எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 61

 அத்தியாயம் 61:

 

தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.கலங்கிச் சிவந்திருந்த அவனுடைய கண்கள்...அந்த அறைக்கதவை விட்டு...இம்மியளவு கூட நகரவில்லை.மருத்துவர்களும்...செவிலியர்களும் அந்த அறைக்குள் உள்ளே நுழைவதும்...வெளியே வருவதுமாய் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தனர்.

                           

அனைவரது விழிகளிலும் ஒரு பதட்டம்...கவலை குடிகொண்டிருந்தது.இருக்காதா பின்னே...?உள்ளே அடிபட்டுக் கிடப்பது அவர்களது முதலாளியின் மனைவி...!வெளியே இடிந்து போய் அமர்ந்திருப்பதோ...அவர்களது முதலாளி...!ஆம்...!அது ஆதித்யனுடைய மருத்துவமனைதான்...!

 

சென்னைக்கு அருகில்...அதுவும் அவர்களது மருத்துவமனை இருக்கும் பகுதியில் விபத்து நேர்ந்திருந்ததால் நித்திலாவை உடனடியாக அவர்களது மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்க முடிந்திருந்தது.

 

பைத்தியம் பிடித்தவனைப் போல்...நித்திலாவை கைகளில் தூக்கிக் கொண்டு சாலையில் ஓடிக் கொண்டிருந்தவனை...அந்த வழியாக வந்த அவர்களது மருத்துவமனையின் டீன் கவனித்து...ஆதித்யனை சமாதானப்படுத்தி...நித்திலாவையும் அள்ளி காரில் போட்டுக் கொண்டு அவர்களது மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் வந்து சேர்ந்திருந்தார்.

 

அத்தோடு நில்லாமல்...நித்திலாவிற்குத் தேவையான முதலுதவியையும்...மற்ற ஏற்பாடுகளையும் சிறிதும் தாமதமின்றி நடக்குமாறு அவரே பார்த்துக் கொண்டார்.

 

"மிஸ்டர்.ஆதித்யன்...!உங்க மனைவிக்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணியாகணும்...!தலையில பலமா அடிபட்டதுல...இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு...!உடனே...அதை சரி செய்தாகணும்....!",இடியாய் அவன் தலையில் செய்தியை இறக்கினார் அந்த மருத்துவர்.

 

அவரது வார்த்தைகளில் உடைந்து போன தன் மனதை...ஒருவாறாகத் தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவன்,"உடனே ஆப்ரேஷன் பண்ணுங்க...!எந்த டாக்டர்ஸ்...ஸ்பெஷலிஸ்ட்டை வேணும்னாலும் வரவழையுங்க....!கமான்...!என் பேபிக்கு எதுவும் ஆகக்கூடாது....!",கடைசி வார்த்தையைக் கூறும் போதே அவன் குரல் கமறியது.

 

 "நிச்சயமா...!வீ வில் ட்ரை அவர் பெஸ்ட்....!",உரைத்த மருத்துவர் தனது பரிவாரங்களுடன் நகர்ந்து விட்டார்.

 

தன் இரு கைகளாலும் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தவனின் மனம் முழுவதும் வேதனை...வேதனை...வேதனை மட்டுமே...!தன்னவளின் இரத்தம் தோய்ந்த முகம் அவன் முன் தோன்றி...அவனை நடுங்கச் செய்தது.

 

அவனது கைகளிலும்...சட்டையிலும் படிந்திருந்த அவளது இரத்தக் கறைகள் அவனைப் பயமுறுத்தின.அதிலும்...கடைசியாக அவள் பேசிய வார்த்தைகள் அவனை உயிரோடு கொன்று போட்டுக் கொண்டிருந்தன.

