எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 59

 அத்தியாயம் 59 :

 

அன்று...திவ்யாவைப் பெண் பார்ப்பதற்காக 'தேவ் குடும்பத்தினர்' வருவதாக இருந்தது.அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.காலையிலேயே ஆதித்யனின் குடும்பம்...கௌதமின் வீட்டில் ஆஜராகியிருந்தது.வீட்டை அலங்கரிப்பதில் ஆதித்யனும்...கௌதமும் ஈடுபட்டிருக்க...சமையல் வேலைகளை வேலைக்காரர்கள் துணையோடு லட்சுமி ஏற்றுக் கொண்டார்.நித்திலாவும்...சுமித்ராவும் திவ்யாவை தயார்படுத்தும் வேலையில் இறங்கியிருந்தனர்.

 

சுந்தரம் தாத்தாவும்...கமலா பாட்டியும் வழக்கம் போல் தங்களுக்குள் செல்ல சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தனர்.இவர்கள் அனைவரையும் கவனித்தபடி...செய்தித் தாளில் மூழ்கியிருந்தார் மாணிக்கம்.

 

"நான் படிக்க வேண்டும்...!இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்....!",முரண்டு பிடித்த திவ்யாவை..

 

"முதலில் மாப்பிள்ளையைப் பார்...!மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்...!",என்று கூறி சமாதானப்படுத்தியிருந்தனர் நித்திலாவும்...சுமித்ராவும்.

 

இருந்தும் குழம்பிக் கொண்டே தன் அறையிலேயே அடைந்திருந்த திவ்யாவை தனியாக சந்தித்துப் பேசினான் கெளதம்.

 

"திவி...!உன்னை மீறி எதுவும் நடக்காது டா...!இந்த அண்ணன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்லையா....?",தங்கையின் தலையை பாசத்துடன் கோதியபடி வினவிய கௌதமை நிமிர்ந்து பார்த்த திவ்யா...விழிநீர் பெருக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

எந்தவொரு பெண்ணிற்குமே முதல் முறை அவளது திருமண விஷயங்களைப் பற்றி பேசும் போது மனம் நிறைய குழப்பம் வரும்...!இன்னதென்று விளங்காத பயம் அடி வயிற்றை ஜில்லிடச் செய்யும்...!ஏனென்று அறியாமலேயே கண்ணீர் சுரக்கும்...!அனைத்துப் பெண்களுமே தங்களது வாழ்நாளில் சந்திக்கும் காலகட்டம்தான் இது...!அந்த நிலையில்தான் திவ்யாவும் இருந்தாள்.

 

"பயமாயிருக்கு அண்ணா....!",சிறு தேம்பலுடன் கூறியவளின் முதுகை ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தவன்..

 

"அண்ணன் இருக்கேன் இல்லையா...?பயப்படக்கூடாது டா...!நீ ஜஸ்ட் வந்து மாப்பிள்ளையை மட்டும் பார்த்துட்டுப் போ...!பிடிச்சிருந்தால் மேற்கொண்டு பேசலாம்...!இல்லையா...வேண்டாம்ன்னு மறுத்துடலாம்....!உன் விருப்பத்துக்கு எதிரா...இங்க எதுவுமே நடக்காது...!",அவன் கூறிய உறுதிமொழியில்...அவள் சற்றுத் தெளிந்தாள்.

 

அமைதியான மனநிலையோடு பெண் பார்க்கும் படலத்திற்கு தயாரானாள்.

 

வரிசை கட்டிக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக அந்த அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்த இரண்டு கார்களை...கெளதம் வீட்டு  பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்த லட்சுமி,"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க...!நீ போய் திவ்யா ரெடியாகிட்டாளான்னு பார்த்துட்டு வா...!",தன்னருகில் நின்றிருந்த மருமகளுக்கு உத்தரவிட்டார்.

 

"இதோ அத்தை....!",கரும்பச்சை வண்ண பட்டுப்புடவையில் எளிமையான அழகோடு மிளிர்ந்து கொண்டிருந்த நித்திலா...மாமியாரின் உத்தரவுக்குப் பணிந்து...திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள்.

 

இவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகும் போது...திவ்யாவின் கூந்தலில் நெருக்கமாகத் தொடுத்த மல்லிகை பூச்சரத்தை சூட்டிக் கொண்டிருந்தாள் சுமத்ரா.

 

"அவங்க எல்லாம் வந்துட்டாங்க...!திவி ரெடியா...?",சுமித்ராவிடம் கேட்டபடியே உள்ளே நுழைந்தாள் நித்திலா.

 

"அதுக்குள்ள வந்துட்டாங்களா....?எ..எனக்குப் பயமாயிருக்கு அண்ணி...!",மிரண்டு விழித்தபடி சுமித்ராவின் கையைப் பற்றிக் கொண்ட திவ்யா...மாம்பழ வண்ணப் பட்டுப் புடவையில் அப்படியொரு அழகாக இருந்தாள்.

 

"நீ ஏன் இதை பொண்ணு பார்க்கிற பங்க்ஷன்னு நினைக்கிறே திவி....?இப்போ நம்ம வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தால்...நாம 'வாங்க'ன்னு கேட்டுட்டு...காபி கொண்டு போய் கொடுப்போமில்லையா...?அப்படின்னு நினைச்சுக்கோ...!",கனிவான புன்னகையுடன் அதையும் இதையும் கூறி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே..

 

வெளியே இருந்து,"திவ்யாவை கூட்டிட்டு வாங்க...!",என்ற கமலா பாட்டியின் குரல் கேட்டது.நித்திலாவும்..சுமித்ராவும் திவ்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

 

ஆயிரம் மடங்கு வேகமாய் இதயத் துடிப்பு எகிறிக் குதிக்க...மென்னடை நடந்து வெளியே வந்து பதுமையைப் போல் நின்றாள் திவ்யா.

 

"எல்லோருக்கும் வணக்கம் சொல்லு திவி...!",நித்திலா அவளது காதோரம் கிசுகிசுக்க..

 

அனைவரையும் நிமிர்ந்து பார்க்காமலேயே...அல்லி மொட்டு போல் கரம் குவித்து 'வணக்கம்...!' சொன்னாள் திவ்யா.

 

அவள் கையில் காபி ட்ரேயை திணித்த திவ்யா,"எல்லோருக்கும் கொண்டு போய் கொடு...!",மென்குரலில் கூற...அதை வாங்கி கொண்டு கைகள் நடுங்க...கால்கள் பின்ன மாப்பிள்ளை வீட்டினரை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

 

"தேங்க் யூ....!",குறும்புடன் கம்பீரமாக ஒலித்த குரலில் படக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.அங்கு...வசீகரமானப்  புன்னகையை இதழ்களில் தேக்கியபடி...கண்களில் குறும்பு மின்ன அமர்ந்திருந்தவன்...அவளது பார்வையை எதிர் பார்த்தவன் போல்...சட்டென்று சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொண்டான்.

 

அத்தோடு நிற்காமல்...மின்னல் வேகத்தில் அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி வைக்க...விதிர்த்துப் போனவளாய் சுமித்ராவின் அருகில் சென்று நின்று கொண்டாள் அவள்.

 

"இங்கே வந்து உட்காரும்மா...!",முகம் முழுக்க புன்னகையுடன் அவளை அழைத்துத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் தேவதர்ஷனின் தாய்.அவர் முகத்தில் நிறைவு தெரிந்தது.தன் மகன் தேர்ந்தெடுத்த பெண்..மகாலட்சுமியைப் போல் இருப்பதில் வந்த நிறைவு அது....!

