எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 54

 அத்தியாயம் 54 :

 

ஒரு வழியாக...அழுகைகளுக்கும் வலிகளுக்கும்...காதலுக்கும் மத்தியில் திருமண நாள் அழகாக விடிந்தது. வெகு நேரம் தனக்குள் நடந்த போராட்டங்களில் சோர்வுற்றவளாய்...நள்ளிரவிற்கு மேல்தான் உறங்க ஆரம்பித்தாள் நித்திலா.

 

ஆதவனின் கதிர்கள் எட்டிப் பார்த்திராத அதிகாலை வேளையில்...நித்திலாவின் அறைக்குள் நுழைந்த ஆதித்யன்...அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன்னவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

நேரமாவதை உணர்ந்து அவளை மெதுவாக எழுப்பினான்.நேற்று இரவில் மனதில் இருந்த கோபம்...வலி என அனைத்தும் மறந்து...'இன்று தங்களுக்குத் திருமணம்...!',என்ற உற்சாகம் மட்டுமே நிறைந்திருந்தது.

 

"பேபி....!",அவன் மெதுவாய் அழைக்க..

 

அவனது பேபியோ,"ம்...!",என்று சிணுங்கியபடி அருகில் இருந்த தலையணையைக் கட்டிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

 

அவளது செய்கையில் தனக்குள் புன்னகைத்தபடியே....மீண்டும்,"பேபி....!",என்று அழைக்க..

 

இம்முறையும்,"ம்ம்....!",என்று சிணுங்கினாளே ஒழிய கண்களைத் திறக்கவில்லை.

 

அந்தச் செல்ல சிணுங்களில்...மெல்ல தொலைந்து போனவன்...அவள் முகத்தருகே குனிந்து....அவளது காது மடலில் உதட்டைக் குவித்து "உஃப்",என்று ஊத..

 

அவள் முகத்தில் மந்தகாசப் புன்னகை விரிந்தது.ஆனால்...விழிக்கவில்லை.

 

"என் செல்ல பேபி...!",என்று கொஞ்சியவன் மேலும் குனிந்து...அவளது காது மடலில் தனது மீசையால் குறுகுறுப்பு மூட்ட...ஏதோ வித்தியாசத்தில் கூசி சிலிர்த்து தன் கண்களைத் திறந்தாள் அவள்.

 

விழித்தவளுக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை.தனக்கு வெகு அருகில் தெரிந்த ஆதித்யனின் முகத்தைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.

 

'என்ன...?',என்பதாய் அவன் புருவத்தை உயர்த்த..

 

'ஒண்ணுமில்லை...!',என்பதாய் தலையசைத்தாள் அவள்.

 

'ஒண்ணுமே இல்லையா....?',அவன் தலையை ஆட்டி அவளை கேள்வியாய் நோக்க..

 

"ப்ச்...!",என்று சலித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நித்திலா.

 

அவள் இருபுறமும் கையூன்றி அவள் முகத்தருகே குனிந்திருந்தவன்,"ஏண்டி முகத்தைத் திருப்பிக்கற....?",என்று வினவினான்.

 

அவன் கேட்டதில் அவள்...அவனை நோக்கி இமைக்காத பார்வையை வீசி வைத்தாள்.'காரணம் உனக்குத் தெரியாதா...?',என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது.

 

அதைக் கவனித்தும் கண்டு கொள்ளாமல் விட்டவன்,"ஒகே பேபி....!எழுந்து போய் குளிச்சு தயாராகு....!இன்னும் ஒரு மணி நேரத்துல நாம கோவில்ல இருக்கணும்...!",அவளிடம் இருந்து விலகியபடி கூறியவனின் குரலில் அழுத்தம் இருந்தது.

 

மெல்ல எழுந்து அமர்ந்தவள்....கடைசி முயற்சியாக அவனிடம் சொல்லிப் பார்ப்போம் என்ற எண்ணத்துடன்,"ஆது....!",என்றழைக்க..

