எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 55
அத்தியாயம் 55 :
கிழக்கு வானில்...ஆதவன் மெல்ல மெல்ல உதயாமாகிக் கொண்டிருந்தான்.மிகக் கம்பீரமாக நிமிர்ந்திருந்த அந்தக் கோவிலின் உள்ளே மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன.
"ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே....!!"
அக்னி ஹோமத்தின் முன் அமர்ந்திருந்த ஐயர் தன் கணீரென்ற குரலில்...வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க...அவருக்குப் பக்கவாட்டில் வாழ்க்கையில் இணையப் போகும் இரு மணமக்களும் அமர்ந்திருந்தனர்.
ஆதித்யனின் அருகில் கௌதமும்...நித்திலாவின் அருகில் சுமித்ராவும் அமர்ந்திருக்க....மணமக்கள் இருவரும் ஐயர் கூறும் மந்திரங்களைக் காதில் வாங்கித் திருப்பி உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
இருவரின் உள்ளங்களிலும் காதல் நிரம்பியிருந்தது.அதே சமயம்....பெற்றவர்களின் நினைவும் மேலோங்கிருந்தது.
செண்பகப் பூ மாலை அணிந்த மன்மதன் போல் வசீகரத் தோற்றத்துடன் அமர்ந்திருந்த ஆதித்யனின் அருகில்...முகிலில் மறைந்து எட்டிப் பார்க்கும் முழு நிலவைப் போல்...மாலைக்கு மத்தியில் தன் முகத்தை மறைத்தபடி ஒளிர்நிலவாய் மிளிர்ந்து கொண்டிருந்தாள் நித்திலா.
அவள் கனவில் கூட எண்ணிப் பார்த்திராத தருணம் இது....!தன்னுடைய பெற்றவர்கள் இல்லாத அவளது திருமணம்...!
"மாங்கல்யம் தந்துனானே...
மம ஜீவன ஹேதுனா....
கண்டே பத்னாமி சுபாகே...
சஞ்சீவ சரத சதம்....!"
மங்கள முழக்கங்களோடு...ஐயரின் "கெட்டிமேளம்...!கெட்டிமேளம்....!",என்ற குரலும் சேர்ந்து கொள்ள...கையில் ஏந்தியிருந்த மங்கல நாணை...நித்திலாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கி கொள்வதற்காக....அவளின் கழுத்தருகே எடுத்துச் சென்றான் ஆதித்யன்.
கழுத்தை தடவிய அவனது கரங்கள் ஒரு நொடி தாமதித்து நிற்க....அவனது பார்வையோ குனிந்திருந்த அவள் முகத்தை வருடியது.சட்டென்று நிமிர்ந்த அவளது விழிகள்....ஆதித்யனின் பார்வையோடு பிண்ணிக் கொள்ள....அவளது விழிகளை தன் காதலால் கட்டிப் போட்டபடி...அவள் கண்களை விட்டு இம்மியளவும் தன் பார்வையை விலக்காமல்....அவளது சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் ஆதித்யன்.
நித்திலாவின் விழிகளில் இருந்து இரு நீர் முத்துக்கள் வழிந்து அவள் மாங்கல்யத்தில் பட்டுத் தெறித்தன....!ஆனால்...அது நிச்சயம் வேதனைக் கண்ணீர் அல்ல...!துக்க கண்ணீர் அல்ல...!உயிர்க் காதல் நிறைவேறியதில் விளைந்த வெற்றிக் கண்ணீர்....!
அவள் மனதில் ஒரு நிறைவு தோன்றியது.காதலின் வெற்றி தந்த நிறைவு அது...!அந்த நிறைவை பெற்றுத் தந்தவன் தன்னவன் என்ற எண்ணத்தில்...அவளுடைய இதழ்கள் அவனை நோக்கி ஒரு புன்னகையை சிந்தின...!அவனது கண்கள்...வழக்கம் போல் அவளை நோக்கி ஒரு கண் சிமிட்டலை கொடுத்து...அவளது புன்னகையை சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொண்டன...!
அவளது நெற்றி வகிட்டிலும்...மாங்கல்யத்திலும் குங்குமத்தை வைத்து இல்லற வாழ்வில் அவன் அடியெடுத்து வைக்க....தனது மோதிர விரலால் அவனது நெற்றியில் குங்குமத்தை வைத்து அவனின் சரிபாதியானாள் நித்திலா.
அக்னி தேவனை சாட்சியாகக் கொண்டு...ஹோமத்தை மூன்று முறை வலம் வந்து...எந்த ஜென்மங்களிலும் பிரிக்க முடியாத பந்தமாய் தங்களது உறவை வலிமையாக்கி கொண்டனர் அந்த மணமக்கள்.
'வாழ்வின் எல்லை வரை நாங்கள் இருவரும் ஒன்றாக கரம் கோர்த்து காதலோடு பயணிக்க வேண்டும்...!',தீபாராதனை ஒளியில் கருணை வடிவாய் அருள் பாலித்துக் கொண்டிருந்த பெருமாளையும்...அவரது சகதர்மிணியான மகாதேவியையும் தரிசித்துக் கொண்டிருந்த ஆதித்யன் மற்றும் நித்திலா ஆகிய இருவரின் மனங்களிலும் இந்த வேண்டுதல்தான் இருந்தது.