 

நிறைவுடன் அவர் தன் கணவரின் முகம் பார்க்க...அந்தப் பார்வையை புரிந்து கொண்டவராய்,"எங்க குடும்பத்துல எல்லோருக்கும் சம்மதம்....!இதுவரைக்கும் எங்க மகனோட ஆசைக்கு நாங்க குறுக்கே நின்றதில்லை...!உங்க வீட்டுப் பொண்ணை..எங்க மருமகளா எடுத்துக்கறதுக்கு எங்களுக்கு மனப்பூர்வமான சம்மதம்....!உங்க பக்கம்...எப்படி...?",கணீர் குரலில் பேச்சை ஆரம்பித்தார் தேவதர்ஷனின் தந்தை.

 

திவ்யாவின் பதில் தெரியாமல்...இவர்களுக்கு என்ன மறுமொழி கூறுவது என்ற யோசனையுடன்...கெளதம்...திவ்யாவை நோக்க..அவளோ தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

"உங்க வீட்டு சம்பந்தம் கிடைக்கறதுக்கு நாங்க கொடுத்து வைச்சிருக்கணும் சார்...!",கெளதம் கூறிக் கொண்டிருக்கும் போதே...சட்டென்று விழியுயர்த்தி அவனைப் பார்த்த திவ்யாவின் விழிகளில் குழப்பம் குடிகொண்டிருந்தது.அவள் விழிகளில் தெரிந்த குழப்பத்தையும்...மிரட்சியையும்...அலைப்புறுதலையும் தேவதர்ஷன் கண்டு கொண்டான்.

 

ஒரு கணம்...அவனது புருவங்கள் சுருங்கி...முகம் யோசனைக்குத் தாவியது.அடுத்த கணம்...இயல்பு நிலைக்குத் திரும்பியவன்...சற்றும் தாமதிக்காமல்,"நான் திவ்யா கூட தனியா பேசலாமா....?",என்று கேள்வி எழுப்பியிருந்தான் கௌதமை நோக்கி.

 

 'என்ன சொல்வது...?',என்று தெரியாமல் கெளதம் விழித்துக் கொண்டிருக்க...மாணிக்கம்தான் நிலைமையை சமாளித்தார்.

 

"ஓ...ஷ்யூர்...!ரெண்டு பேரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்க...!",என்றவர்...நித்திலாவிடம் திரும்பி,"ரெண்டு பேரையும் பால்கனிக்கு கூட்டிட்டுப் போம்மா...!",என்றார்.

 

இருவரையும் அழைத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றவள்...இருவருக்கும் தனிமையை அளித்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.விட்டால் தரையில் புதைந்து விடுபவள் போல்...தலையைக் குனிந்தபடி...விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள் திவ்யா.ஒரு காதல் புன்னகையுடன்...அவளது தவிப்பை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தேவதர்ஷன்.

 

"ஸோ...என்ன குழப்பம் உனக்கு...?",எடுத்தவுடனேயே..தனது மனதில் இருந்த குழப்பத்தைக் கண்டு கொண்டு கேள்வி கேட்டவனை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.

 

அவளது ஆச்சரியப் பார்வையைக் கண்டும் காணாமல் விட்டவன்,"உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு...!எதுவா இருந்தாலும் தயக்கமில்லாம...என்கிட்ட சொல்லலாம்....!",மெல்லிய குரலில் அவன் வினவ..

 

"இப்போ...இ..இந்தக் கல்யாணம் வேண்டாம்...!",ஒருவாறாகத் தைரியத்தை திரட்டிக் கொண்டு கூறி முடித்தாள் அவள்.

 

கல்லூரியின் இறுதியாண்டில் அடியெடுத்து வைத்திருந்தவளுக்கு...அப்போதைக்கு படிப்பு மட்டும்தான் மனதில் இருந்தது.சின்னஞ் சிறிய சிட்டாக சிறகடித்துக் கொண்டிருந்தவளுக்கு...அந்தத் திருமண செய்தி ஒரு பயத்தைக் கொடுத்திருந்தது.அந்தப் பயத்தில்தான் அவ்வாறு கூறினாள்.

 

"இப்போதைக்குத்தானே இந்தக் கல்யாணம் வேண்டாம்....!இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா...?",அவளது முகத்தில் தெரிந்த மிரட்சியைக் கண்டு கொண்டவனாய் அவன் குறும்புக் குரலில் வினவ..

 

அவள் இன்னும் அதிகமாக மிரண்டு விழித்தாள்.

 

அவளது மருண்ட பார்வையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த மனதை முயன்று மீட்டெடுத்தவன்...அவளது முகத்தையே தன் கூர் விழிகளால் ஆராய்ந்தான்.

 

"ஒருவேளை...யாரையாவது லவ் பண்றியா...?",இதைக் கேட்கும் போதே அவன் இதயம் 'தட்..தட்'என்று பந்தயக் குதிரையாய் ஓடியது.

 

எப்பொழுது துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் புள்ளி மானாய்...அவளை கல்லூரியில் பார்த்தானோ...அன்றிலிருந்து அவளை ஒரு மகாராணியாய் தன் இதயத்தில் குடியேற்றி கொலு வைத்திருக்கிறான்.தன் காதலை கையில் பிடித்துக் கொண்டு அவன்...அவளது பதிலை எதிர் நோக்கியிருக்க...

 

அவனை ஏமாற்றாமல்,"இல்லை...!",என்று பட்டென்று பதிலளித்து அவன் காதலை உயிர்த்தெழச் செய்தாள் அந்த நங்கை.

 

"உஃப்...!",என்று உதட்டைக் குவித்து மூச்சை வெளியிட்டவன்,"அப்புறம் என்ன பிரச்சனை...?ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற...?",இலகுவான குரலில் வினவினான்.

 

"நான்...நான் படிக்கணும்...!",அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்குமா என்பது சந்தேகமே.

 

"அவ்வளவுதானே...!கல்யாணத்துக்கு பிறகு படி...!நானே உன்னைப் படிக்க வைக்கிறேன்....!",அவன் குரலில் அப்படியொரு மென்மை.

 

ஏனோ..அவனது குரலும்...தன்னைப் பார்க்கும் போது..அவனது கண்களில் தெறித்து விழும் காதலும்...அவளை..அவன்பால் சாய்ப்பதற்கு போதுமானதாக இருந்தது.அதிலும்...கண்களோடு சேர்ந்து அவனது உதடுகள் சிந்தும் குறும்புப் புன்னகை...அவளது மனதிற்குள் இனம் புரியாத சாரலை அள்ளித் தெளித்தது.

 

மனதிற்குள் ஏற்பட்ட குறுகுறுப்பு...அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவளைத் தடுக்க...முந்தானையில் நுனியை சுருக்கிடுவதும்...அவிழ்ப்பதுமாக தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

அவளது அமைதியைக் கவனித்தவன்,"ஒருவேளை...என்னை உனக்குப் பிடிக்கலையோ...?படிக்கணும்ன்னு சொல்றது...இந்தக் கல்யாணத்தை நிறுத்தறதுக்கு ஒரு காரணமோ...?",அவன் கூறிய அடுத்த நொடி...சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.

 

அத்தோடு,"இல்ல...!அப்படியெல்லாம் இல்ல...!",என்றாள் வேகமாக.

 

"அப்படித்தான்...!என்னை உனக்கு பிடிக்கலை....!",அவள் கண்களை விட்டு இம்மியளவும் பார்வையை விலக்காமல்...கூர்மையாக அவளையே பார்த்தபடி அழுத்தமாக கூற..

 

"எனக்குப் பிடிச்சிருக்கு...!",பட்டென்று அவளிடம் இருந்து வந்தன வார்த்தைகள்.

 

"எதை...?என்னுடைய சட்டையையா...?",அவனது சட்டையை விட்டு மேலே ஏறாத அவளது பார்வையை ரசித்தவனாய்...அவன் உல்லாசமாய் வினவ..அவனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.அவளது விழிகள் உயர்ந்து அவனது பார்வையைக் கவ்விக் கொண்டது.