 

அவள் குரலில் இருந்தே அவள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவன்,"உனக்கான முகூர்த்தப் புடவை...நகைகள் எல்லாம் தயாரா இருக்கு...!நீயே கிளம்பிடுவியா....?இல்ல...பார்லர்ல இருந்து வர சொல்லட்டுமா.....?",அவளது கலக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாய் வினவினான்.

 

"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்....!",அவள் வெடிக்க..

 

"அப்போ நீயே கிளம்பிடறியா....?ஒகே....?!நோ ப்ராப்ளம்...!",தோளைக் குலுக்கியபடி அவன் வெளியேறப் போக...அவசர அவசரமாக அவனைத் தடுத்தாள் அவள்.

 

"ப்ளீஸ்....!இ...இந்தக் கல்யாணம் வேண்டாமே....!",கண்ணீர் வழிய மீண்டும் அவள் பழைய பல்லவியையே ஆரம்பிக்க..

 

மனதில் சுள்ளென்று ஏற்பட்ட வலியையும்...சுறுசுறுவென்று ஏறிய கோபத்தையும் தன் விழிகளை அழுந்த மூடி கட்டுக்குள் கொண்டு வந்தவன்,"நீயே கிளம்பறியா....?இல்ல...நான் கிளம்ப வைக்கட்டுமா....?",பல்லைக் கடித்துக் கொண்டு வினவ..

 

அவனது கோபத்தில் அவள் பூந்துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தாள்.அவளை மிரட்டி அடிபணிய வைக்க வேண்டிய நிலையை அவன் அறவே வெறுத்தான்.

 

'வேறு வழி இல்லை....!',என அவனது காதல் மனம் அவனைத் தேற்ற...பழைய நிமிர்வோடு தான் கிளம்புவதற்காக தனது அறையை நோக்கி நடந்தான்.

 

'தன்னுடைய காதல் தோற்கவில்லை...!தான் உயிராய் விரும்பியவனையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளப் போகிறோம்....!',என்ற நிம்மதி உணர்வு நித்திலாவின் மனதில் ஒரு மூலையில் எழுந்தது என்னவோ உண்மைதான்....!ஆனால்...அந்த உணர்வையும் மீறி...பெற்றவர்களின் முகம் அவள் மனதில் தோன்றி...அவளது குற்ற உணர்வை அதிகப்படுத்தியது.

 

தனது கண்ணீரை நீரோடு சேர்த்து வெளியேற்றியவள்...ஒருவழியாக குளித்து முடித்து வெளியே வந்தாள்.

 

அரைமணி நேரம் கழித்து ஆதித்யன் வந்து பார்க்கும் போது...சொட்ட சொட்ட நனைந்த கூந்தலுடன்...நைட்டியோடு அமர்ந்திருந்தாள் நித்திலா.

 

"நினைச்சேன் டி....!இப்படித்தான் பித்துப் பிடிச்சவ மாதிரி உட்கார்ந்திருப்பேன்னு நினைச்சேன்...!அதே மாதிரியே உட்கார்ந்திருக்க....!",கோபமாக கத்தியபடி அவளருகே வந்து முரட்டுத்தனமாக அவளை எழுப்பியவன்..

 

"என்னைப் பார்த்தால் உனக்கு கேனையன் மாதிரி இருக்குதா டி....?நானும் நேத்திலிருந்து பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கிறேன்....!கேட்க மாட்டேன்னு அடம் பிடிச்சுக்கிட்டே இருக்க...?இங்கே பாரு...!சந்தோஷமா முகத்தை சிரிச்ச மாதிரி வைச்சுக்கிட்டு...என் கையால தாலி வாங்கறதுன்னா...என் கூட வா...!இல்லைன்னா...நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டி இருக்கும் நித்திலா...!",பல்லைக் கடித்துக் கொண்டு கர்ஜித்தான்.