"வாழ்த்துக்கள் டா மச்சான்...!",
"வாழ்த்துக்கள் நித்தி...!",கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்த ஆதித்யனை கௌதமும்...நித்திலாவை சுமித்ராவும் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
"அடுத்தது மச்சான்....?",கௌதம் வினவ...அவ்வளவு நேரம் இருந்த இலகுத் தன்மை மறைந்து...நித்திலாவின் உடலில் ஒரு இறுக்கம் வந்தது.
ஆதித்யனின் கரத்தோடு பிணைந்திருந்த தனது கையை உருவிக் கொள்ள பார்த்தாள்.ஒரு வித அழுத்தத்துடன் அவளது கையை இறுகப் பற்றியவன்...அவளிடம் திரும்பி,"இனி என் கையை விடணும்ன்னு கனவில கூட நினைக்காதே....!",கூறியவன் குரலில் அப்படியொரு உறுதி.
கௌதமிடம் திரும்பியவன்,"எங்க வீட்டுக்குப் போகலாம் டா...!",என்றபடி நித்திலாவின் கரத்தைப் பற்றிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தான்.கெளதம் வந்து காரை எடுக்க...நால்வரையும் சுமந்து கொண்டு....கார் ஆதித்யனின் வீட்டை நோக்கிப் பறந்தது.
அந்தப் பெரிய மாளிகைக்குள் கார் நுழைந்த உடனேயே....நித்திலாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.பயத்திலும்...பதட்டத்திலும் தன்னையும் அறியாமல் ஆதித்யனிடம் ஒன்றிக் கொண்டாள்.ஆதரவாக அவள் தோளைச் சுற்றிக் கைகளை போட்டு அணைத்தவன்,
"நான் இருக்கேன் பேபி....!",என்று மெல்லிய குரலில் சமாதானப்படுத்தினான்.
ஆதித்யனின் குடும்பம் முழுக்க தோட்டத்தில் குழுமியிருந்தது.இந்த இரண்டு நாட்களும் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாக ஆதித்யன்...குடும்பத்தினரிடம் கூறியிருந்தான்.
அவனது கார் போர்ட்டிக்கோவில் நுழையவும்...'ஆதித்யன் வந்துவிட்டான்...!',என்ற மகிழ்ச்சியோடு காரை நோக்கி நகர்ந்தவர்கள் ஒரு கணம் அதிர்ச்சியடைந்து நின்று விட்டனர்.
மாலையும் கழுத்துமாய்...கணவனும் மனைவியுமாய் காரிலிருந்து இறங்கி நின்றிருந்தனர் ஆதித்யனும் நித்திலாவும்.கௌதமும் சுமித்ராவும் அவர்களுக்குத் துணையாய்....நண்பர்களாய் அவர்களுக்கு அருகில் நின்றிருந்தனர்.
முதலில் சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தது அவனுடைய தாத்தா சுந்தரம் தான்..!
"ஆதி...!என்னப்பா இது...?எதுக்காக இப்படி யார்கிட்டேயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க....?",
"சந்தர்ப்ப சூழ்நிலை....!கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு தாத்தா...!உங்க எல்லாருடைய மனசிலேயும் ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும்....!உங்களுடைய ஒற்றை வாரிசான என்னுடைய கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தணும்ன்னு ஆசைகள் இருந்திருக்கும்....!அந்தக் கனவுகளை எல்லாம் சிதைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...!",அனைவரையும் பார்த்து நிமிர்வோடு கூறினான் ஆதித்யன்.
யாரும் எதுவும் பேசவில்லை...!அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தனர்.ஆதித்யனின் தந்தை மாணிக்கம் சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
"சரி...!நடந்தது நடந்து போச்சு....!எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்...!கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புள்ளைகளை இப்படி வீட்டு வாசலிலேயே நிற்க வைத்துப் பேசறது சரியில்ல....!",மாணிக்கம் கூறவும் கமலா பாட்டியும் அதை ஆதரித்தார்.
"மாணிக்கம் சொல்றதும் சரிதான்....!லட்சுமி...!நீ போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா...!மணமான தம்பதிகளுக்கு ஆரத்தி சுத்தாம வீட்டுக்குள்ள அழைக்கிறது முறையில்லை....!",மருமகளுக்கு உத்தரவிட்டார் கமலாம்பாள்.
அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த லட்சுமி...மாமியாரின் உத்தரவில் சுய நினைவுக்கு வந்தவராய்...வீட்டுக்குள் சென்றார்.
மணமக்கள் இருவருக்கும் லட்சுமி...ஆரத்தி எடுக்க...கமலாம்பாள் அவர்களை உள்ளே அழைத்தார்.
"வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா....!",
தயக்கத்துடன் அப்படியே நின்று கொண்டிருந்த நித்திலாவின் கரம் பற்றி அழைத்துச் சென்றான் ஆதித்யன்.தன்னவனின் கரம் பற்றிக் கொண்டு...தான் வாழப் போகும் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் நித்திலா.
அந்தப் பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த நீண்ட சோபாவில் நித்திலா...லட்சுமி மற்றும் கமலா பாட்டி ஆகிய மூவரும் அமர்ந்திருக்க...அவர்களுக்கு பக்கவாட்டில் இருபுறமும் போடப்பட்டிருந்த ஒற்றை சோபாக்களில் ஆதித்யன்...கெளதம் மற்றும் சுமித்ரா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.அவர்களுக்கு எதிரில் மாணிக்கமும் சுந்தரமும் அமர்ந்திருந்தனர்.