 

'திரும்ப வந்திடு டி...!நீ இல்லாம என்னால வாழ முடியாது...!',கிட்டத்தட்ட மந்திரம் போல் அவனது உதடுகள் இதைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

 

அவனது குடும்பத்திற்கு விஷயத்தை கூற வேண்டும் என்ற எண்ணம் கூட அவனது மனதில் உதிக்கவில்லை.அந்த மருத்துவமனை டீன் தான் அவனது குடும்பத்திற்கு விபரத்தைக் கூறி...உடனே புறப்பட்டு வரச் சொல்லியிருந்தார்.

 

இதற்கிடையில் நித்திலாவிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒரு ஃபார்மில் கையெழுத்து இட  வேண்டிய நிலைமை வர...உடல் தூக்கிப் போட அந்த ஃபார்மை கையில் வாங்கவே மறுத்தான் ஆதித்யன்.

 

"ஜஸ்ட் ஃபார்மாலிட்டீஸ் தான்...!வேற எதுவும் இல்லை...!",என்று அவனை சமாதானப்படுத்தி...கையெழுத்து வாங்குவதற்குள் அந்த மருத்துவருக்கு 'போதும்...போதும்' என்றாகி விட்டது.கைகள் நடுங்க...மனம் முழுக்க பயம்...பயம் மட்டுமே நிரம்பியிருக்க...அந்த ஃபார்மில் அவன் கையெழுத்து இட்ட அந்த தருணத்தை...இறந்தாலும் அவனால் மறக்க முடியாது.

 

அடுத்த சில மணி நேரங்களில்...அவனுடைய குடும்பம் நித்திலாவினுடைய குடும்பம்...கெளதம் சுமித்ரா என அனைவரும் அங்கு பதட்டத்துடனும் அழுகையுடனும் கூடியிருந்தனர்.

 

"ஆதி...!",அவ்வளவு நேரம் வெறுமையான பார்வையோடு அமர்ந்திருந்தவனின் தோளில்...ஆதரவாக கெளதம் கை வைத்த அடுத்த நொடி அவனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தான் ஆதித்யன்.

 

"கெளதம்...!எனக்குப் பயமா இருக்கு டா...!என் குட்டிம்மா எனக்கு வேணும்...!அவளுக்கு ஏதாவதுன்னா...நான் உயிரோட இருக்க மாட்டேன் டா...!",கதறித் துடித்து கண்ணீர் விட்டான் அந்த ஆண்மகன்.

 

"இல்லை டா...!நித்திக்கு எதுவும் ஆகாது...!நீ அமைதியா இரு...!",தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு நண்பனைத் தேற்றினான் கெளதம்.

 

"ஒரு ஃபார்ம் கொடுத்து...அதில என்கிட்ட கையெழுத்து வாங்கறாங்க டா...!எதுக்கு அந்த ஃபார்ம்...?எதுக்கு என்கிட்ட கையெழுத்து வாங்கினாங்க....?சொல்லுடா....? ",ஒரு கணம் அவ்வாறு புலம்பியவன்..

 

அடுத்த கணம்,"அய்யோ...!எவ்வளவு இரத்தம் தெரியுமா டா...?என்..என் குட்டிம்மாவை இ..இந்தக் கையில தூக்கிட்டு....",அதற்கு மேல் பேச முடியாமல் உருத் தெரியாத பந்து ஒன்று வந்து அவன் தொண்டைக்குழியில் சிக்கிக் கொள்ள..

 

நண்பனின் நிலை உணர்ந்தவனாய்...அவனை இறுக அணைத்துக் கொண்டான் கெளதம்.மனைவிக்காக அவன் படும் பாட்டை கண்ட அவனது குடும்பத்தினர் மெளனமாக கண்ணீர் வடித்தனர்.தங்கள் மகள் மேல் மாப்பிள்ளை வைத்திருக்கும் காதலை நேரில் கண்ட நித்திலாவின் பெற்றவர்களின் கண்களிலும் கண்ணீர்.

 

ஒருவழியாக...ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு நித்திலாவிற்கு அறுவை சிகிச்சையை முடித்து விட்டு மருத்துவர்கள் குழு வெளியே வந்தது.