 

அவனுடைய கர்ஜனையில் உடல் தடதடவென நடுங்க....மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் மருண்டு விழித்தாள் அவள்.

 

அவளது மருண்ட பார்வையில் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்,"என்னைக் கோபப்படுத்தி பார்க்காதே நிலா...!உன் சம்மதத்தோடதானே இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்....!உன்னை ஏதாவது விதத்துல நான் கட்டாயப்படுத்தினேனா....?ரெண்டு ஆப்ஷனை கொடுத்து ஏதாவது ஒண்ணை செலெக்ட் பண்ணுன்னுதானே சொன்னேன்....?ம்...?",நல்ல பிள்ளையாய் நியாயம் கேட்டான் அந்தக் காதல்காரன்.

 

அவள் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருக்கவும்,"அடம் பிடிக்காமல் சமர்த்தா கிளம்பி வா பேபி....!ஒகே...?",அவள் கன்னத்தை தட்டியபடி வெளியேறி விட்டான்.

 

அடுத்த சில மணி நேரங்களில் இயந்திரத்தனமாய் கிளம்பி தேவதையாய் தயாராகியிருந்தாள் நித்திலா.

 

மாதுளை முத்துக்கள் நிறத்திலான கனமான பட்டுப்புடைவையில்...உடல் முழுவதும் தங்க சரிகைகள் நெய்யப்பட்டிருந்தன.பார்டரில் திராட்சைக் கொடிகள் போல் சரிகைகள் பின்னப்பட்டிருக்க...முந்தானையில் தோகை விரித்தாடும் மயிலொன்று அழகிய சரிகைகளால் நெருக்கமாக நெய்யப்பட்டு...அட்டகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

அவளுடைய வெண்மையான நிறத்திற்கு...சிவப்பு நிற புடவை மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்தது.நகைப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.அத்தனையும் வைரமாக ஜொலித்துக் கொண்டிருந்தது...!மனதில் ஏறிய கனத்துடன் அனைத்தையும் மூடி வைத்து விட்டு...சோர்வாய் அமர்ந்து கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டும்...அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.'ஆதித்யன்தான் வந்திருப்பான்...!' என்று அசட்டையாய் அமர்ந்திருந்தவளின் தோளில் ஒரு மென் கரம் படிந்தது.பட்டென்று திரும்பிப் பார்த்தாள் நித்திலா.சுமித்ராதான் நின்றிருந்தாள்...!அதிகாலையிலேயே கௌதமிற்கு போன் செய்து அனைத்து விபரங்களையும் கூறி...சுமித்ராவை அழைத்துக் கொண்டு வரச் சொல்லியிருந்தான் ஆதித்யன்.

 

அவளைக் கண்டதும்...ஆதரவைத் தேடும் கொடியாய்...தோழியின் தோளில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள் நித்திலா.

 

"சுமி...!என் அம்மா அப்பாவுக்குத் தெரியாம என் கல்யாணம் நடக்கப் போகுது டி...!ஆது ஏன் இப்படி பண்றாரு....?",தன் முகம் பார்த்துக் கேள்வி கேட்டவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதி காத்தாள்.

 

மென்மையாகத் தோழியின் தலையை தடவிக் கொடுத்தபடி அமைதியாக நின்றிருந்தாள் சுமித்ரா.அவளது தோளில் சாய்ந்து தன் மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருந்தாள் நித்திலா.சிறிது நேரம் அவளை அழ விட்டவள்...பிறகு..

 

"அழாதே நித்தி....!முதல்ல அமைதியா இரு...!",சிறு கண்டிப்புடன் தன் தோளில் இருந்து அவள் தலையை நிமிர்த்தி...விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

 

"உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா நித்தி....?",அவளது விழிகளுக்குள் ஆழமாய் பார்த்தபடி சுமித்ரா வினவ...நித்திலா அவளைக் கேள்வியாய் நோக்கினாள்.