 

"உ..உங்களைப் பிடிச்சிருக்கு...!",சுட்டு விரலை அவனை நோக்கி சுட்டிக் காட்டியபடி கூறியவளின் முகம் அந்தி வானமாய் சிவந்திருந்தது.

 

அவள் கூறிய விதமும்...சிவந்த அவள் முகமும்...அவனது உதடுகளில் ரசனையான புன்னகையை குடியமர்த்தியது.

 

"அப்போ...கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லிடலாமா...?",மெலிதாக விசிலடித்தபடி ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் வினவ..

 

"ம்ம்...!",நாணமும் காதலும் போட்டி போட 'உம்' கொட்டி விட்டு ஓடி விட்டாள் திவ்யா.

 

அதன் பிறகு...மளமளவென்று வேலைகள் நடந்தேறின.இன்னும் மூன்று மாதம் கழித்து வரும் மூகூர்த்தத்தில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.

 

அங்கு...இரு உள்ளங்கள் கல்யாணக் கனவுகளில் மிதக்க ஆரம்பித்தன...!

 

*****************************

 

நாட்கள் உருண்டோட...வாரங்கள் மாதங்களாயின...!திவ்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது என்ற நிலையில்...அனைவரும் கல்யாண வேலைகளில் தங்களை மூழ்கடித்துக் கொண்டனர்.நித்திலா..சுமித்ரா மற்றும் திவ்யா ஆகிய மூவரும் மணப்பெண்ணிற்குத் தேவையான உடைகள்...நகைகள் மற்றும் பிற சாமான்கள் வாங்குவது என கடைவீதி கடைவீதியாக சுற்றிக் கொண்டிருந்தனர்.

 

 

திருமணத்திற்கான மற்ற வேலைகளை ஆதித்யனும்...கௌதமும் கவனித்துக் கொண்டனர்.பெரியவர்கள் என்ற முறையில் மாணிக்கமும்...லட்சுமியும் தான் முன்னின்று ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்தனர்.இப்படியாகத் திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.

 

தேவதர்ஷன்..திவ்யாவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை...!இருவரும் விழிகள் நிறைய கனவுகளை சுமந்து கொண்டு...அலைபேசியை கதியென்று கிடந்தனர்.

 

அன்று ஆதித்யனின் பிறந்த நாள்...!முதல் நாளே கடைவீதிக்குச் சென்று ஆதித்யனுக்காக பார்த்து பார்த்து ஒரு கைக்கடிகாரத்தை வாங்கி வந்திருந்தாள் நித்திலா.அதன் விலையே லட்சக்கணக்கில் வந்தது.அவள் வேலை செய்த காலங்களில் சேமித்து வைத்திருந்த பணத்தில் அதை வாங்கியிருந்தாள்.

 

ஆழ்ந்த  உறக்கத்தில் இருந்த ஆதித்யனின் இமைகளின் மீது சில்லென்று ஏதோ குறுகுறுக்கவும்...முகத்தைச் சுளித்தபடி திரும்பிப் படுத்தான்.இப்பொழுது அந்த குறுகுறுப்பைத் தனது காதோரத்தில் உணர்ந்தவன்...தூக்கம் கலைய..எரிச்சலுடன் கண் விழித்தான்.

 

எரிச்சலுடன் இமைகளைப் பிரித்தவனின் விழிகளில் அடுத்த கணம்...காதல் அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொண்டது.தலைக்குக் குளித்திருந்த ஈரக் கூந்தலை விரித்து விட்டபடி...தன் கூந்தல் நுனியால் அவனது காதோரத்தில் குறுகுறுப்பு மூட்டிக் கொண்டிருந்தாள் அவனது செல்ல பேபி...!

 

இவன் கண் விழித்ததும்...அவனைப் பார்த்து 'களுக்'கென்று சிரித்து வைத்தாள்.

 

"என்னடி...?காலையிலேயே இப்படி ஒரு தரிசனம் தர்ற...?",மயில் கழுத்து வண்ணத்தில் புடவையணிந்து கொண்டு...தோகை விரித்தாடும் இளம் மயிலாய் கூந்தலை விரிய விட்டிருந்தவளை ரசனையுடன் பார்த்தபடி வினவினான் ஆதித்யன்.

 

"என் குட்டிப் பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!",அவனது காதோரம் குனிந்து மெல்ல முணுமுணுத்தாள் அவள்.கணவனது பிறந்தநாள்...அவளது மனத்தில் இருந்த கோபத்தையும்...உறுத்தலையும் அப்போதைக்கு மறைத்திருந்தது.

 

"ரொம்பவும் அழகான பிறந்தநாள்...!",மயக்கத்துடன் கூறியவனின் கரங்கள் அவளைத் தன்னை நோக்கி இழுத்தன.

 

அவனது செயலை எதிர்க்காமல்...படுத்திருந்தவனின் மார்பில் தலை வைத்து வாகாக சாய்ந்து கொண்டவள்...அவனது இடது கையைப் பற்றி தான் வாங்கியிருந்த கைக்கடிகாரத்தை கட்டி விட்டாள்.

 

"என்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு...அதனோட எஜமானியுடைய பரிசு...!",அவன் விழி பார்த்து உரைத்தவளின் விழிகளோடு தன் பார்வையைக் கலந்தவன்..

 

"தேங்க்ஸ் டி குட்டிம்மா...!ரொம்ப அழகாயிருக்கு...!",என்றபடி அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

 

சிறிது நேரம் அமைதியில் கழிய...பிறகு அவனே ஆரம்பித்தான்.

 

"பேபி...!",

 

"ம்....!",

 

"என் பிறந்தநாளுக்கு நான் கேட்கிற பரிசைத் தருவியா...?",அவன் குரல் தாபமாய் வெளிவந்தது.

 

"எ..என்ன...?",

 

"உன் முத்தம்...!உன் குட்டிப்பையனுக்காக ஒரே ஒரு முத்தம் இங்கே தருவியா...?",அவன் தன் உதடுகளைத் தொட்டுக் காண்பித்து வினவ..

 

அவ்வளவு நேரம் இருந்த இணக்க நிலை மாறியவளாய் பட்டென்று எழுந்தாள்.ஏனோ...ஆதித்யன் அவளைக் கணவனாகா நெருங்கும் போதெல்லாம்...அவளுக்கு தன்னுடைய விருப்பம் இல்லாமல்...தன்னுடைய சம்மதத்தை பொருட்படுத்தாது..தன் கழுத்தில் தாலி கட்டிய ஆதித்யனின் பிடிவாதம் தான் ஞாபகத்திற்கு வந்தது.

 

'என்னுடைய விருப்பத்திற்கு இவரிடம் இருக்கும் பதில்தான் என்ன...?',என்ற கேள்வி மனதில் எழுந்து அவளை இறுகச் செய்து விடும்.

 

அப்பொழுதும் அதே கேள்வி மனதில் எழ...அவனை விட்டு விலகியவள்,"குளிச்சிட்டு கீழே வாங்க...!",அவன் முகம் பார்க்காமல் உரைத்து விட்டு வெளியேறி விட்டாள்.

 

சிறு பெருமூச்சை வெளியிட்டபடி குளியலறைக்குள் புகுந்தவன்..குளித்து முடித்து விட்டு...அவள் தயாராய் எடுத்து வைத்திருந்த கோட் சூட்டை அணிந்து கொண்டான்.நிலைக்கண்ணாடியில் தெரிந்த தனது பிம்மத்தைப் பார்த்தபடி கழுத்து டையை சரி செய்து கொண்டிருந்தவனின் கண்களில்...நித்திலா பரிசளித்த கைக்கடிகாரம் வந்து விழுந்தது.

