்டாட்டி....!",செல்லமாக மிரட்டியபடி அவன் நெருங்க....அவளோ....சோபாவிற்கு பின்னால் சென்று நின்று கொண்டு...'வர மாட்டேன்....!' என்று தலையாட்டினாள்.
இவன் அந்தப் பக்கம் வந்தால்....அவள் இந்த பக்கம் ஓடுவதும்...அவன் இந்தப் பக்கம் வந்தால்...இவள் அந்தப் பக்கம் தாவுவதுமாய்...கபடி விளையாடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் கிளிகள்...!
கட்டிலில் சடுகுடு ஆட வேண்டிய இருவரும்....நடு வீட்டில் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருக்க....இவர்கள் இருவரையும் இணைத்து வைத்த காதலோ....'இதுக ரெண்டும் சரிப்பட்டு வராதுங்க....!சின்னக் குழந்தை மாதிரி ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்குதுங்க....!' புலம்பியபடியே தலையிலடித்துக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தது.
'வரமாட்டே.....?' கண்ணசைவிலேயே அவன் மிரட்ட..
"ம்ஹீம்....!வர மாட்டேன்....!",செல்லமாய் தலையாட்டினாள் அவனுடைய குட்டி ராட்சசி....!
இமைக்காது அவளையே பார்த்தபடி....சோபாவுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தவளை அவன் நெருங்க...அவனது பார்வையில் ஒரு கணம் சிலையாய் சமைந்தவள்....பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு...பால்கனியை நோக்கி ஓடினாள்.
வேக எட்டுக்களுடன் அவள் பின்னாலேயே விரைந்தவனின் கைகளில் அவளுடைய புடவை முந்தானை வந்து சிக்கியது.
தனது முந்தானை அவன் கரங்களில் சிக்கவும்....சட்டென்று நின்று விட்டாள் சுமித்ரா.
"மாட்டினயா டி....!",அவன் குறும்பாய் புருவத்தை உயர்த்த..
அவளோ...."வி...விடுங்க...!",என்று வார்த்தைகளுக்குத் திண்டாடினாள்.
"ஏதோ போட்டியில கலந்துக்கிட்டவ மாதிரி அந்த ஓட்டம் ஓடின....?இப்போ ஓடு டி பார்க்கலாம்.....!",கேலியாய் அவன் உதட்டை மடித்து வளைக்க...அவள் இதழ்களைக் கடித்துக் கொண்டு அப்படியே நின்றாள்.
'எப்படி ஓடுவதாம்.....?என் முந்தானைதான் இவன் கையில் சிக்கியிருக்குதே.....!கள்ளன்....!' அவள் முகத்தில் ரகசியப் புன்னகை மலர்ந்தது.
அவன்....தன் கையில் சிக்கியிருந்த முந்தானையைப் பிடித்து இழுக்க....அவன் மேல் பூமாலையாய் வந்து விழுந்தாள் சுமித்ரா.தன் நெஞ்சில் சாய்ந்தவளை அப்படியே அலேக்காகத் தூக்கியவன்....படுக்கையறையை நோக்கி நடந்தான்....!
"என்...என்ன....?",அவள் திக்கித் திணற...அவன் எங்கே அதையெல்லாம் கண்டு கொண்டான்....!அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தவன்...'கதவை மூடு டி.....!' கண்களாலேயே அவளுக்கு உத்தரவிட....மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல்....அவன் கையில் இருந்தவாறே கதவைத் தாளிட்டாள்.
பூ மஞ்சமா......! என வியக்கும்படி வெறும் மலர்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டிருந்தது அவர்களுக்கான மஞ்சம்....!
மென்மையாய் அவளைக் கட்டிலில் கிடத்தியவன்....அப்படியே அவள் மேல் சரிய,"வே...வேண்டாம்....!",அவளிடமிருந்து தடுமாறி வந்தன வார்த்தைகள்.
"என்ன வேண்டாம்.....?",கேட்டவனின் உதடுகள் அவள் முகத்தில் படர்ந்து தன் முத்த யுத்தத்தை ஆரம்பித்தன.
"இது...இது வேண்டாம்....!",அவனது முத்த யுத்தத்திற்கு எதிர் தாக்குதலை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் அந்தப் பேதை....!
"சரி....வேண்டாம்....!",என்றவனின் உதடுகள் அவள் முகத்தை விட்டு விட்டு....கழுத்து வளைவில் புதைய ஆரம்பிக்க....அவன் கரங்களோ...அவளது வெற்று இடையை வருடி குறுகுறுப்பு மூட்டிக் கொண்டிருந்தன...!
தன்னவனுடைய நெருக்கத்தையும்....அவன் நடத்திய முத்த ஊர்வலத்தையும் தாங்க முடியாமல் கூசிச் சிலிர்த்தது அந்தப் பெண்மை....!
"இ...இது வே...வேண்டாம்.....!",மந்திரம் போல் அவள் இதழ்கள் மீண்டும் அதையே முணுமுணுக்க..