 

"உன் அப்பாவுடைய நம்பிக்கைக்குத் துரோகம் பண்ண மாட்டேன்னு இப்படித் துடிக்கறையே...அப்போ....ஆதி அண்ணாவுடைய காதலுக்கு நீ பண்ணிக்கிட்டு இருக்கறதுக்கு பேர் என்ன....?",சாட்டையடியாய் வந்து விழுந்த தோழியின் முதல் கேள்வியிலேயே ஆடிப் போனாள் நித்திலா.

 

"யோசிச்சுப் பாரு நித்தி....!உன் காதல் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியுமா....?இந்தக் கேள்வியை உன் மனசைப் பார்த்து நீயே கேட்டுக்கோ....!",

 

"அதுக்காக....என் அப்பா...அவருடைய நம்பிக்கையை என்னால கொல்ல முடியாது....!",கண்ணீருடன் தலையாட்டி மறுத்தாள் நித்திலா.

 

"உன் அப்பாவுடைய நம்பிக்கையை கொல்ல சொல்லி யாருடி சொன்னா...?சொல்லு...!யாரு சொன்னா....!",தோழியின் எதிர்க் கேள்வியில் மலங்க மலங்க விழித்தாள் நித்திலா.

 

"நீ போராடியிருக்கணும் நித்தி...!உன் காதலுக்காக நீ போராடியிருக்கணும்....!அதே சமயம்...உன் பெத்தவங்க உன் மேல வைச்சிருக்கிற நம்பிக்கைக்காகவும் போராடியிருக்கணும்....!காதலுக்காக உன்னைப் பெத்தவங்களையோ...இல்ல...உன் அம்மா அப்பாவுக்காக உன் காதலையோ நீ விட்டுக் கொடுக்க கூடாது நித்தி....!இதை கத்துக்காம...காதலை கத்துக்க ஆரம்பிச்சது தப்பு...!",சுமித்ராவின் உறுதியான பேச்சு....அந்தப் பாவையை ஸ்தம்பிக்க வைத்தது.

 

தன் மனப் போராட்டத்தைத் தாங்க முடியாதவளாய்,"இப்போ என்னை என்னதான் டி பண்ண சொல்ற....?",என்று கத்தினாள் அந்தப் பாவை.

 

"அது உனக்குத்தான் தெரியணும்....!",என்றபடி தோழியை உற்றுப் பார்த்தவள்..

 

"சரி...!அதை விடு...!ஆதி அண்ணா உன்னை ரெடி பண்ணிக் கூட்டிட்டு வரச் சொன்னாரு....!",கூறியபடியே அவளுக்கு நகைகளை அணிவிக்க ஆரம்பிக்க...ஒரு பதுமை போல் அமைதியாகத் தோழியை தடுக்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.

 

சுமித்ராவின் கை வண்ணத்தில்...தேவலோகத்து தாரகையாய் மிளிர்ந்தாள் நித்திலா.நெற்றிச் சுட்டியில் ஆரம்பித்து...இடையைத் தழுவியிருந்த ஒட்டியாணம் வரை அனைத்துமே வைரம்தான்....!வெண் பஞ்சு பாதங்களை மட்டும் இரட்டை அடுக்கு தங்கக் கொலுசு அலங்கரித்திருந்தது.

 

இடை வரை நீண்டிருந்த கூந்தலை தளரப் பின்னி...தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடியவள்...கரிய நிற புருவங்களுக்கு மத்தியில்...சிவப்பு நிற பொட்டை ஒட்ட வைத்தாள்.

 

"அழகா இருக்கே டி...!",தோழியை நெட்டி முறித்தவள் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

இவர்கள் வெளியே வரும் போது...அங்கே ஆதித்யன் தனது அறையில் கௌதமோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தான்.