 

காதல் புன்னகையோடு அதைக் கையிலெடுத்தவன் தன் மணிக்கட்டில் கட்டிக் கொண்டான்.ஏதோ அவளையே முத்தமிடுவது போல்...மிக மென்மையாய் அந்தக் கைக்கடிகாரத்தில் தனது உதடுகளை ஒற்றி எடுத்தவன்...பிறகு தனது செயலை நினைத்து வெட்கியவனாய்...புன்னகையோடு வெளியேறினான்.

 

தாத்தா...பாட்டியிடமும்...தாய் தந்தையிரடமும் ஆசிர்வாதம் வாங்கியவன்..அனைவரது வாழ்த்துக்களையும் மனநிறைவோடு பெற்றுக் கொண்டான்.வழக்கம் போல் நித்திலா பரிமாற...சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதித்யன்..

 

"பேபி...!நான் கேட்ட கிஃப்ட் ஞாபகம் இருக்கா...?",அடிக்குரலில் முணுமுணுக்க..

 

அவளோ,"கேசரி சாப்பிடுங்க...!நானே செய்தது...!",என பேச்சை மாற்றினாள்.

 

அவள் பேச்சை மாற்றுவதைப் புரிந்து கொண்டவன்...சிறு கடுப்புடன் நிமிர்ந்து பார்க்க..நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில் வெண்ணெய் போன்ற குழைவான அவளது இடுப்பு பிரதேசம் கண்ணில் பட...'நறுக்'கென்று கிள்ளி வைத்து விட்டான்.

 

"ஆ....!",என்று துள்ளி அலறியவள்..வெகு பாடுபட்டு கையில் இருந்த பாத்திரத்தைக் கீழே போடாமல் சுதாரித்தாள்.

 

சாப்பிட்டுக் கொண்டிருந்த சுந்தரம் தாத்தாவும்...கமலா பாட்டியும் இவளது அலறலில்,"என்னாச்சு ம்மா...?",என்றபடி நிமிர்ந்து அவளைப் பார்க்க...அவளோ...'என்ன சொல்வது..?',என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.

 

ஆதித்யனோ...படு சமர்த்தாய் அமர்ந்து நல்ல பிள்ளை போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

"என்னாச்சுன்னு சொல்லு பேபி...?பெரியவங்க கேட்கிறாங்க அல்ல...?",குறும்புப் புன்னகையுடன் கேள்வி வேறு கேட்டு வைத்தான்.

 

அவனது முகத்தில் வழிந்த குறும்பில்...அவளுக்குள்ளும் துடுக்குத்தனம் தலைதூக்கியது.

 

'இருடா...!சொல்லி வைக்கிறேன்...!',பார்வையாலேயே அவனுக்கு சேதி சொல்லியவள்..

"இங்கே பாருங்க பாட்டி...!உங்க பேரன் சும்மா இருக்காமல்...என் இ...",அதற்கு மேல் என்ன சொல்லியிருப்பாளோ..

 

அதற்குள்,"அய்யய்யோ....!",என்ற ஆதித்யனின் அலறலைக் கேட்டு அனைவரும் அவன் புறம் திரும்பினர்.

 

"புரை ஏறிக்கிச்சு தாத்தா...!ம்க்கும்...ஏய்ய்....தண்ணி கொடு டி....!",நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமியபடி அவர்களை சமாளித்தவன்...திரும்பி நித்திலாவை முறைத்தான்.

 

"அச்சோ...!பார்த்து சாப்பிடக் கூடாதா அத்தான்....!",அவனைப் பார்த்து கண் சிமிட்டியபடி தண்ணீர் கிளாஸை எடுத்து அவன் கையில் திணித்தாள்.

 

'ராட்சசி...!இருடி...!உன்னை வைச்சுக்கிறேன்....!',ரகசியமாய் அவன்...அவளை மிரட்ட...அவளோ...உதட்டை நெளித்து வளைத்து சுளித்து பழிப்புக் காட்டினாள்.

 

ஒரு கணத்திற்கும் அதிகமாகவே அவள் இதழ்களில் நிலைத்த தனது பார்வையை வெகு சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன்...ஒருவாறாக சாப்பிட்டு முடித்து எழுந்தான்.

 

அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வாசலுக்கு விரைந்தவனின் பின்னாலேயே அவனை வழியனுப்புவதற்காக விரைந்தாள் நித்திலா.வாசலுக்கு வந்தவன் யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு...அவளது கைகளைப் பிடித்து இழுத்தபடி...முல்லைக் கொடியின் மறைவுக்குச் சென்றான்.

 

"என்னை விடுங்க...!",திமிறியவளின் இடையை தன் இரு கரங்களாலும் அழுத்தப் பற்றி சிறை செய்தவன்..

 

"என்னடி...?அவ்வளவு தைரியமா....?தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லப் போற....?இப்போ இதையும் போய் சொல்லுடி...பார்க்கலாம்...!",கூறியபடியே அவளது இதழ்களை சிறை செய்யும் நோக்கத்துடன் அவள் முகம் நோக்கி குனிய..

 

கண்ணிமைக்கும் நேரத்தில் அவனிடம் இருந்து திமிறி விலகியவள்...அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு ஒரே ஓட்டமாக உள்ளே ஓடி விட்டாள்.

 

"ராட்சசி...!",வாய்க்குள் முணுமுணுத்தவன் தனக்குள் புன்னகைத்தவாறே அவ்விடத்தை விட்டு அகன்றான்.

 

அலுவலகத்திற்குச் சென்று ஆதித்யனோடு மதிய உணவை உண்டு விட்டு...வீட்டிற்கு வந்த நித்திலாவிற்கு தூக்கம் கண்களை சுழற்ற...இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கி விட்டாள்.மாலை ஐந்து மணிக்கு ஆதித்யன் வந்துதான் எழுப்பினான்.

 

"நல்ல தூக்கமா பேபி...?",

 

"ம்ம்...!",கொட்டாவியை வெளியேற்றியபடியே அவள் 'உம்' கொட்ட..

 

"சரி...!கிளம்பு....!எங்கேயாவது வெளியே போய்ட்டு வரலாம்....!",அணிந்திருந்த கோட்டை கழட்டியபடியே அவளிடம் கூறினான்.

 

'வெளியே போகலாம்...!' என்ற வார்த்தையில் விழிகளில் ஒட்டிக் கொண்டிருந்த மிச்ச தூக்கமும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து விட..

 

"ஹைய்....ஜாலி....!எங்கே போகலாம்....?",குதூகலித்தாள் நித்திலா.

 

"உன் இஷ்டம்....?",

 

"ஹ்ம்ம்...!அப்போ...ஃபர்ஸ்ட் கோவில்..அப்புறம் பீச்...கடைசியா டின்னரை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திடலாம்....!",அவசர அவசரமாக திட்டம் போட்டவள்...அடுத்த அரை மணி நேரத்தில்...ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் அங்கங்கு தங்க நிறத்திலான மணிக்கற்கள் கோர்க்கப்பட்ட ஷிபான் புடவையில்..செம்பருத்தி பூவாய் தாயாராகியிருந்தாள்.

 

ஆதித்யனுக்கும் வழக்கமாக அணியும் கோட் சூட்டை விடுத்து...ஜீன்ஸ் பேண்டும் வெள்ளை நிற டீ ஷர்ட்டும் எடுத்து வைத்தவள்...லட்சுமியிடம் சொல்வதற்காக கீழே இறங்கிச் சென்றாள்.

 

அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் காரில் ஏறினர்.

 

இருவரும் அடிக்கடி வரும்...ஊருக்கு வெளிப்புறத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குச் சென்று மனமார வேண்டி விட்டு கடற்கரைக்குச் சென்றனர்.