அங்கிருந்த அனைவரது முகங்களிலிலும் அதிர்ச்சியும்...கேள்விகளும் விரவியிருந்தன...ஒரே ஒருவனது முகத்தைத் தவிர...!அது...நம் நாயகன் ஆதித்யனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்....?அவன் மட்டும் கூலாக தனது மொபைலை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கெளதம்...மெதுவாக ஆதித்யனின் கையை சுரண்டினான்.
"டேய்....!எல்லோரும் ஷாக் ஆகி உட்கார்ந்திருக்காங்க டா...!மொபைலை வைச்சுட்டு அவங்ககிட்ட பேசு....!",கெளதம் அடிக்குரலில் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே...லட்சுமி பேச ஆரம்பித்தார்.
"என்ன நடந்துச்சு நித்தி....?",மருமகளையே கூர்மையாகப் பார்த்தபடி வினவினார் லட்சுமி.
"அதுதான் சொன்னேனே ம்மா...!சூழ்நிலை...!அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு...!",நித்திலாவிடம் கேட்ட கேள்விக்கு ஆதித்யன் பதில் சொன்னான்.
மகனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவர்,"நான் உன்கிட்ட கேட்கலை ஆதி...!நான் என் மருமகள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்...!இதுல நீ குறுக்கே வராதே...!",கண்டிப்புடன் கூற...தாயின் 'மருமகள்' என்ற விளிப்பிலேயே...அவருக்கு நித்திலாவின் மீது எந்தக் கோபமும் இல்லை என்பது புரிய...அவன் அமைதியடைந்தான்.
"சொல்லும்மா நித்தி....!ஏன் இப்படியொரு முடிவு எடுத்தீங்க....?",லட்சுமி கேட்ட கேள்வியில் அவளது முகம் அவளையும் அறியாமல் நிமிர்ந்து கணவனை நோக்கியது.
அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அவரு சொன்னது உண்மைதான் அத்தை....!ஒரு இக்கட்டான நிலைமையில இப்படி ஒரு முடிவெடுக்க வேண்டியதா போச்சு...!",கணவனையே பார்த்தபடி இந்த வார்த்தைகளை உதிர்த்தாள்.
அதில் அவனது புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தில் மேலேறி வளைந்து கீழே இறங்கின.
"இதை நம்பறதுக்கு நான் முட்டாள் இல்லைம்மா...!எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும்...!அதே சமயம்...என் மகனோட பிடிவாதத்தைப் பற்றியும் தெரியும்....!",இதைக் கூறும் போதே அவரது பார்வை ஆதித்யனைத் துளைத்தெடுத்தது.
அவன் மெச்சுதலாய் தாயைப் பார்த்து புருவம் உயர்த்த...லட்சுமியோ மகனைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகையை உதிர்த்தார்.அந்தப் புன்னகைக்குப் பின்னால் 'நான் உனக்கு அம்மா டா...!' என்ற செய்தி ஒளிந்திருந்தது.
நித்திலாதான் பாவம்...திணறிக் கொண்டிருந்தாள்.
"இல்லைங்க அத்தை....!உண்மையாலுமே த...தவிர்க்க முடியாத காரணம்....!",அவள் திக்கித் திணறிக் கொண்டிருக்க..
"நான் உண்மையான காரணத்தைக் கேட்டேன் நித்தி....!உன்னுடைய பெத்தவங்க சம்மதம் இல்லாம...இந்த வீட்டுக்கே வர மறுத்தவள் நீ...!அப்படிப்பட்ட நீ உன்னுடைய பெத்தவங்க சம்மதம் இல்லாம...எங்களுக்குத் தெரிவிக்காம இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கேன்னா...என்னவோ நடந்திருக்கு...!சொல்லு....!என்ன விஷயம்....?",அவருடைய கூர்மையான பார்வையும்...அழுத்தமானக் குரலும் அவளுக்கு ஆதித்யனை ஞாபகப்படுத்தியது.
'ஷப்பா...!அம்மாவுக்கும் மகனுக்கும் ஒரே பார்வை...!எதிர்ல இருக்கறவங்க மனசை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் பார்வை...!',மனதிற்குள் நினைத்தவள்...என்ன சொல்வது...? என்ற பதட்டத்துடன் மாமியாரை நோக்கினாள்.அவள் மறந்தும் வாயைத் திறக்கவில்லை.மாறாக அவள் கண்களில் ஒரு அலைப்புறுதல் தெரிந்தது.
மருமகளின் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலை கண்டுகொண்ட லட்சுமி...ஆதரவாக அவளது கையைப் பற்றியபடி,"என்மேல நீ மரியாதை வைச்சிருந்தேன்னா...நடந்த அத்தனை உண்மைகளையும் நீ இப்போ சொல்லியாகணும் நித்தி...!உன்னைப் பெத்தவங்க மேல நீ எவ்வளவு பாசம் வைச்சு இருக்கேன்னு எனக்குத் தெரியும்....!அவங்களுடைய கனவுகளையும்...நம்பிக்கையையும் சிதைச்சிட்டு...இப்படியொரு முடிவு எடுக்கறதுக்கு என்ன காரணம்....?",அவர் வினவிய அடுத்த நொடி...அவரது தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள் நித்திலா.
அவ்வளவு நேரம்...தன்னவனின் அருகாமையிலும்...அவன் கட்டிய மஞ்சள் கயிறு கொடுத்த நிறைவிலும்...மூழ்கியிருந்தவள்...பெற்றவர்கள் என்ற வார்தையைக் கேட்டதும் உடைந்து போனாள்.
அழுது கொண்டிருந்தவளைப் பார்த்த ஆதித்யனின் விழிகள் வேதனையுடன் மூடித் திறந்தன.