 

"நல்லபடியா ஆப்ரேஷன் முடிந்தது மிஸ்டர்.ஆதித்யன்...!ஆனால்...அவங்க கண் விழித்ததுக்குப் பிறகுதான் மேற்கொண்டு எங்களால எதையுமே சொல்ல முடியும்...!",தலைமை மருத்துவர் கூறி விட்டு சென்று விட...அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் ஆதித்யன்.

 

அந்த அதிர்ச்சியினூடே,"இதுக்கு என்னடா அர்த்தம்...?",என்று கௌதமின் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

 

"டாக்டர்ஸ் என்னடா சொல்லிட்டுப் போறாங்க...?கண் விழித்ததுக்குப் பிறகுதான் சொல்ல முடியும்ன்னா...அதுக்கு என்ன அர்த்தம்...?அவளுக்கு எதுவும் ஆகாதுன்னு நீதானே சொன்ன....?",ஆக்ரோஷத்துடன் கௌதமின் சட்டையைப் பிடித்து உலுக்கியவனை...சமாதானப்படுத்தி அமர வைப்பதற்குள் படாதபாடு பட்டான் கெளதம்.

 

கௌதமைத் தவிர வேறு யாராலும் ஆதித்யனின் அருகில் நெருங்க முடியவில்லை.வேறு யார் நெருங்கினாலும்...பைத்தியம் பிடித்தவனைப் போல் கத்த ஆரம்பித்தான்.அவனை விட்டு விலகித் தூரமாகத் தள்ளி நின்றபடி தங்களுக்குள் மறுகிக் கொண்டிருந்தனர் மற்றவர்கள்.

 

இப்படியாக இரவு நேரமும் வரவும்...கௌதம்தான் ஆதித்யனது குடும்பத்தை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.'இங்கேயே இருக்கிறோம்...!',என்று குலுங்கி அழுத நித்திலாவின் பெற்றவர்களை...மருத்துவமனையில் ஆதித்யனுக்காக இருக்கும் அறையில் தங்க வைத்தான்.வீட்டிற்கு செல்ல மறுத்தபடி...லட்சுமியும் அவர்களுடனேயே அந்த அறையில் தங்கிக் கொண்டார்.

 

விடிய விடிய...ஒரு பொட்டுத் தூங்காமல்...நித்திலா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யனுக்கு அருகில்...ஆதரவாய் அவனது கையைப் பற்றியபடி அமர்ந்திருந்தான் கெளதம்.

 

அடுத்த நாளும் விடிய...அனைவரும் நித்திலா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு முன் வந்து குவிந்தனர்.எதையும் கண்டு கொள்ளாது...அப்படியே அமர்ந்திருந்த ஆதித்யனிடம்...கெளதம் மெல்ல வந்து பேச்சுக்  கொடுத்தான்.

 

"ஆதி...!",அவன் அழைக்க..

 

"..........",அவனிடம் எந்தப் பதிலும் இல்லை.

 

நண்பனின் தோற்றம் மனதைப் பிசைய,"நேத்து காலையில இருந்து இப்படியே இருக்கிறடா ஆதி...!எழுந்து வா...!முதல்ல ட்ரெஸ்ஸை மாத்திட்டு...ஏதாவது சாப்பிடு...!வா...!",அவனை எழுப்பினான் கெளதம்.

 

"எனக்கு எதுவும் வேண்டாம்...!",அவனது கையைத் தட்டி விட்டபடி விரக்தியான குரலில் கூறினான் ஆதித்யன்.

 

"அப்படி சொல்லாதே டா...!பாரு....!ட்ரெஸ் முழுக்க இரத்தக்கறை....!இப்படியே இருந்து உனக்கு ஏதாவது ஆகிடப் போகுது....!குடும்பத்தைப் பாரு...!அழுதுக்கிட்டே இருக்காங்க....!",அவன் கூறிய அடுத்த நொடி விருட்டென்று எழுந்தவன்..