 

"நீ பண்றது சரியில்லை ஆதி....!இப்படி யாருக்கும் சொல்லாம திருட்டுத்தனமா உன் கல்யாணம் நடக்கறதுல....எனக்கு விருப்பம் இல்லை....!",சற்று முறைப்புடன் வினவினான் கெளதம்.

 

"இது திருட்டுக் கல்யாணம் இல்லை....!",பட்டென்று ஆதித்யனிடம் இருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.

 

"சரி...!திருட்டுக் கல்யாணம் இல்ல....!ஆனால்...கட்டாயக் கல்யாணம் தானே...?நித்திலாவை வற்புறுத்திதானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கிற...?",

 

"நான் ஒண்ணும் அவளை வற்புறுத்தல...!அவளுக்கு ரெண்டு ஆப்ஷனை கொடுத்து...அதுல ஏதாவது ஒன்றைத்தான் சூஸ் பண்ணச் சொன்னேன்....!",வேகமாய் கூறினான் ஆதித்யன்.

 

"நீ எந்த லட்சணத்துல ஆப்ஷன் கொடுத்து கிழிச்சிருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்....!ஆப்ஷன் கொடுத்தானாம்....!ரெண்டு ஆப்ஷன்...!",நண்பனைப் பற்றி நன்கு அறிந்த நல்ல நண்பனாய் பல்லைக் கடித்தான் கெளதம்.

 

"இப்போ எதுக்குடா என்மேல கோபப்பட்டு கத்திக்கிட்டு இருக்க....?இந்த நிலைமைக்கு காரணம் அவள்தான்....!அவளாலதான்...இப்படி யாருமே இல்லாம அநாதை மாதிரி என் கல்யாணம் நடக்கப் போகுது....!",

 

"நீ நினைச்சிருந்தால் நித்திலாவுடைய நிலைமையை சரி பண்ணியிருக்கலாம்....!அவள் உன்னை வேண்டாம்ன்னு சொன்ன அடுத்த நொடி...உன் குடும்பத்தைக் கூட்டிக்கிட்டு போய் அவளைப் பொண்ணு கேட்டு இருக்கலாம்....!ஒரு வகையில...நித்திலாவுடைய குடும்பம் உன் குடும்பத்துக்கு உறவு முறைதானே....?அவங்க உன்னை 'வேண்டாம்'ன்னு மறுக்கறதுக்கு எந்த ஒரு காரணமும் இல்ல....!நீ ஏன் அவளைப் பொண்ணு கேட்கலை.....?",

 

"நான் எதுக்கு டா பொண்ணு கேட்கணும்....?சொல்லு....!நான் எதுக்கு பொண்ணு கேட்கணும்...?",விழிகள் சிவக்க கத்தியவனை ஒரு நிமிடம் வித்தியாசமாய் பார்த்து வைத்தான் கெளதம்.

 

"லூசாடா நீ....?உன் காதலியை நீ போய் பொண்ணு கேட்காம...உன் பக்கத்து வீட்டுக்காரனா போய் பொண்ணு கேட்பான்....?",புரியாத குரலில் கெளதம் வினவ...அவன் அதுக்கும் கோபப்பட்டான்.

 

"போயிடுவானா....?அப்படி எவனாவது அவளைப் பொண்ணுக் கேட்டுப் போனான்னு தெரிஞ்சுதுன்னா....அவனுடைய காலை வெட்டிப் போட்டுட்டு...நித்திலாவைத் தூக்கிட்டு வந்திருப்பேன்....!",

 

"ஆமா....!இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல....!",எரிச்சலுடன் கெளதம் முணுமுணுக்க..

 

"என்னடா....?வாய்க்குள்ள என்ன முணுமுணுக்கற....?",அவனது முணுமுணுப்பைக் கண்டு கொண்டு வினவினான் ஆதித்யன்.