"சரி...வேண்டாம்....!",அவனும் கிளிப்பிள்ளையாய் மாறி மீண்டும் சொன்னதையே சொன்னான்.இம்முறை அந்தக் கள்வனின் உதடுகள் அவள் நெஞ்சுக்குழியில் புதைய முயல....அவள் அணிந்திருந்த நகைகள் அதற்கு பெரும் தடையாய் இருந்தன....!
"ப்ச்....!",என்ற சலிப்புடன்....அவன் கரங்கள் அந்த நகைகளை விலக்க ஆரம்பிக்க....அவனது முயற்சியில் சட்டென்று தன்னை மீட்டெடுத்தவள்....அவன் கரங்களைத் தடுக்க முயன்றபடி..
"இ...இது வேண்டாம்....!",என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.இம்முறை வார்த்தைகளில் அவ்வளவு பலவீனம்....!
"ம்ம்....இது வேண்டாம் ஹனி....!",முணுமுணுத்தவனின் கரங்கள் வேக வேகமாய் தன் தடையை தகர்க்க முயன்றன....!
ஒரு பெருமூச்சுடன் தன் மேல் படர்ந்திருந்தவனை விலக்கித் தள்ளியவள்....தள்ளிய வேகத்தோடு அவசர அவசரமாக எழுந்து அமர்ந்து கொண்டாள்.
அவ்வளவு நேரம் இருந்த சுகந்தம் பறிக்கப் பட்டதில்...அவன் முகத்தில் ஏமாற்றம் கவிழ்ந்தது.
"ம்ப்ச்....!ஏண்டி....?",சலிப்புடன் வினவியபடியே எழுந்து அமர்ந்தான் அவன்.
"இ...இது வேண்டாம்....!",அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி...தன் கையில் அகப்பட்ட ரோஜாப் பூவை பார்த்தவாறு அவள் கூற..
"அதையேதான் ஹனி...நானும் சொல்றேன்.....!இது வேண்டாம்....!",ஒரு மார்க்கமாக உரைத்தவனின் பார்வை....'எது வேண்டாம்....?' என்று அவள் மேனியில் படர்ந்து பரவி மேய்ந்து....தெள்ளத் தெளிவாக உரைக்க..
கண்டபடி அத்து மீறிய அவனது பார்வையில்....விலகியிருந்த தனது புடவையை...அவசர அவசரமாக சரி செய்து கொண்டாள் சுமித்ரா.
அவளது பாதுகாப்பு ஏற்பாட்டை கவனித்தவன்,"அடேயப்பா....!",என புருவத்தை உயர்த்தி...உதட்டை வளைத்து சிரிக்க....அவளுக்கு வெட்கம் பிடுங்கித் .தின்றது.
நாணம் மேலிட....தலை குனிந்திருந்தவளின் கரங்களில் மெத்தையில் கிடந்த மல்லிகைப் பூக்கள் சிக்கி சின்னாபின்னமாகின....!
"இந்தப் பூக்கள் இப்படியா கசங்கணும்....?",ஒரு மாதிரியாக உரைத்தவன்...அவளருகில் நெருங்கி அமர...அவளோ...கவனமாகத் தள்ளி அமர்ந்தாள்.
"ப்ச்...!இப்போ எதுக்கு டி தள்ளித் தள்ளிப் போற....?",எரிச்சல் பட்டுக் கத்தினான் அவன்.
அவனும்தான் என்ன செய்வான்....?அது முதலிரவு அறை....!விடிய விடிய இருவரும் விழித்துக் கிடந்து....ஒருவராய் மற்றொருவர் மாற வேண்டிய அறை.....!அவ்வளவு காலம்...காதலர்களாய் விரதம் காத்தவர்கள்....ஓருயிர் ஈருடலாய் மாறி....பிரம்மச்சரியத்திற்கு முடிவு கட்டும் அறை....!அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு....அவன் அருகில் வர மாட்டேன்...என்று முரண்டு பிடித்தால்...அவனுக்கு கோபம் வருமா....?வராதா....?
இதை எதையும் அறியாமல்,"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.....!"என்று ஆரம்பித்தாள் சுமித்ரா.
"என்னது....?பேசணுமா....?",அவன் அலறிய அலறலில் திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்தவள்,"எதுக்கு இப்படி கத்தறீங்க.....?",என்றவாறு அவனை முறைத்தாள்.
"ஏய்ய்....!இது பர்ஸ்ட் நைட் ரூம் டி....!இங்கே வந்து சட்டமா உட்கார்ந்துக்கிட்டு....'நான் உங்ககிட்ட பேசணும்...'ன்னு சொல்ற....!இங்கே நோ பேச்சு...!ஒன்லி ஆக்சன்....!",கூறியபடியே அவன்...அவள் கையைப் பற்றி இழுக்க..
அவன் இழுத்த இழுப்பிற்கு வராமல்...பிடிவாதமாய் இருந்த இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருந்தவள்,"ப்ச்....!மாமா...!நான் உங்ககிட்ட பேசணும்.....!",சிறு கண்டிப்புடன் அவள் கூற..