 

"எனக்கு என்ன ஆனால்தான் என்ன...?என் குட்டிம்மாவைப் பார்த்தியா டா...?இன்னும் கண் விழிக்காமல் படுத்துக் கிடக்கிறாள்...!அவள் இல்லாத வாழ்க்கையை...என்னால வாழ முடியாது டா...!நான் வாழ மாட்டேன்...!என் தொழிலையெல்லாம் நீயே பார்த்துக்கோ....!அப்புறம்...என் அம்மா அப்பாவை...தாத்தா பாட்டியை எல்லோரையும் பார்த்துக்கோ...!",மனநிலை சரியில்லாதவனைப் போல் புலம்பியவன்...பிறகு எதையோ யோசித்தவனாய்..

 

"தொழில்...!இப்பவே என் பெயரில இருக்கிற பிசினெஸ்ஸை உன் பேருக்கு மாத்திடறேன்....!நான் போனதுக்குப் பிறகு லீகலா...உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது...!",பித்துப் பிடித்தவனைப் போல் பிதற்றியவன்...கௌதமின் சட்டைப்பையில் இருந்த போனை எடுத்து வக்கீலுக்கு அழைக்க முயன்றான்.

 

ஆதித்யனது வார்த்தைகளில் அனைவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.லட்சுமியோ பெருங் குரலெடுத்து அழவே ஆரம்பித்து விட்டார்.சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட கெளதம்...நண்பனது கையில் இருந்த மொபைலைப் பிடுங்கியபடி...அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.

 

அவனுடைய எந்தவொரு சமாதானமும்...ஆதித்யனின் மூளையில் ஏறவில்லை.தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தவனை அடிக்காத குறையாக கண்டித்தும்...குரலை உயர்த்தி அதட்டியும்தான் வழிக்கு கொண்டு வர முடிந்தது.

 

காதல்...எப்பேர்பட்ட வீரனையும் கோழையாக்கி விடும்...என்ற வார்த்தைகளை மெய்ப்பிப்பது போல் நடந்து கொண்டிருந்தான் ஆதித்யன்.காதல்...அந்த அசகாயசூரனையும் கலங்கடித்து வேடிக்கைப் பார்த்தது.

 

*******************************

 

"ரியலி ஸாரி டு ஸே....!",தனது மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி தனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆதித்யனையும்...கௌதமையும் பார்த்து பீடிகையுடன் ஆரம்பித்தார் அந்த மருத்துவர்.அவரது அனுபவம்...அவரது வயதில் தெரிந்தது.

 

"உங்க மனைவியுடைய தலையில ஏற்பட்டிருந்த இரத்தக்கசிவை...ஆப்ரேஷன் மூலமா நாங்க நிறுத்திட்டோம்...!ஆனால்...துரதிருஷ்டவசமா...உங்க மனைவி கோமா ஸ்டேஜிற்கு போயிட்டாங்க...!",அவரது குரலில் உண்மையாலுமே வருத்தத்தின் சாயல் எதிரொலித்தது.

 

ஆயிரமாயிரம் இடிகள்...லட்சம் கோடி மின்னல்களோடு சேர்ந்து தன் தலையில் இறங்கியதைப் போல் உணர்ந்தான் ஆதித்யன்.அவனது இதயம் துடிக்க மறந்து ஒரு கணம் நின்று...பிறகு துடித்தது.அவனது இதயம் வலியை உணரவில்லை...!துடிப்பை உணரவில்லை...!மாறாக மரித்துப் போன உணர்வு...!அனைத்தும் சில நொடிகள்தான்...!அடுத்த இரண்டு நிமிடத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்தவன்,

 

"இதிலிருந்து அவள் மீண்டு வருவதற்கான வாய்ப்பு....?",கேள்வியுடன் நிறுத்த..