 

அன்று பௌர்ணமி....!நட்சத்திரங்கள் மின்னும் வான வெளியில் பால் சிந்தும் நிலவு மகள்...தனது முழு பரிவாரங்களுடன் பவனி வந்து கொண்டிருந்தாள்.அவளைக் கட்டித் தழுவும் ஆவேசத்துடன்...கடல் அலைகள் ஆக்ரோஷமாய் வானை நோக்கி சீறின...!அப்படி இருந்தும்...நிலவு மகளின் சுண்டு விரலைக் கூட ஸ்பரிசிக்க முடியாத ஏக்கத்தில்...ஆக்ரோஷமாய் பொங்கி வந்த கடலலைகள் கரையில் மோதி உயிர் விட்டன...!

 

கடற்கரை மணலில் ஆதித்யனுடன் அமர்ந்து இக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.இருவருக்குள்ளும் மௌனம் மட்டுமே குடி கொண்டிருந்தது.மௌனத்தை விட சிறந்த மொழி வேறு எதுவும் உலகத்தில் இருக்க முடியாது...!அதிலும்...காதல் வயப்பட்டவர்களுக்கு மௌனம்தான் விழியாகும்....!

 

வெகு நேரம் பால் நிலவையும்...கடல் அலைகளையும் ரசித்துக் கொண்டிருந்தவர்கள்...நேரமாவதை உணர்ந்து கிளம்பினர்.உயர்தர நட்சத்திர ஹோட்டலில்...ரூஃப் கார்டனுக்கு  மத்தியில் அமர்ந்திருந்தனர் ஆதித்யனும்..நித்திலாவும்.

 

சுற்றிலும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்க...பசுமைப் புல்வெளியாய் தரை விரிந்திருக்க...செயற்கையாய் வடிவமைக்கப்பட்டிருந்த நீரூற்றில் இருந்து அருவி போல் நீர் கொட்டிக் கொண்டிருக்க...மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திற்கு நடுவில் தேவதையாய் அமர்ந்திருந்த நித்திலாவை...விழி எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.

 

அவனது பார்வையில்...கட்டியிருந்த புடைவைக்கு இணையாய் குங்கும நிறம் கொண்ட முகத்தை மறைப்பதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள் அந்த மங்கை.

 

"அழகா இருக்கே டி ராட்சசி...!",அவளைக் கடித்து தின்பதைப் போல் பார்த்து வைத்தபடி அவன் கூற..

 

"ஷ்...!இப்படிப் பார்க்காதீங்க...!",இமைகள் படபடத்தபடி முணுமுணுத்தாள் அவள்.

 

"இப்படி பார்க்கவா....?",கேட்டவனின் பார்வை வெட்கமில்லாமல் அவளது மேனியில் படர்ந்து பரவி ஊர்ந்து மேய....இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டு தலை குனிந்தாள் அவள்.

 

'கள்ளன்...!எப்படி பார்க்கிறான் பாரு...!',மனதிற்குள் செல்லமாக அவனைத் திட்டிக் கொண்டிருக்கும் போதே....சர்வர் வந்து ஆர்டர் செய்த உணவு வகைகளை மேசையில் பரத்தி விட்டு சென்றான்.

 

அவனது பார்வையைக் கண்டு கொள்ளாதது போல்...அவள் சாப்பிட ஆரம்பிக்க...அவனோ...அவளை சாப்பிட்டவாறே,"என்னுடைய கிஃப்ட்டை எப்போ தருவ பேபி....?",என்று கேட்டு வைத்தான்.

 

சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு புரையேற...அவசர அவசரமாகத் தண்ணீரை எடுத்துப் பருகியவள்,"நான்தான் உங்களுக்கு காலையிலேயே கிப்ட் கொடுத்துட்டேனே....?",அவளது பார்வை அவன் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் படிந்தது.

 

"நான் என்ன கிஃப்ட் கேட்கிறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்....!",பிடிவாதத்துடன் கூறியவனின் பார்வை அழுத்தத்துடன் அவளது இதழ்களில் நிலைத்தது.

 

"சூடு ஆறிடப் போகுது...!முதல்ல சாப்பிடுங்க...!",அவனது பிடிவாதத்தை கண்டும் காணாமல் விட்டவளாய் அவள் கூற..

 

அவனோ...கூர்மையான பார்வையை அவளது விழிகளுக்குள் செலுத்தியவனாய்,"ஏன் மறுக்கிறே நித்திலா...!",என்றான் ஒரு வித அழுத்தத்துடன்.

 

அவனது பார்வையை சந்திக்க முடியாமல் மனதுக்குள் ஏதோ நெருட...உணவை அளைந்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

"இன்னும் எவ்வளவு நாள்தான் என்னை காத்திருக்க வைப்ப....?",அவன் குரலில் இருந்தது கோபமா...?தாபமா....?என்பதை அவளால் கண்டறிய முடியவில்லை.

 

அவளிடம் கேள்வி கேட்டவன்...அதன் பிறகு ஒன்றும் நடக்காததைப் போல் சாப்பிட ஆரம்பித்தான்.நித்திலாதான் மனதிற்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

 

'என் மனசு முழுக்க அவர் மேல காதல் இருந்தும்...என்னால அவரை நெருங்க முடியலையே...?',என்று மருகிக் கொண்டிருந்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது.தன்னுடைய கேள்விக்கு அவனிடமிருந்து பதில் கிடைக்காமல்...தன்னால் அவனுடன் நெருங்க முடியாது...என்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.

 

அவளது மனதில் ஏதோ குழப்பம் இருப்பதைக் கண்டு கொண்டவனாய்...சிரித்து பேசி அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தான்.இருவரும் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும்...மனதிற்குள் அவரவர் யோசனைகளில் மூழ்கியிருந்தனர்.

 

ஒருவழியாக...இரவு உணவை முடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வரும் போது அனைவரும் உறங்கியிருந்தனர்.

 

ஆதித்யன்...கதவை எல்லாம் அடைத்து விட்டுத் தங்களது அறைக்குள் நுழையும் போது...நித்திலா உடையைக் கூட மாற்றாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.இல்லை...இல்லை...உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தாள்...!

 

அவளருகில் வந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன்.."என்னுடைய பிறந்தநாள் அன்னைக்கு...நான் ஆசையா கேட்டப் பரிசைக் கூட உன்னால தர முடியலைல்ல...?அந்தளவுக்கு என்னை வெறுத்திட்டியா பேபி....?",அவனது குரலில் அப்படியொரு வலி...!

 

இமைகளை மூடிப் படுத்திருந்தவளைப் பார்த்து வலியோடு வினவிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டான் ஆதித்யன்.

 

திகைத்துப் போய் எழுந்தமர்ந்த நித்திலாவின் மனதிலும் வலி..வலி...வலி மட்டுமே...!அவன் குரலில் தெரிந்த வலி நேராக சென்று அவளது காதல் இதயத்தைத் தாக்க...எதையும் யோசிக்காமல் சட்டென்று எழுந்தவள்...அவனை நோக்கி நடந்தாள்.

 

ஒரு பக்கம் முழுவதுமாய் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியின் வழியாகத் தெரிந்த முழு நிலவை வெறித்தபடி...கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன்.

 

அவன் தோளைப் பற்றித் தன் புறம் திருப்பியவள்...அவன் கண்களோடு தன் விழிகளைக் கலந்தவாறு...அவன் உயரத்திற்கு தன் கால்களை எம்பி..அவன் உதடுகளோடு தன் இதழ்களைப் பிணைத்தாள்.