 

"இப்போ மட்டும் என்ன வாழுதாம்..?அவளைத் தூக்கிட்டு வந்துதானே இங்கே அடைத்து வைச்சிருக்கிற....?",வேண்டுமென்றே உச்சஸ்தாயியில் கெளதம் கத்தினான்.

 

"இந்த நிலைமைக்கு அவள்தான் காரணம்ன்னு...நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்....!",

 

"அப்படி என்னடா நிலைமை...?அவள் வீட்டுக்கு பொண்ணு கேட்டு போய் அவள் நிலைமையை சரி பண்ணியிருக்கலாமே....?நீ ஏன் அதை பண்ணல....?",விடாமல் வாதாடினான் கெளதம்.

 

"என்னால அந்த காரியத்தைப் பண்ண முடியாது டா...!அவள் என் காதலை மறுத்ததுக்குப் பிறகும்...அவள் வீட்டுக்கு போய் நான் பொண்ணு கேட்டேனா...அது என் காதலை நான் அவமதிச்சதுக்கு சமம்....!",உடல் விறைக்க நிமிர்ந்தான் ஆதித்யன்.

 

புரியாத பார்வையுடன் நண்பனை நோக்கினான் கெளதம்.

 

"அவகிட்ட நான் எத்தனை முறை 'உங்க வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வர்றேன்னு' கேட்டிருக்கிறேன் தெரியுமா டா....?ஒருமுறை...ஒருமுறை அவள் 'சரி'ன்னு தலை ஆட்டியிருந்தான்னா போதும்....!எல்லாத்தையும் நானே பார்த்திருந்திருப்பேன்....!இந்நேரம் என் குடும்பத்தைக் கூட்டிட்டு போய் பொண்ணு கேட்டு....எங்க கல்யாணத்தையே முடிச்சிருந்திருப்பேன்....!ஆனால்....அப்போ எல்லாம் 'வேண்டாம்...!எங்க அப்பா அம்மாகிட்ட நானே பேசிக்கிறேன்....!' அப்படின்னு வக்கணையா மறுத்துட்டு....இப்போ வந்து 'நீ வேண்டாம்....!உன்  காதல் வேண்டாம்...!'ன்னு மறுத்தால்...விட்டுத் தர்றதுக்கு நான் என்ன முட்டாளா....?",ஆக்ரோஷமாய் தன்னைப் பார்த்து கேள்வி கேட்ட நண்பனுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

 

"காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து....இன்னைக்கு வரைக்கும்....எங்க காதலுக்காக நான் மட்டும்தான் டா போராடியிருக்கிறேன்....!அவள் ஒரு துரும்பைக் கூட எங்க காதலுக்காக கிள்ளிப் போட்டது இல்லை....!அவள் மனசில என் காதலுக்கான இடம்தான் என்ன....?கொஞ்சம் கூட யோசிக்காம....என் காதலை தூக்கியெறிய அவளுக்கு எப்படி டா மனசு வந்துச்சு....?எங்க காதலுக்காக அவள் போராடி இருக்க வேண்டாமா....?போராட பயந்துக்கிட்டு அப்பாவுடைய நம்பிக்கைக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்ட கோழை டா அவள்....!",

 

அவரவர் பக்கம் அவரவரின் நியாயங்கள் உண்டு என்பது இதுதான்....!ஆதித்யனின் இரும்பு மனதிலும் காயம் இருந்தது.நித்திலாவின் காதல் ஏற்படுத்திய காயம் அது....!பெற்றவர்களின் நம்பிக்கைக்காக....அவனின் உண்மையான காதலை தூக்கி எறிந்ததின் விளைவாய் அவனுடைய மனதில் காதல் ஏற்படுத்திய காயம் அது....!இதில் என்ன ஒரு விந்தையென்றால்....அந்தக் காயத்திற்கான மருந்தும் அவளுடைய காதல் தான்.....!காயப்படுத்தியவளே காதலுக்கான மருந்தாய் மாறிப் போகும் அதிசயம் காதலில் மட்டுமே சாத்தியம்....!