'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு அவ்வளவு வலிக்குதா டி....?',அவன் மனம் துயரத்துடன் அவளைப் பார்த்துக் கேள்வி கேட்டது.
மாமியாரின் தோளில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்...தேம்பிக் கொண்டே அனைத்தையும் கூறி முடித்தாள்.தனது வீட்டில் நடந்தது...அதன் பிறகு தான் எடுத்த முடிவு...தனது முடிவை ஆதித்யனிடம் சொன்ன பிறகு...அவன் வலுக்கட்டாயமாகத் தன்னை அந்த வீட்டில் அடைத்து வைத்தது...அதன் பிறகு நடந்தேறிய கல்யாணம் என அனைத்தையும் கூறினாள்.
ஒரு நிமிடம்...நிசப்த அமைதி நிலவியது.யாருக்கும் 'என்ன பேசுவது...?' என்று தெரியவில்லை.நண்பனின் மனநிலை புரிந்தவனாய் கெளதம்...ஆதரவான பார்வையை நண்பனை நோக்கி செலுத்தினான்.
ஆதித்யனின் தந்தையாலும்...தாத்தாவாலும் ஒரு ஆணாய்....ஆதித்யனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.'உன்னுடைய காதல் வேண்டாம்...!' என்று நித்திலா மறுத்தது...அவனுடைய தன்மானத்தை சீண்டிப் பார்த்திருக்கிறது என்பதை அனுபவத்தில் மூத்த அவர்கள் புரிந்து கொண்டனர்.
அவனுடைய காதல் மனதில் நித்திலா ஏற்படுத்திய ரணத்தின் விளைவாய்தான் இத்தனை காரியங்களும் நடந்தேறியிருக்கின்றன என்பது புரிய வர...அவர்கள் அமைதி காத்தனர்.
கமலா பாட்டிக்கு சிறிது கோபம் கூட எட்டிப் பார்த்தது.'என்னுடைய பேரனை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள் பார்...!' என்று அவர் மனதிற்குள் குமைந்தார்.
லட்சுமியாலும்...மகனின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.அத்தோடு மகனின் முரட்டுத்தனமான பிடிவாதத்தைப் பற்றியும் நன்கு அறிந்தவர் அல்லவா...?காதலில் போராட மறுத்து நித்திலா விலகியது...அவனுடைய பிடிவாதத்தை தூண்டி விட்டு...இப்படி அதிரடியான காரியத்தை செய்ய வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்.
ஒரு கணம்...'மகன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்....?',என்று அவரது தாயுள்ளம் கலங்கித் துடித்தது.மறு கணமே...நித்திலாவின் மன உணர்வுகளும் புரிய வர...ஆறுதலாக மருமகளின் முதுகைத் தடவிக் கொடுத்தார்.
இவ்வாறு....ஆதித்யன் கூறாமலேயே அவனுடைய உணர்வுகளையும்...அந்த அதிரடிக் கல்யாணத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் அவனுடைய வலிகளையும்...மிக அழகாகப் புரிந்து கொண்டனர் அவனுடைய குடும்பத்தினர்.
ஆனால்...யாருமே ஆதித்யனுக்கு ஆதரவாகவோ...இல்லை...நித்திலாவிற்கு ஆதரவாகவோ பேச முன் வரவில்லை.ஒருவருக்கு பரிந்து கொண்டு பேசுவது மற்றொருவரை காயப்படுத்தும் என அனைவரும் அமைதி காத்தனர்.
நித்திலாவின் அழுகையும் படிப்படியாய் குறைந்து விசும்பலில் வந்து முடிந்தது.
தன் தொண்டையை செருமிக் கொண்டு மாணிக்கம் பேச ஆரம்பித்தார்.
"சரி...!எல்லாரும் இப்படியே உட்கார்ந்திருந்தால்...நடந்தது இல்லைன்னு ஆகிடுமா....?அடுத்து நடக்க வேண்டியதைப் பத்தி யோசிக்க வேண்டாமா....?",மகனது குரலில் அவரை நிமிர்ந்து பார்த்த சுந்தரம்..
"நீ சொல்றதும் சரிதான்...!எல்லோரும் கிளம்புங்க...!நித்திலாவுடைய வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பாக்கிட்ட விஷயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைப்போம்....!",அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே..ஆதித்யன் ஏதோ பேச வாயெடுக்க...அவனை கையை உயர்த்தி தடுத்த சுந்தரம்..
"வேண்டாம் பேராண்டி....!நீ எதுவும் சொல்ல வேண்டாம்...!கல்யாணம்தான் உன் விருப்பத்துக்கு நடந்து போச்சு...!இனி அடுத்த நடக்க வேண்டிய காரியத்தை எங்க விருப்பத்துக்கு விடு...!பெரியவங்கன்னு நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்....?நாங்க பார்த்துகிறோம்....!நீ அங்கே வந்து வாயைத் திறக்க கூடாது...!அவங்களை சமாதானப்படுத்தற பொறுப்பு எங்களுடையது....!",சுந்தரம் முடிவாக கூறி விட..
"உங்க இஷ்டம் தாத்தா...!",என்று அமைதியாகி விட்டான் ஆதித்யன்.