 

தன் இதயத்தின் மொத்தக் காதலையும்...அந்த முத்தத்தின் வாயிலாக அவனுக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள் அவள்...!கண்களை மூடி..அவளது முத்தத்தில் தெறித்து விழுந்த காதலில் துளித் துளியாய் நனைந்து கொண்டிருந்தான் அவன்....!அவன் மனதில் இருந்த வலி காணாமல் போயிருந்தது.

 

அந்தக் கட்டழகி இன்னும் இதழ் யுத்தத்தில் தேர்ச்சி பெறவில்லை போலும்...!தட்டுத் தடுமாறி அவள் விழித்துக் கொண்டிருக்கும் போது...சட்டென்று அவளது செயலைத் தனதாக்கி கொண்டான் அந்தக் கள்வன்.

 

அவளது சிற்றிடையைத் தன் இரு கைகளாலும் அழுந்தப் பற்றித் தன் உயரத்திற்கு தூக்கியவன்..இதழ் யுத்தத்தின் ரகசியத்தை அவளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.அவளும்...அவன் கற்றுக் கொடுத்த வித்தையை எல்லாம் சமர்த்துப் பிள்ளையாய் கற்றுக் கொண்டாள்.

 

மூச்சுக்காற்றுக்காக அவள் ஏங்கித் தவித்த போது கூட...அவளது இதழ்களை விட்டு விலகாமல் தன் உயிர்மூச்சை அவளுக்கு சுவாசமாக்கியவன்...அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கையை நோக்கி நடந்தான்.

 

இருவரின் விழிகளிலும் அப்பட்டமாய் காதல் மயக்கம் தெரிய...விழித்துக் கொண்டு பேயாட்டம் போட்ட உணர்வுகளை அடக்க விரும்பாமல்...விருப்பத்துடன் தொலைந்து போக ஆரம்பித்தினர்..

 

அவளது விழிகளைத் தனது காதலால் கட்டிப் போட்டவன்...மிக மென்மையாய் அவளை மெத்தையில் கிடத்தினான்.இவர்கள் போட்டுக் கொண்ட இதழ் யுத்தத்தின் போதே...அவளது புடவை அவளை விட்டு விலகி தரையைத் தஞ்சமடைந்திருந்தது.

 

பூ மாலையாய் மெத்தையில் படுத்திருந்தவளின் மேல்..காற்றாய் மாறி படர்ந்தவன்...அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.அவனது மீசை முடிகளின் தீண்டல்களிலும்....கரங்களின் சீண்டல்களிலும் கூசிச் சிலிர்த்து செந்நிறம் கொண்டது அந்தப் பெண்மை.

 

கழுத்து வளைவில் குடியிருந்த அவனுடைய உதடுகள் மெல்ல மெல்ல கீழிறங்கி அவளது நெஞ்சுக்குழியில் அழுத்தமாய் புதைந்து முத்தராத்தை சூட்ட ஆரம்பிக்க...அவனது கரங்களோ...அவளது மேனியில் எல்லைகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தது.

 

ஆழ்கடலின் நடுவே சுழலில் சிக்கி கொண்ட துரும்பாய்...அவனது தீண்டலில் மூழ்கி கொண்டிருந்தவளின் மனதில் பட்டென்று அந்தக் கேள்வி எழுந்தது.

 

'என் விருப்பம் இல்லாமல்...இவர் எப்படி என் கழுத்தில் தாலி கட்டலாம்...?என்னுடைய விருப்பத்திற்கு...இவருடைய பதில்தான் என்ன...?',அதுநாள் வரை மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி...அப்பொழுதும் அவள் கண் முன் தோன்ற...அவனிடமிருந்து விலகப் போராடினாள்.

 

மலர்த் தோட்டங்களுக்கு நடுவில் சுகமாய் தொலைந்து கொண்டிருந்தவனுக்கு...அவளுடைய விலகல் உரைக்கவில்லை.

 

"ஷ்....!பேபி...!தடுக்காதே டா...!",காதல் போதையில் பிதற்றியவன் அவளது எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் முன்னேற...ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலும் போராட முடியவில்லை.

 

எங்கே போராடுவது...?உடலும் மனதும் தன்னவனின் தொடுகையில்...ஆதவனைக் கண்ட அல்லியைப் போல் மலர்ந்து மணம் பரப்பும் போது...பாவையவளாலும் எவ்வளவு நேரம்தான் போராட முடியும்....?

 

அவனது தீண்டலில் ஒரு மனம் உருகினாலும்...இன்னொரு மனம் விழித்துக் கொண்டு கேள்விகளைத் தொடுக்க...இரண்டு மனங்களுக்கு இடையிலும் நடந்த போராட்டத்தில் சோர்வுற்றவளாய் அவள் தளர...அவள் விழிகளில் இருந்து விழிநீர் வழிந்தது.

 

அவளது முகத்தோடு முகம் இழைத்திருந்தவனின் உதடுகள் சூடான கண்ணீரை உணர...அடுத்த நொடி..தீச்சுட்டாற் போல் அவனை விட்டு விலகினான்.

 

அவன் விலகியதைக் கூட உணராமல்...விழிகளை அழுந்த மூடிக் கொண்டு...முகம் கசங்க...கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.அவளது கண்ணீரைப் பார்த்தவனுக்கு கட்டுக் கடங்காமல் கோபமும் வலியும் பெருக...

 

"என்னுடைய தொடுகை...உன் கண்கள்ல கண்ணீரை வரவழைக்குதா...?அந்தளவுக்கு என்னை அருவெறுக்கிறயா...?",கேட்டவனின் குரலில் வலியும்...கோபமும் கலந்திருந்தது.

 

அவனுடைய கேள்வியில் விதிர்த்துப் போய் எழுந்து அமர்ந்தவள்...தான் இருக்கும் நிலையை உணர்ந்து அவசர அவசரமாக அங்கிருந்த போர்வையால் தன்னை மூடிக் கொண்டாள்.

 

"ம்...மறைச்சுக்கோ...!நான் ரோட்ல போகிற யாரோ ஒருத்தன் பாரு...!நான் எல்லாம் பார்க்க கூடாது...!நல்லா மறைச்சுக்க....!",அவன் அதற்கும் எரிந்து விழுந்தான்.

 

அவள் தலைகுனிந்து மெளனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க..

 

"எதுக்கு டி இப்போ அழற...?எதைப் பிடிச்சுக்கிட்டு இப்போ...இப்படி தொங்கிக்கிட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியல...!என்னைக் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட...?உன் மனசில என் மீதான காதல் இருக்குதுதானே...?அப்புறம் ஏன்...ஏதோ மூணாம் மனுஷன் தொட்ட மாதிரி முகத்தைச் சுருக்கறே...?",அவனால் அவளது கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதிலும்...காதலாய் தான் தொட்ட தொடுகையை எண்ணி அவள் அழுவது...அவனுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது.

 

"ச்சே...!நான் ஒரு கேனையன்...!உன்கிட்டே போய் காதல் இருக்குதான்னு கேட்டுட்டு இருக்கேன் பாரு...!உனக்குத்தான் என் மேல காதல் இருந்திருந்தால்..அநாதை மாதிரி என் காதலைத் தூக்கியெரிய துணிஞ்சிருக்க மாட்டியே...?'நான் வேண்டாம்...!என் காதல் வேண்டாம்..!'ன்னு என் காதலுக்குத் துரோகம் பண்ணினவள்தானே நீ....!துரோகி....!",சுட்டு விரலை நீட்டி அவன் சுமத்திய குற்றத்தில் அவள் மனம் உடைந்தது.

 

'நான் இவரைக் காதலிக்கலையா...?நான் துரோகியா...?',அவளது காதல் மனம் கேள்வி கேட்க..அவளுக்கும் கோபம் வந்தது.