"சரி....!சொல்லு....!",தன் விளையாட்டுத்தனத்தை கை விட்டவனாய்...அவன் அமைதியாய் அவள் முகம் பார்த்தான்.
"நமக்குள்ள...இப்போ எதுவும் வேண்டாம்....!இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு இதை வைச்சுக்கலாம்....!நான்...என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியுதா....?",நேரடியாக சொல்ல முடியாமல் அந்தப் பெண்மை தடுமாற..
அதை ரசித்துச் சிரித்தது அந்த ஆண்மை....!அவளது தடுமாற்றத்தை ரசித்தபடி,"புரியலையே ஹனி....!நீ என்ன சொல்ல வர்ற....?",அறியாக் குழந்தை போல் அவன் வினவ..
"அதுதான்....நாம....இப்படி...நமக்குள்ள.....",எப்படிக் கூறுவது என்று தெரியாமல் தடுமாற்றியபடியே அவன் முகத்தைப் பார்த்தவள்....அதில் இருந்த குறும்புப் புன்னகையை கண்டு கொண்டாள்.
"மாமா.....!விளையாடாதீங்க.....!",செல்லமாக சிணுங்கியபடி அவள்...அவனை முறைக்க..
"ஹா..ஹா....!ஒகே ஒகே ஹனி....!விளையாடலை.....!நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது....!ஆனால்...காரணம்.....?",அவன் புருவத்தை உயர்த்த..
"அதுவந்து....மாமா....திவ்யாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற வரைக்கும்....இதெல்லாம் வேண்டாமே.....?வயசுப் பொண்ணு வீட்டில இருக்கும் போது....நாம இப்படி இருக்கறது சரியில்லை....!இன்னைக்கு அவளை ஆதி அண்ணா வீட்டுக்கு அனுப்புனதே...எனக்கு ஒரு மாதிரி இருக்கு....!எல்லோருக்கும் முன்னாடி 'வேண்டாம்...'ன்னு மறுத்தால்...தேவையில்லாத கேள்விகள் வருமேன்னுதான் அமைதியா இருந்தேன்.....!",கூறியபடியே நிமிர்ந்தவள் அவனுடைய இமைக்காத பார்வையைக் கண்டு அப்படியே உறைந்தாள்.
"என்...என்ன....?",அவன் கண்களில் தெறித்து விழுந்த காதலில் ஸ்தம்பித்துப் போனவளாய் அவள் திணற..
அவள் கைகளோடு தனது கையை பிணைத்தவன்....அவள் புறங்கையில் முத்தமிட்டபடி,"தேங்க்ஸ் டி....!",என்றான் நெகிழ்ச்சியாக.
"ம்ப்ச்...!இது என்ன பழக்கம்....?'தேங்க்ஸ்' எல்லாம் சொல்லிக்கிட்டு.....?",இதமாய் அவள் கடிந்து கொள்ள..
"என் தங்கச்சியை நீ ஏத்துக்கிட்டதுக்கு....",அவன் ஏதோ கூற வரவும்...அவனைப் பேச விடாமல் தடுத்தவள்,
"அவளுக்கு நான் அண்ணிங்க....!'அண்ணி' அப்படிங்கிற உறவு அம்மாவுக்கு சமமானது....!நானும் அவளுக்கு ஒரு அம்மாவாகத்தான் இருக்க விரும்பறேன்.....!அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்ததுக்கு அப்புறம்....நாம இதைப் பத்தி யோசிக்கலாமே.....?இதுல...உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையே.....?",
'எங்கே தனது மறுப்பு அவனைக் காயப்படுத்தி விடுமோ....?' என்று தயங்கியபடியே கேட்டவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்..
"சேச்சே....!எனக்கு எந்த வருத்தமும் இல்லை டா....!நீ என் பக்கத்துல...என் கையணைவில இருக்கிறதே எனக்குப் போதும்.....!இன்னும் கொஞ்ச நாள் காதலர்களா இருப்போமே.....!",காதலுடன் அவன் கூற..
"எனக்குத் தெரியும்...என் மாமா என்னை புரிஞ்சுக்குவாருன்னு....!",என்றபடி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள் அவள்.
"சரி மாமா...!தூங்கலாமா.....?காலையில இருந்து கல்யாண அலைச்சல்.... ஒரே அலுப்பா இருக்கு....!",சோம்பல் முறித்தபடியே அவள் படுத்து விட....இடையோடு அவளைக் கட்டிக் கொண்டு சுகமாய் உறங்கிப் போனான் கெளதம்.
இருவரும் காத்திருக்க முடிவு செய்தனர்.....!காத்திருத்தலின் சுகம் அலாதியானது....!அதிலும்...காதலில் காத்திருத்தல் கோடி சுகமானது....!
அகம் தொட வருவான்...!!!
கருத்துகள்
கருத்துரையிடுக