"லட்சுமி....!புது மருமகளை கூட்டிட்டுப் போய் பூஜையறையில தீபம் ஏற்ற சொல்லு...!வீட்டுக்கு வந்த பொண்ணு இப்படி அழுது வடிஞ்சுக்கிட்டு இருந்தால் நல்லாவா இருக்கு....!நான் போய் வேலையாளுங்ககிட்ட காலை டிபனை ரெடி பண்ணச் சொல்றேன்....!எல்லோரும் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்....!ஏம்மா சுமித்ரா....!உன் பிரெண்டுக்கு துணையா நீயும் அவ கூட போ...!",பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு கமலா பாட்டி உத்தரவிட....லட்சுமியும் சுமித்ராவும் மணமக்களை அழைத்துக் கொண்டு பூஜையறைக்கு விரைந்தனர்.
அதன் பிறகு...அனைவரும் காலை உணவை பெயருக்கு கொறித்து விட்டு...காரில் கிளம்பினர்.பெரியவர்கள் அனைவரும் ஒரு காரில் வர...சிறியவர்கள் அனைவரும் மற்றொரு காரில் கிளம்பினர்.
ஆதித்யனும்...நித்திலாவும் இன்னும் திருமண கோலத்தில்தான் இருந்தனர்.
"கல்யாணத்தைத்தான் பார்க்கல...!அட்லீஸ்ட்...மகளுடைய திருமண கோலத்தையாவது அவங்க பார்க்கட்டும்...!;",உடை மாற்ற போன ஆதித்யனைத் தடுத்து லட்சுமி கூறவும்...இருவரும் அதே கோலத்தில் கார் ஏறி விட்டனர்.
ஏழு மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் கோவையை அடைந்தது.
வீட்டை நெருங்க நெருங்க...நித்திலாவின் பதட்டமும்...பயமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.அதுவரை ஆதித்யனை விட்டுத் தள்ளி கார் கதவோரமாக அமர்ந்திருந்தவள்...கார் கோவைக்குள் நுழைந்ததும் உடல் நடுங்க...பூனைக்குட்டி போல் போய் அவனை ஒட்டிக் கொண்டாள்.
மனைவியின் தவிப்பைக் கவனித்தவன்...அவளது தோளைச் சுற்றி கைகளைப் போட்டு தன் மார்போடு அணைத்துக் கொண்டு...அவளது காதோரமாக மெல்லிய குரலில் சமாதானம் கூற ஆரம்பித்தான்.
"நான் இருக்கிறேன்....!";
"........",
"பயப்படக்கூடாது பேபி....!",
"..........",
"என்ன நடந்தாலும் சரி...!உன் அத்தான் பார்த்துக்குவான்....!",அவள் முடி கோதி..அவன் மென்மையாக அவன் கூற கூற...அவள் சற்று தெளிவடைந்தாள்.
'இந்த சூழ்நிலையை ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்...!',தைரியத்தைத் திரட்டிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள் நித்திலா.
.........................................................................................
நித்திலா வீட்டு ஹாலில் அவளுடைய மொத்தக் குடும்பமும் குழுமியிருந்தது.இருபக்கமும் போடப்பட்டிருந்த நீண்ட சோபாவில்...ஒரு புறம் ஆதித்யன் குடும்பம் அமர்ந்திருக்க...அவர்களுக்கு எதிர்புறம் கேசவனின் குடும்பம் அமர்ந்திருந்தது.நித்திலாவின் தாய் கோபத்திலும்...அதிர்ச்சியிலும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க...தீபிகா அவர் அருகில் அமர்ந்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டாது இடிந்து போய் அமர்ந்திருந்த கிருஷ்ணனின் காலடியில் அமர்ந்திருந்த நித்திலா...அவரது மடியில் முகம் புதைத்து விம்மிக் கொண்டிருந்தாள்.
வந்ததில் இருந்து யாரும் எதையும் பேசவில்லை.ஆதித்யன்...கேசவனுக்கு அழைத்து நித்திலா வீட்டிற்கு வருமாறு கூறியிருந்ததால்...'என்ன விஷயம்...?' என்று தெரியாமலேயே...அவனும்...ஆதித்யன் கூறியபடி தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து காத்திருந்தான்.
மணக்கோலத்தில் வந்திறங்கிய தங்களது மகளைப் பார்த்ததுமே பெற்றவர்கள் இருவரும் ஆடிப் போய் விட்டனர்.மனதில் ஒரு வித வெறுமை சூழ...இருவரும் கலக்கத்துடன் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து விட்டனர்.கேசவன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு...ஆதித்யன் குடும்பத்தை அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்தான்.
உள்ளே நுழைந்த நித்திலா...தந்தையைக் கண்டதும் ஒரு கேவலோடு ஓடிச் சென்று அவர் காலடியில் விழுந்தாள்.கிருஷ்ணன் மகளை விலக்கவும் இல்லை...அவளை அரவணைக்கவும் இல்லை...!வெறுமையான பார்வையோடு எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
தன் மனைவி அழுவதை இறுகிய முகத்துடன் வெறித்தபடி...தந்தையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் ஆதித்யன்.முதலில் மாணிக்கம்தான் பேச ஆரம்பித்தார்.
"நடந்தது நடந்து போச்சு சம்பந்தி....!ஏதோ நம்ம குழந்தைகள் ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க....!அதுக்காக அவங்க செய்தது சரின்னு நான் சொல்ல வரலை...!அவங்களுடைய காதல் விஷயத்தைப் பெரியவங்க நம்மகிட்ட சொல்லியிருக்கலாம்....!நாம ஒண்ணும் அவங்களுடைய ஆசைக்கு குறுக்கே நிற்க போறதில்லை....!இருந்தும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால இப்படி செய்திட்டாங்க....!அவங்களை மன்னிச்சு ஏத்துக்க கூடாதா....?",தன்மையாய் பேசிய மாணிக்கம் மறந்தும் அவர்களது திருமணம் நடந்த விதத்தைப் பற்றிக் கூறவில்லை.