 

"கண்டிப்பா வாய்ப்பு இருக்கு...!அதே சமயம்...வாய்ப்பில்லாம போகவும் வாய்ப்பு இருக்கு...!இன்னும் ஒரு மாசம்...இரண்டு மாசம்...ஒரு வருஷம்...பத்து வருஷம்...ஏன் பத்து நாட்கள்ல கூட மீண்டு வரலாம்....!அதே சமயம்...நிரந்தரமா....",அதற்கு மேல் சொல்ல விடாமல் அவரை கையை உயர்த்தி தடுத்தவன்..

 

"அவள் மீண்டு வருவாள்...!நிச்சயம் மீண்டு வருவாள்...!நான் மீண்டு வர வைப்பேன்...!",தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று...வில்லேற்றிய நாணாய் உடல் விறைக்க கர்ஜித்தவன்...பழைய ஆதித்யனாக மாறியிருந்தான்.

 

         "வெரிகுட் மிஸ்டர்.ஆதித்யன்...!அவங்களை சுற்றி இருக்கறவங்களுடைய நம்பிக்கை...அவங்க மீண்டு வர்றதுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்...!நேர்மறையான எண்ணங்கள் அவங்களை சுற்றியும் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க...!அவங்கக்கிட்ட பேசி அவங்களுக்கு உயிர் வாழணும்ங்கிற ஆசையைத் தூண்டி விடுங்க...!அனைத்தையும் கடவுள் பார்த்துக்குவார்...!",அவனுக்குத் தைரியமளிப்பதைப் போல் பேசினார் அந்த மருத்துவர்.

 

'என்னுடைய காதல்...அவளை பார்த்துக்கும்...!',மனதிற்குள் கூறியவன் அவரிடம் விடைபெற்று வெளியே வந்தான்.

 

செய்தியைக் கேள்விப்பட்டு நிலைகுலைந்து நின்ற தனது குடும்பத்தையும் ஆதித்யன்தான் தேற்றினான்.

 

"கல்யாணமாகி முழுசா ஒரு வருஷம் கூட முடியலை...!அதுக்குள்ள என் மகனுடைய வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே...!'அத்தை..அத்தை..'ன்னு என் முந்தானையை பிடிச்சுக்கிட்டே சுத்திக்கிட்டு இருப்பாள்...!அவள் இல்லாம...அந்த வீட்டுக்கு நான் எப்படி போவேன்....?",லட்சுமி ஒரு பக்கம் அழ..

 

"அய்யோ...!என் பொண்ணை எனக்குத் திருப்பிக் கொடுத்திடு தாயே...!",என்று இன்னொரு பக்கம் கதறிக் கொண்டிருந்தார் மீனாட்சி.

 

பேசுவதற்கு வார்த்தைகள் வராமல் இடிந்து போய் அமர்ந்திருந்த மற்றவர்களையும் பார்த்தவன்,"ஷ்...!இப்போ எதுக்கு எல்லோரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க...?அவளுக்கு எதுவும் ஆகாது..!நான் ஆக விட மாட்டேன்...!இந்த ஆதித்யனை மீறி அவள் எங்கே போயிடுவா....?",வலி நிறைந்த புன்னகையோடு கூறியவன்..

 

கண்களில் தேங்கிய கண்ணீரோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் தாத்தாவின் அருகில் வந்தவன்,"நான் அவளைக் காதலிக்க ஆரம்பிச்ச நாட்கள்ல...உங்ககிட்ட ஒண்ணு சொன்னேன்...!ஞாபகம் இருக்கிறதா தாத்தா...?",அவன் வினவவும்...பேரனை பார்த்து 'ஞாபகம் இருக்கு...!',என்பதாய் மெலிதாய் தலையாட்டினார் அந்தப் பெரியவர்.

 

"யெஸ்...!அதையேதான் இப்பவும் சொல்றேன்...!அவளை...அவளுக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல...!அப்படி இருக்கும் போது...அந்த எமன் கிட்ட அவளை விட்டுக் கொடுத்திடுவேனா...என்ன....?நெவர்...!",அவனது குரலில் அப்படியொரு அழுத்தம்...!அப்படியொரு நம்பிக்கை...!