 

"என்ன சொன்னீங்க....?எனக்கு உங்க மேல காதல் இல்லையா....?நான் துரோகியா...?நான் துரோகின்னா...அப்போ நீங்க யாரு...?என் விருப்பம் இல்லாமல்...என் கழுத்துல தாலி கட்டி என் நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணிட்டீங்க....!உங்களுக்கு என் மேல் காதல் இருந்திருந்தால்..என் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்திருப்பீங்க...!எனக்கு விருப்பம் இல்லைன்னு தெரிந்தும்...நான் அவ்வளவு கண்ணீர் விட்டும்..என் விருப்பத்துக்கு எதிரா நம்ம கல்யாணத்தை நடத்தியிருக்க மாட்டீங்க....!உங்களுக்குத் தேவை உங்களுடைய ஆசை...உங்களுடைய விருப்பம் மட்டும்தான்...!

 

என்னுடைய விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காமல்...என்னுடைய நம்பிக்கையை கொன்ன துரோகி நீங்க....!",அவள் கூறி முடித்த அடுத்த நொடி...அவனது கரம் இடியாய் அவளது கன்னத்தில் இறங்கியது.

 

"என்னடி சொன்ன....?",புலியாய் உறுமியவன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்த்திருந்தான்.

 

மிளகாயை அரைத்துப் பூசியதைப் போல கன்னத்தில் எரிச்சல் பரவ...கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் நித்திலா.

 

"நான் துரோகியா...?உன் நம்பிக்கையை நான் கொன்னேனா...?என்னுடைய நம்பிக்கையைத்தான் டி...வலிக்க வலிக்க நீ குழி தோண்டி புதைச்சிட்ட....!'என்னுடைய விருப்பம்...என்னுடைய விருப்பம்...'ன்னு பெரிசா பேசிக்கிட்டு இருக்கிறயே..அந்த உன்னுடைய விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து அன்னைக்கு நான் விலகியிருந்தேன்னா...இந்நேரம் நீ இன்னொருத்தன் கையால தாலி வாங்கிட்டு...அவன்கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருந்திருப்ப...!எங்கே உன் மனசைத் தொட்டுச் சொல்லு...!நீ காலம் முழுக்க கன்னியாவே இருக்கறதுக்கு உன் அம்மா அப்பா சம்மதிப்பாங்களா...?",ஆக்ரோஷமாய் கேள்வி கேட்டவனுக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

 

அவனுடைய ரௌத்திரத்தில்...முழங்கால்களை கட்டிக் கொண்டு கட்டிலோடு ஒன்றினாள் அவள்.

 

"சொல்லு டி...!உன் அப்பா அம்மா உன் மேல வைச்ச நம்பிக்கைக்காக என் காதலை தூக்கியெறிய துணிந்த நீ...அதே அப்பா அம்மாவுடைய கண்ணீருக்காக இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட துணிய மாட்டேங்கிறதுக்கு என்ன நிச்சயம்...?",சாட்டையடியாய் சுழன்றடித்த கேள்வியில் அவளது பெண்மை அடிவாங்கி சிலிர்த்து நிமிர்ந்தது.

 

"இல்லை...!உங்களைத் தவிர இன்னொருத்தனோட நிழலைக் கூட என்மேல விழ விட மாட்டேன்...!நீங்க இல்லாம...இன்னொருத்தன் கையால நான் தாலி வாங்கியிருக்க மாட்டேன்...!சத்தியமா மாட்டேன்....!",கதறித் துடித்துக் கண்ணீர் விட்டவளை அந்நியப் பார்வை பார்த்து வைத்தவன்..

 

  "அதை நான் எப்படி நம்பறது...?",என்று இரக்கமில்லாமல் கேட்டு வைத்தான்.

 

துடித்து நிமிர்ந்தவளின் உதடுகள்,"ஆது...!",என்று அதிர்ச்சியாய் முணுமுணுக்க..

 

அவளது அதிர்ச்சியைக் கண்டும் காணாமல் விட்டவன்,"எதை வைச்சு என்னை நம்ப சொல்ற...?உன்னுடைய பெத்தவங்களுக்காக நம்மளுடைய காதலை தூக்கியெறிந்தவள்தானே நீ...!அப்படிப்பட்ட நீ இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்தவும் தயங்க மாட்ட...!",அக்னியாய் வார்த்தைகளை உமிழ்ந்தான் ஆதித்யன்.

 

அவனுடைய காதலைத் தூக்கியெறியத் துணிந்த அவளுடைய செயல்...அவனுடைய மனதில் காயத்தை ஏற்படுத்தியிருந்தது...!உள்ளே உறுத்திக் கொண்டிருந்த ரணம் சமயம் பார்த்து வெளிப்பட்டு...அந்த ரணத்திற்கு காரணமானவளைக் கடித்துக் குதறியது..!

 

அதிர்ச்சியில் விழியகல அவனைப் பார்த்தபடி சிலையாய் சமைந்து விட்டாள் அந்தப் பேதை...!

 

"காதலுக்காக யாராவது ஒருத்தர் போராடித்தான் ஆகணும் டி...!'நான் போராட மாட்டேன்..'ன்னு ஓடி ஒளிஞ்ச கோழை டி நீ...!நம்மளுடைய காதலை தன்னந் தனியா தவிக்க விட்டுட்டு ஓடத் துணிந்தவள் நீ...!ரெண்டு பேரும் கை கோர்த்து போராட வேண்டிய போராட்டத்தை..ஒத்தையாளா நின்னு நான் போராடினேன்...!அந்தப் போராட்டத்தோட விளைவுதான் இது...!",என்றபடி அவள் கழுத்தில் கிடந்த மாங்காயத்தை எடுத்துக் காட்டினான்.

 

"அப்போ...எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்ன்னு நீ யோசிச்சுப் பார்த்தியா டி...?உன் விருப்பத்துக்கு எதிரா நான் எடுத்து வைச்ச ஒவ்வொரு அடியையும்...இதயம் வலிக்க வலிக்க எடுத்து வைச்சேன்...!",தன் இதயம் இருந்த பகுதியைத் தொட்டுக் காண்பித்துக் கூறியவன்..

 

" 'என்னுடைய விருப்பதுக்கு உங்களுடைய பதில்தான் என்ன..?'ன்னு என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறியே...?இப்போ...நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்..பதில் சொல்லு...!என்னுடைய காதலுக்கு உன்னுடைய பதில்தான் என்ன...?",அவளது விழிகளுக்குள் ஆழப் பார்வை பார்த்தபடி கேள்வியெழுப்பியவனுக்கு பதில் கூற அவளிடம் விடை இல்லை.

 

அவனுடைய ஒவ்வொரு கேள்வியும்...ஒவ்வொரு வார்த்தையும் அவன் அனுபவித்த வலிகளையும்..அவளது தவறையும் சுட்டிக்காட்ட...பெரும் கேவலொன்று அவளது தொண்டைக்குழிக்குள் இருந்து எழுந்தது.

 

அவளது கண்ணீரைப் பார்த்தவனின் மனம் இரும்பாய் இறுக,"புல்ஷிட்...!",பல்லைக் கடித்தபடி அருகிலிருந்த டீபாயை எட்டி உதைத்தான்.அது பத்தடி உருண்டு சென்று சுவரில் மோதி உடைய...அவனுடைய கோபத்தில் அவள் உடல் நடுங்க மிரண்டு விழித்தாள்.

 

ஆத்திரத்தோடு அவளை உறுத்து விழித்தவன்..புயலாய் அறையை விட்டு வெளியேறினான்.அவன் வெளியேறிய சில நிமிடங்களிலேயே...அவனுடைய கார் சீறிப் பாய்ந்து கொண்டு பறக்கும் சத்தம் கேட்க,'ஐயோ...!இந்த ராத்திரியில எங்கே போறாரு...?',பதறியபடியே எழுந்து வெளியே ஓடப் போனவளை..அவள் இருக்கும் நிலை தடுக்க..அப்படியே மடிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

 

அவனது ஒவ்வொரு வார்த்தைகளும்...அவளது நெற்றிப்பொட்டில் அறைந்தன.