அவர்களிடம் இருந்து அதை மறைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.தேவைப்பட்டால் கூறிக் கொள்ளலாம் என்று பொறுமை காத்தார்.
மாணிக்கம் பேசியதற்கு கிருஷ்ணனிடமும்...மீனாட்சியிடமும் எந்தப் பதிலும் இல்லாமல் போகவும்...சுந்தரம் தாத்தா வாயைத் திறந்தார்.
"நம்ம குழந்தைகள் தெரியாம செய்யற தப்பை...பெத்தவங்க நாம மன்னிக்கறது இல்லையாப்பா....!இந்த சின்னஞ் சிறிசுக சந்தோஷத்துக்காக நம்ம கோபத்தை நாம கொஞ்சம் விட்டுத் தரலாமே....?",இதமாக எடுத்துக் கூறினார் சுந்தரம்.
சிறிது நேரம் அமைதி நிலவியது.நித்திலாவின் விசும்பல் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.தன்னவளை அள்ளி எடுத்து சமாதானப்படுத்த துடித்த கரங்களை அடக்கத் தோன்றாமல்...பட்டென்று சோபாவில் இருந்து எழுந்தான் ஆதித்யன்.
நித்திலாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்த ஆதித்யனை...மாணிக்கத்தின் கண்டிப்பான பார்வை தடுத்தது.
"அவ அழறா ப்பா...!",அடிக்குரலில் தந்தையிடம் அவன் சீற..
"அழட்டும் விடு...!அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நீ போகாதே....!",அவரது கண்டிப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
"என்னை ம...மன்னிச்சிடுங்க ப்பா....!உங்க...உங்க நம்பிக்கையை நான் அ..அழிச்சிட்டேன்....!",கேவலுக்கு இடையே வந்து விழுந்தன நித்திலாவின் வார்த்தைகள்.
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த கிருஷ்ணன்...அப்பொழுது வாயைத் திறந்தார்.
"அழிக்கலை ம்மா...!என் நம்பிக்கையை வலிக்க வலிக்க கொன்னுட்ட....!",அவர் குரலில் நிச்சயமாய் கோபம் இல்லை.மாறாக...உணர்வுகளைத் தொலைத்து இறுகியிருந்தது.
தந்தையின் வார்த்தையில் அவள் மேலும் அழ ஆரம்பித்தாள்.
"இ..இல்லை ப்பா....!உங்க நம்பிக்கையை நான் கொல்லலை....!இல்லை...!நான் கொல்லலை....!",வெறி பிடித்தவள் போல் கதறியவள்...அவரது கையைப் பற்றிக் கொண்டு..
"அப்பா...!'வேறொரு ஆணோட உன்னை நெருக்கமான நிலையில பார்த்தாலும்...உன் பக்கம் ஒரு நியாயம் இருக்கும்...!அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு...!'ன்னு சொன்னீங்கல்ல ப்பா...!இந்த கல்யாணத்திலேயும் என் பக்கம் ஒரு நியாயம் இருக்கும்ன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ப்பா...?",தன் உயிரை விழிகளில் தேக்கி கொண்டு வினவிய தன் மகளைப் பார்த்து 'இல்லை...!' என்பதாய் தலையசைத்தார் கிருஷ்ணன்.
"எப்படிம்மா என் நம்பிக்கையை இழுத்துப் பிடிக்கச் சொல்ற...?அந்த தம்பி கட்டின தாலி...உன் கழுத்துல தொங்கிக்கிட்டு இருக்கு...!அப்படி இருக்கும் போது...என் நம்பிக்கைக்கு எந்த விதத்துல உயிர் கொடுக்கச் சொல்ற....?",அவர் குரலில் அப்படியொரு வேதனை.
தந்தையின் வார்த்தைகள் மனதில் அடித்த போதும்...ஒருவழியாகத் தன்னை தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவள்,"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ப்பா...?உலகத்தில எல்லாமே...எல்லாருடைய விருப்பப்படி நடக்கறது இல்ல...!",மகளின் வெறுமையான குரல் அந்தத் தந்தையை யோசிக்க வைத்தது.
புருவம் சுருங்க...அவர் தன் மகளின் முகத்தையே கூர்மையாய் அளவிட்டபடி இருக்க...கோபமாய் வந்த மீனாட்சி மகளைப் பிடித்து எழுப்பினார்.
"யாருடைய விருப்பத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருக்க...?எங்களுடைய விருப்பதைப் பற்றியா....?இல்ல...உன்னுடைய விருப்பத்தைப் பற்றியா....?",
"எல்லோருடைய விருப்பத்தைப் பற்றியும்தான் சொல்றேன்....!என்னுடைய விருப்பம்...உங்களுடைய விருப்பம்...இதோ...இவங்களுடைய விருப்பம்...!",என ஆதித்யனின் குடும்பத்தை சுட்டிக் காட்டியவள்,"இப்படி...எல்லாருடைய விருப்பத்தைப் பற்றியும்தான் சொல்றேன்....!",தாங்க முடியாமல் வெடித்தாள் அவள்.
அனைத்தையும் முகம் இறுக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.'மீண்டும் தங்களது காதலை அவமானப்படுத்தப் போகிறாள்....!',என்று அவன் மனம் இறுகியது.
மீனாட்சிக்கு இன்னும் அதிகமாகக் கோபம் வந்தது.