 

"என் காதலுக்கான நியாயத்தை அவள் கொடுக்கலை டா....!என் மனசில இருக்கிற காயம் ஆறணும்ன்னா...அவள் என் காதலுக்கான பதிலை சொல்லியாகணும்....!இனி...எங்க காதலுக்காக நான் போராட மாட்டேன்....!ஆனால் ஒண்ணு...அவளுடைய போராட்டத்துக்குப்  பின்னாடி அவளுக்குத் துணையா நான் இருப்பேன்....!என்னுடைய காதல் இருக்கும்....!

 

இந்த முடிவில் இருந்து நான் மாறப் போறது இல்ல....!இன்னைக்கு எங்க கல்யாணம் நடக்கப் போறது உறுதி....!அதை யாராலேயும் தடுக்க முடியாது....!எங்களுடைய காதலுக்கான நியாயத்தை அவள் கொடுத்துத்தான் ஆகணும்....!",சிம்மமாய் கர்ஜித்தவன்...தன் சிகையை அழுந்தக் கோதி தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

 

ஆதித்யனின் தோளில் ஆதரவாய் கை வைத்த கெளதம்,"உன் உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது டா மச்சான்....!எனிவே...வாழ்த்துக்கள்....!ஆனால்....ஒண்ணை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ....!உன்னுடைய முழு கோபத்தை நித்திலா தாங்க மாட்டாள்....!",நண்பனாய் அறிவுரை கூற..

 

"ஐ நோ...!அவளுக்காகத்தான்...அவளுக்காக மட்டும்தான்...முதல் முறையா என்னுடைய முழு கோபத்தையும் வெளிப்படுத்தாமல்....பொறுமையா போய்க்கிட்டு இருக்கிறேன்....!இந்த ஆதித்யனையே பொறுமையா இருக்க வைச்ச பெருமை உன் தங்கச்சிக்குத்தான் டா கிடைக்கும்....!",ஆதித்யனும் இயல்பாய் மாறி புன்னகைத்தான்.

 

நண்பர்கள் இருவரும் வெளியே வரும் போது...தோழிகள் இருவரும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.வழக்கம் போல்....நித்திலா சுவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருக்க....சுமித்ரா அவளைத் தேற்ற முயன்று கொண்டிருந்தாள்.

 

பட்டு வேட்டி...பட்டு சட்டையில் மிகக் கம்பீரமாக இருந்தான் ஆதித்யன்.காற்றில் அலைபாய்ந்த முன்னுச்சி முடி கலைந்து...அவன் நெற்றியில் படிந்திருந்தது...!நெற்றியில் மெலிதாக தீட்டியிருந்த சந்தனக் கீற்று...அவன் முகத்திற்கு இணையில்லாத ஆண்மையழகை அளித்திருந்தது.

 

நித்திலா அணிவித்திருந்த செயின்...அவனுடைய கம்பீரத்தை மெருகேற்றியிருந்தது.

 

கம்பீரத்திற்கு கம்பீரம் சேர்ப்பது போல்...அவனுடைய முழுக்கை பட்டு சட்டையை பாதி கை வரைக்கும் ஏற்றி விட்டிருந்தவன்....ஒரு கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருந்தான்.சுருள் சுருளாக முடிகள் அடர்ந்திருந்த அவனுடைய வலிமையான கரம் நித்திலாவை நோக்கி நீண்டது.