 

அவனது முகத்தில் தெரிந்த நம்பிக்கையை பார்த்து...அனைவரும் சற்று மனம் தெளிந்தனர்.அதன் பிறகு...ஆதித்யனைத் தேற்றுவதற்கோ...சமாதானப்படுத்துவதற்கோ யாரும் தேவைப்படவில்லை.மாறாக...இவன் அனைவருக்கும் தைரியம் கூறினான்.

 

நாட்கள் வேகமாகப் பறந்தன...!மருத்துவமனையை கதியென்று கிடந்தான் ஆதித்யன்.மருத்துவமனையில் இருக்கும் அவனது அறையிலேயே குளித்து விட்டு...அங்கு இருக்கும் கேன்டீனிலேயே உணவையும் முடித்துக் கொள்வான்.குளிப்பது...சாப்பிடுவது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அவன்...நித்திலா அருகில்தான் இருந்தான்.

 

அலுவலகத்தின் பக்கமும்...வீட்டின் பக்கமும் அவன் எட்டியே பார்க்கவில்லை.அலுவலக வேலைகளை கெளதம் கவனித்துக் கொண்டான்.

 

"வீட்டுக்கு வந்து ஒருநாள் ரெஸ்ட் எடுத்துட்டு போப்பா...!நித்தியை நாங்க  பார்த்துகிறோம்...!",நித்திலாவின் அருகிலேயே தவம் கிடந்த ஆதித்யனைப் பார்த்து கவலைப்பட்டவர்களாய்...லட்சுமியும்..மீனாட்சியும் அவனிடம் விதவிதமாகக் கூறிப் பார்த்து விட்டனர்.ம்ஹீம்...!அவன் அசைந்து கொடுக்கவில்லை.

 

"அந்த வீட்டிற்கு...நான் என் மனைவியுடன்தான் வருவேன்...!",பிடிவாதமாகக்  கூறுபவனை எதிர்த்து அவர்களாலும் மேற்கொண்டு வாயைத் திறக்க முடியவில்லை.

 

நித்திலாவின் அருகில் அமர்ந்தபடி...அவளது கையைத் தனது கரங்களுக்குள் பாதுகாப்பாய் பொத்தி வைத்துக் கொண்டு...அவளது உள்ளங்கையில் முகம் புதைத்து...விழிகளை மூடி அமர்ந்திருந்தான் ஆதித்யன்.இன்று நேற்றல்ல...!அவள் படுத்த படுக்கையாய் ஆன நாளில் இருந்து...இப்படித்தான் இரவு பகல் பாராமல் அமர்ந்திருப்பான் அவன்.

 

தூக்கம் வரும் போது...அவளருகில் நாற்காலியில் அமர்ந்தபடியே அவள் படுத்திருக்கும் கட்டிலில் தலை வைத்து உறங்கிவிடுவான்.தூக்கத்திலும்...மனைவியின் இரத்தம் தோய்ந்த முகமே வலம் வரும்.உடனே...சட்டென்று விழித்து விடுவான்.மீண்டும் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு...அவளது முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டும் அமர்ந்திருக்கும் ஆதித்யனின் முகத்தில் வலி...வேதனை...ஆகிய உணர்வுகள் வந்து போகும்...!

 

இதுவரை...அவன்...அவளிடம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை.ஆனால்...அவனது இதயம் பேசியது...!அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு விழி மூடியிருப்பவனின் இதயம்...அவளிடம் மெளனமாக பேசியது..!அந்த இதயமும்...அவளிடம் பேசிய வார்த்தைகள் 'குட்டிம்மா...!குட்டிம்மா...!' என்பதே...!