"சும்மா உளறாதே....!அந்தத் தம்பி கட்டின தாலியை உன் கழுத்துல வாங்கிட்டு வந்து...எங்க முன்னாடி நின்னுக்கிட்டு இருக்க...!உன் விருப்பம் இல்லாமலேயா உன் கழுத்துல தாலி ஏறியிருக்கும்....?",தாயின் கேள்வியில்..
வேகமாக எதையோ கூற வாயெடுத்தவள்...பட்டென்று அமைதியானாள்.
'இல்லை நித்தி...!இதை நீ சொல்லக் கூடாது....!',அவளது காதல் மனம் அறிவுறுத்தியது.
ஆதித்யனின் கட்டாயத்தினால்தான் இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது.என்னதான் அவர்கள் தன்னுடைய பெற்றவர்களாக இருந்தாலும்....அவர்களின் முன் தன்னவனை விட்டுத்தர அவளது காதல் மனம் தயாராய் இல்லை....!தன்னுடைய பிறந்த வீட்டினர் முன்னால்....குற்றவாளியாய் தன் கணவனை சுட்டிக் காட்ட அவளுடைய காதல் நெஞ்சம் இடம் தரவில்லை....!
இது...இது...இதுதான் பெண்களின் மனம்....!எப்பொழுது அவர்களது கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறுகிறதோ...அந்த நிமிடமே அவர்கள் பிறந்த வீட்டில் இருந்து அந்நியமாகிக் கொள்கிறார்கள்....!அந்நியப்படுத்தப் படுகிறார்களோ...இல்லையோ...?அவர்களே மனமுவந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள்....!
இது காலம் காலமாய் பெண்களின் மனதில் ஊறிப் போன உணர்வு...!அதற்கு நித்திலா மட்டும் விதிவிலக்கா...என்ன...?
"சொல்லு டி....?உன் விருப்பம் இல்லாமலேயா இவ்வளவும் நடந்துச்சு....?உன்னால பதில் சொல்ல முடியலைல்ல....?எப்படி சொல்ல முடியும்....?",அவளுடைய தாய் கேட்ட கேள்விக்கு உண்மையாலுமே அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
பெற்றவர்களின் நம்பிக்கைக்காக...ஆதித்யனின் காதலை தூக்கியெறிய துணிந்தவள்தான் அவள்....!ஆனாலும்...அவளால் அந்த தாய் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை,
ஏனென்றால்...அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொன்னால்...அதன் பிறகு நடந்த நிகழ்வுகளையும் அவள் விளக்க வேண்டி இருக்கும்...!அத்தனை பேரின் முன்னாலும் தன்னவனை நோக்கி கைகாட்ட அவள் விரும்பவில்லை....!எனவே...மௌனம் சாதித்தாள்.
அந்த நொடி....அந்தக் கணம் ஆதித்யனின் காதல் உயிர்தெழுந்தது....!தன்னுடைய காதலுக்கு அவள் நியாயம் செய்யவில்லை என்று மறுகிக் கொண்டிருந்தவனுக்கு...தன்னுடைய அந்த மௌனத்தின் மூலமாக...அவனுடைய காதலுக்கான நியாயத்தை அள்ளி வழங்கினாள் அவனுடைய காதல் தேவதை....!
ஆதித்யனின் பெற்றவர்களிடமும் அவள் நடந்த விஷயத்தைக் கூறினாள் தான்...!ஆனால்...முழுவதுமாகக் கூறவில்லை...!மேம்போக்காக விஷயத்தைக் கூறினாலே தவிர...தங்களுக்குள் நடந்த அந்தரங்க பேச்சுவார்த்தைகளைப் பற்றியோ...அவன் கொடுத்த இரண்டு ஆப்ஷன்களை பற்றியோ...அவள் கூறவில்லை.
அது தங்களுக்கான அந்தரங்கம் என்று அவள் நினைத்தாள்.அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை அவள் விரும்பவில்லை...!ஆதித்யனின் பெற்றவர்களிடம் கூட அவள் நடந்ததைக் கூறியிருக்க மாட்டாள்தான்...!ஆனால்...அவனது தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுத்தான்...நடந்ததை பட்டும் படாமலும் கூறியிருந்தாள்.
ஆதித்யனும் நித்திலாவின் மன நிலைமையில்தான் இருந்தான்.தங்களுக்கே தங்களுக்கான அந்தரங்ககளை...அந்த நிலையிலும் அவள் வெளியிடாதது...அவனுடைய காதல் மனதில் ஏற்பட்டிருந்த ரணத்தில் மயிலிறகைக் கொண்டு வருடியது...!
அவன் விழிகள் பளிச்சிட தன் மனையாளை நோக்கினான்.அவளும் அப்பொழுது அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகள் ஏதோ சொல்ல வாயெடுத்ததையும்...அதன் பிறகு அமைதியாகி விட்டதையும் கிருஷ்ணன் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.அதே சமயம்...மகளும் ஆதித்யனும் பார்த்துக் கொண்ட காதல் பார்வையும் அவரது கவனத்தில் விழுந்தது.
'ஏதோ நடந்து இருக்கு...!அதை மகள் தங்களிடம் மறைக்கிறாள்...!',என்று அவரது அனுபவ அறிவு கூறியது.ஆதித்யனுக்காக அவள் தங்களிடமே ஏதோ விஷயத்தை மறைக்கிறாள் என்றால்...அவள் ஆதித்யன் மேல் வைத்திருக்கும் காதல் எப்படிப்பட்டது என்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
மகளின் மேல் வைத்த நம்பிக்கை மீண்டு வர...அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
"போதும் மீனாட்சி....!நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை...!இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம்...!",ஒரு தந்தையாய் மகளின் காதலை ஏற்றுக் கொண்டு அவர் பேசினார்.