 

அவனுடைய வலிமையான கரங்களைப் பார்த்த நித்திலாவின் மனம் எங்கெங்கோ பறந்தது...!அவள் மனதில் பல இனிமையான தருணங்கள் எழுந்தன.எத்தனை எத்தனையோ இன்பமான தருணங்களில் அவள்...அந்தக் கைகளுக்குள் சிக்கியிருந்திருக்கிறாள்....!அந்த வலிமையான கரங்கள் அவளது மலர் உடலை இறுக்கி பல சுகமான இம்சைகளைத் தோற்றுவித்து இருந்துக்கின்றன.....!அது மட்டுமா....?அந்தக் கரங்கள் அவளுடைய இடையில் நடத்தும் ஊர்வலத்தில்....பல நிமிடங்கள் அவள் தன்னை மறந்து அந்த வான வெளியில் பறந்திருக்கிறாள்....!

 

அவள் சோர்வுடன் தலை சாயும் போதெல்லாம்....அந்தக் கரங்கள் அவளை ஒரு தந்தையாய் தாங்கி தாலாட்டியிருந்திருக்கின்றன....!இவ்வளவு ஏன்...?இரண்டு நாட்களுக்கு முன்னால்...அவனுடைய கோபத்திற்கு இலக்காகி...அந்த வலிமையான கரங்களால் இரண்டு அறைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறாள்....!

 

இந்த அத்தனை நினைவுகளும் அவள் மனதில் எழுந்தன...!

 

தன் முன் நீண்டிருந்த அவனுடைய கரத்தைப் பற்றாமல்...அவனுடைய வலிமையான கரங்களைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் நித்திலா.அவள் மனதில் நிச்சயமாய் கோபம் இல்லை....வெறுப்பு இல்லை....!மாறாக வேறு ஒரு உணர்வு இருந்தது....!

 

ஒரு ஆண்மகனின் கரங்கள் கூட இவ்வளவு அழகாக இருக்க முடியுமா.....?'முடியும்...!' என்று நிரூபித்துக் கொண்டிருந்தன...ஆதித்யனுடைய ஆண்மை மிகுந்த வலிமையான கரங்கள்....!

 

'பொதுவாக...பெண்களின் விரல்களுக்கு வெண்டைப்பிஞ்சை உவமையாகக் கூறுவார்கள்....!இவனுடைய விரல்களுக்கு எதை இணை கூட்டுவது...?',என்னும் கேள்வி நித்திலாவிற்குள் எழுந்தது.சீராக வெட்டப்பட்ட நகத்துடன் நீண்டிருந்த அவனுடைய விரல்களை இறுகப் பற்றிக் கொள்ளும் வேகம் நித்திலாவிற்கு வந்தது...!

 

எதைப் பற்றியும் நினைக்காமல்...யாரைப் பற்றியும் யோசிக்காமல் இப்படியே அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு அவன் காண்பிக்கும் வழியில் கண்ணை மூடிக் கொண்டு நடக்க வேண்டும் என்பது போன்ற வேட்கை உணர்வோடு...நிமிர்ந்து அவன் கண்களைச் சந்தித்தாள் நித்திலா.

 

 கண்கள் முழுக்க காதலைத் தேக்கியபடி அவள் விழிகளுக்குள் ஒரு ஆழ்ந்த பார்வையை செலுத்தியவன்...தன் வலது கையை அவளை நோக்கி நீட்டியபடி நின்றிருந்தான்.அவன் கண்கள் என்ன சேதி சொல்லியதோ...?இல்லை...அவனுடைய காதல் என்ன மாயம் செய்ததோ...?தெரியவில்லை....!அவனுக்கு சற்றும் குறையாத காதலுடன்....அவன் கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்தாள் நித்திலா.

 

மென்மையான புன்னகையுடன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான் ஆதித்யன்.கெளதம் காரை ஓட்ட...அவனுக்கு அருகில் சுமித்ரா அமர்ந்திருந்தாள்.மணமக்களுக்கான சர்வ அலங்காரங்களுடன் ஆதித்யனும்...நித்திலாவும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

 

கார்...கோவிலை நோக்கி விரைந்தது அந்த அதிகாலை வேளையில்....!

 

அகம் தொட வருவான்...!!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! -    அகம் 1

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - Final

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...! - அகம் 8