 

'உண்மைதானே...!அவருடைய காதலுக்கு என்னிடம் இருக்கும் பதில்தான் என்ன...?அவருடைய காதலை தூக்கியெறிய துணிந்தவள்தானே நான்...!எங்களுடைய காதலை அநாதை மாதிரி தவிக்க விட்டவள்தானே நான்...!'அவள் மனம் ஊமையாய் கதறித் துடித்தது.

 

'அப்பா அம்மாகிட்ட சொல்லி...எங்களுடைய காதலுக்காக நான் போராடி இருக்கணும்...!அவரு சொன்ன மாதிரி...போராட மறுத்த கோழை நான்...!அவரைத் தனியா போராட விட்டு இருக்கிறேனே...?அவருடைய மனசு என்ன பாடுப்பட்டிருக்கும்....?',அவளது காதல் மனம் விழித்துக் கொண்டு அவள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியது.

 

'என்னை மன்னிச்சிடுங்க ஆது...!உங்க காதலுக்கான பதிலை நிச்சயம் நான் தருவேன்...!',மனதிற்குள் சபதமிட்டுக் கொண்டாள் அவள்.

 

வெகுநேரம் அழுகையில் கரைந்து கொண்டிருந்தவள்...நள்ளிரவைத் தாண்டி அவளையும் அறியாமல் உறங்கியிருந்தாள்.விடியலின் தருவாயில் அறைக்குள் நுழைந்த ஆதித்யனின் கண்களில் முதலில் விழுந்தது அவளுடைய காதல் கண்மணிதான்...!

 

அநாதரவான குழந்தை போல் தரையில் கால்களைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள்.கட்டிலுக்கு அருகில்...கீழே சுருண்டு கிடந்த புடவை..நேற்று நடந்த இனிமையான தருணத்தையும்...அவளது வெண்மை நிற கன்னத்தில் கன்றிப் போய் சிவந்து கிடந்த அவனுடைய விரல் தடங்கள்...அந்த இனிமைக்குப் பின் நடந்தேறிய கசப்பையும் நினைவுபடுத்த அவன் முகம் வேதனையில் இறுகியது.

 

கதவைத் தாளிட்டவன்...கீழே படுத்திருந்த தன் கண்மணியை அவளது தூக்கம் கலையாதவாறு மென்மையாக கையில் ஏந்திச் சென்று...மெத்தையில் படுக்க வைத்தான்.அலங்கோலமாய் இருந்த அவளது நிலையை உணர்ந்து...போர்வையை போர்த்தி விட்டவன்...அவளது வீங்கிப் போன கன்னத்தை இதமாக வருடி விட்டான்.

 

'ஸாரி டி..!;,மெல்ல முணுமுணுத்தவனின் உதடுகள் அவளது கன்னத்தில் மென்மையாய் பதிந்து மீண்டன.

 

அவளிடம் அசைவை உணர்ந்து விலகியவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.அவன் குளித்துக் கிளம்பி அலுவலகத்திற்குத் தயாரான பின்பும் கூட அவனது மனையாள் கண் மலர்த்தவில்லை.நேற்று இரவு நடந்த மனப் போராட்டமும்...உடல் அலுப்பும் சேர்ந்து கொள்ள ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

அறையை விட்டு வெளியேறப் போனவனை...அவள் இருந்த நிலை தடுக்க தயங்கியபடியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஏனெனில்...அவள் இருந்த கோலம் அப்படி...!அவனால் புறக்கணிப்பட்ட புடவை...அவளது மேனியை மறைக்கத் தவறி தரையைத் தஞ்சமடைந்திருக்க...பாதி உடைகளுடன் சயனித்திருந்தாள்.

 

"பேபி...!",அவளருகில் சென்று அவன்...அவளை மென்மையாய் எழுப்ப...புரண்டு படுத்தாளே தவிர எழவில்லை.

 

"பேபி...!",இம்முறை அவளது தோளைத் தொட்டு எழுப்ப..

 

கணவனது குரலில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

 

கணவனைக் கண்டதும்...நேற்று இரவு நடந்த ஒவ்வொரு விஷயமும் கண் முன் படமாய் விரிய...அவளது விழிகள் அணையுடைக்கத் தயாராயின...!அவளுடைய இதழ்கள் அவனிடம் எதையோ சொல்ல வர...கையை உயர்த்தி அவளை 'சொல்ல வேண்டாம்...!' என தடுத்தவன்..

 

"ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு படுத்து தூங்கு...!நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன்...!உன்னைக் காணோம்ன்னு திடீர்ன்னு அம்மா மேலே வந்துட்டா என்ன பண்றதுன்னுதான் உன்னை எழுப்பினேன்...!",அவளைப் பார்க்காமல் மளமளவென்று உரைத்தவன்...வேகமாக வெளியேறி விட்டான்.

 

அவன் சொன்ன பிறகுதான் தனது கோலம் உரைக்க...அவசர அவசரமாக போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டவள்,"ஆது...!ஒரு நிமிஷம்...!",என்று அழைக்க...அவளது அழைப்பு அவனது காதில் விழுவதற்குள் அவன் வெளியேறி இருந்தான்.

 

வேக வேகமாய் உடைமாற்றி விட்டு நித்திலா கீழே வரும் போது ஆதித்யன் அங்கு இல்லை.

 

'அவரு எங்கே அத்தை....?",பதைபதைப்புடன் கேட்ட மருமகளின் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களை ஊன்றிக் கவனித்தவர்..

 

"அவன் ஆபிஸ்க்கு போயிட்டான் ம்மா...!சாப்பிடக் கூட இல்லை...!ஏதோ அவசரம்ன்னு போயிட்டான்...!",என்றவர் மறந்தும் மருமகளை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

 

"சாப்பிடலையா...?",அவள் விழிகளில் கண்ணீர் கரை கட்டியது.

 

இருவருக்கும் ஏதோ சண்டை என்பதை அனுபவத்தில் மூத்த அந்தப் பெரியவர் கண்டு கொண்டார்.இருந்தும்...அவளிடம் அதைப் பற்றி விசாரிக்கவில்லை.

 

"எனக்கு டயர்டா இருக்கு அத்தை...!நான் போய் ரெஸ்ட் எடுக்கட்டுமா...?",மாமியாரிடம் வினவியவள்...அவர் சம்மதமாய் தலையாட்டவும் தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

காலை உணவை உண்ண மறுத்தவளை...லட்சுமிதான் வற்புறுத்தி உண்ண வைத்தார்.மதிய சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு சென்றவளை வரவேற்றது என்னவோ ஆதித்யன் இல்லாத வெறுமையான அறைதான்...!சோர்வுடன் வீடு திரும்பியவள்...மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.மருமகளின் நிலையை உணர்ந்து அவளை அதட்டி உருட்டி இரவு உணவை உண்ண வைத்து விட்டுத்தான் படுக்கச் சென்றார் லட்சுமி.

 

அன்று இரவு...ஆதித்யன் வரும் போது நித்திலா ஹால் சோபாவிலேயே உறங்கியிருந்தாள்.அவளை அள்ளிக் கொண்டு சென்று படுக்கையில் கிடத்திய ஆதித்யன் உறங்க வெகு நேரமாகியிருந்தது.காலை...அவள் கண் விழிப்பதற்குள்ளேயே அவன் கிளம்பியிருந்தான்.இருவருக்குள்ளும் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆரம்பமாகியிருந்தது....!

 

அகம் தொட வருவான்...!!!

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! -    அகம் 1

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - Final

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...! - அகம் 8