"அடுத்தது என்ன...?அவங்க வீட்டு மருமகளை அவங்க கூட்டிட்டு போகட்டும்...!",அந்தத் தாயால் அவ்வளவு எளிதாக நடந்து முடிந்ததை ஜீரணிக்க முடியவில்லை.
"அபத்தமா பேசாதே மீனாட்சி....!என்னதான் இருந்தாலும்...அவள் நம்ம பொண்ணு....!நம்ம வீட்டுப் பொண்ணுக்கு செய்ய வேண்டியதை செய்து அனுப்ப வேண்டியது நம்மளுடைய கடமை....!",அவர் கூறவும்...ஓடிச் சென்று தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள் நித்திலா.
"ஸாரி...!ஸாரி ப்பா...!ரொம்ப தே..தேங்க்ஸ்....!",அழுகைக்கு இடையே மன்னிப்பையும்...நன்றியையும் மாறி மாறிக் கூற..
கனிவான புன்னகையுடன் தன் மகளின் தலையை நீவி கொடுத்தவர்,"இப்பவும் அதையேதான் சொல்றேன் ம்மா...!என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....!உன்னுடைய காதல் விஷயத்தை எங்ககிட்ட சொல்லாமல் போனதுக்கும்...இப்படி நடந்த கல்யாணத்துக்கும் நிச்சயமா உன் பக்கம் ஒரு காரணம் இருக்குன்னு நான் நம்பறேன்....!",அமைதியான குரலில் கூறியவரை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் எதையோ கூற துடிதுடித்தது.ஆனால்...இதழ்களை அழுந்தக் கடித்துக் கூற வந்ததை...கூற முடியாமல் தன்னை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தாள்.
"வேண்டாம் டா...!விட்டு விடு....!உன்னால அந்தக் காரணத்தை எங்ககிட்ட சொல்ல முடியலை...!அதை என்னால புரிஞ்சுக்க முடியுது....!",ஆதுரமாகக் கூறியவர்..
"என் மகள் எவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்துட்டா....!ஒருத்தருக்கு மனைவியாகவும்....இன்னொரு குடும்பத்து மருமகளாகவும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாள்....!",'தன் மகள் வளர்ந்து விட்டாள்...!' என்ற நினைவில் கண் கலங்க கூறினார் அந்த தந்தை.
பேச்சுகளற்று ஆனந்தக் கண்ணீரோடு அவரை அணைத்துக் கொண்டாள் அந்த மகள்.
மீனாட்சியால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தங்களுடைய செல்ல மகள்...இப்படி தங்களது சம்மதம் இல்லாமல்...திருமணம் செய்து கொண்டதில் அவர் கோபமாக இருந்தார்.
ஆதித்யனின் குடும்பத்தினரின் மனதில்...நித்திலாவைக் குறித்த பெருமை கர்வமாய் வந்தமர்ந்தது...!பெற்றவர்களாயினும்...அவர்களின் முன் தங்களது மகனை விட்டுக் கொடுக்காதது....அவர்களின் மனதில் ஒரு நிறைவைத் தந்தது.
மகளின் இக்கட்டான நிலைமையை அழகாகப் புரிந்து கொண்டு...அவளை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணனை நினைத்து,'தங்கள் வீட்டின் மருமகள் அருமையான குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறாள்...!',என்ற மகிழ்ச்சி அவர்களுக்குள் தோன்றியது.
முரண்டு பிடித்த மீனாட்சியை கேசவனின் அம்மா ராஜாத்தி பேசி பேசி சமாதானப்படுத்தினார்.
"ரொம்ப அருமையான இடம்....!மாப்பிள்ளையும் நல்ல குணம்...!ஆதித்யன் எங்களுடைய மகனைப் போல...!",அது இது என்று கூறி அவர் மனதை ஓரளவிற்கு கரைத்திருந்தார்.
கேசவன்...தீபிகாவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை...!ஆதித்யனைப் பற்றி அறிந்தவர்களாததால்...அவர்கள் முழு மனதோடு இந்த திருமணத்தை வரவேற்றனர்.அதிதி குட்டியும் புதிதாக கிடைத்த சித்தப்பாவோடு நன்கு ஒட்டிக் கொண்டது.
அனைவரும் கலந்து பேசி இன்னும் இரண்டு நாட்களில் சென்னையில் வரவேற்பு என்று முடிவெடுத்தனர்.அதுவரை...நித்திலா அவளது பெற்றவர்களின் வீட்டில் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.வரவேற்புக்குத் தேவையான துணி நகைகளை எடுத்துக் கொடுத்து விட்டு நாளை ஆதித்யனின் குடும்பம் சென்னை செல்வதாகவும்...நாளை மறுநாள் நித்திலாவை அழைத்துக் கொண்டு அவளது குடும்பம் சென்னை செல்வதாக இருந்தது.
இடைப்பட்ட இரண்டு நாட்களில்....முக்கியமான உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பதாக ஏற்பாடு ஆகியிருந்தது.மணமக்களுக்கான முதலிரவிற்கும்...வரவேற்புக்குப் பிறகு என்று நேரம் குறித்தனர்....!
அகம் தொட வருவான்...!!!
கருத்துகள்
கருத்துரையிடுக