 

அவனுடைய 'குட்டிம்மா...!' என்ற அழைப்பைக் கேட்ட பிறகும்...அவளால் கண் மூடி படுத்திருக்க முடியுமா...?அதுவும்...இதயம் பேசிய மொழியை உணர்ந்த பிறகும்...விழிகளைத் திறக்காமல் இருக்க முடியுமா...?ஆம்...!அவள் விழிகளைத் திறந்தாள்...!முழுதாக மூன்று மாதங்கள் அவனைத் தவிக்க விட்ட பிறகு...!

 

******************************

 

வழக்கம் போல் அன்றும்...தன் இதயத்தை மொழியாக வைத்து அவளிடம் பரிபாஷணை நடத்திக் கொண்டிருந்தவன்...அப்பொழுதுதான் கவனித்தான்..அவளது விழிகளின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீர் துளிகளை...!

 

சுறுசுறுவென்று உடலில் பரபரப்பு தொற்றிக் கொள்ள...அவனது கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன.'யாரையாவது அழை...!' என்று அவனது மூளை கட்டளையிட்டது...!ஆனால்...அவனது உதடுகள்...மூளையின் கட்டளையை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தன...!

 

பரபரவென்று அவனது கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்ய...அவனது மனதில் இனம் புரியாத ஒரு ஜில்லிப்பு...!

 

"குட்டிம்மா...!",அவனது உதடுகள்தான் அசைந்ததே தவிர...வார்த்தைகள் வெளிவரவில்லை...!மாறாக...அவனது கண்களில் இருந்து விழுந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி அவளது நெற்றிப்பொட்டில்  பட்டுத் தெறித்து..அவளது கண்ணீரோடு கலந்தது.

 

தன்னவன்...தனக்காக சிந்தும் கண்ணீரை அவள் உணர்ந்தாளோ...என்னவோ...?அவளது கருவிழிகள் இரண்டும்...அவளது இமைகளுக்குள் அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தன.

 

ஆதித்யனுக்கு வாய்விட்டுக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது.வேக வேகமாகத் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன்...அவளருகே குனிந்து,"குட்டிம்மா...!",என்று அழைத்தான் தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கியபடி.

 

அடுத்த நொடி...மெல்ல மெல்ல தனது சிப்பி இமைகளைத் திறந்தாள் அவனுடைய குட்டிம்மா...!முதலில் அவளுக்கு எதுவும் புரியவில்லை.தன் முன்னால் நின்றிருந்தவனின் உருவம் மங்கலாகத் தெரிய...இமைகளை அழுந்த மூடி மீண்டும் திறந்தாள்.

 

எதிரே நின்றிருந்தான் அவளவன்...!மெல்ல மெல்ல மூளை வேலை செய்ய ஆரம்பிக்க...அவளது இதயத்தின் அடியாழத்தில் புதைந்திருந்த தன்னவனை அடையாளம் கண்டு கொண்டாள்.

 

"ஆ..து...!"என்று அழைத்தவளின் குரலில்தான் எத்தனை காதல்...!

 

மெல்ல அவள் விழி திறந்து...தன்னை அழைக்கும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவளைப் பார்த்திருந்தவன்...அவள்...'ஆது...!' என்றழைத்த அடுத்த நொடி...அவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டான்.

 

"பேபி...!ஆர் யூ ஆல்ரைட்....?",தனது விழிகளைப் பார்த்து வினவியவனுக்கு..

 

"ம்ம்...!",என்று தலையாட்டினாள் அவள்.

 

"தேங்க் காட்...!",அவளது நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து விலகியவன்.."நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்...!",என்றபடி வெளியேறினான்.அவனது முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த காதல் மறைந்து...இறுக்கம் வந்து குடிகொண்டது.

 

"ஷீ இஸ் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட்...!எந்தப் பிரச்சனையும் இல்ல...!இன்னும் இரண்டு வாரத்துல டிஸ்சார்ஜ் ஆகிடலாம்...!",நித்திலாவைப் பரிசோதித்த மருத்துவர் கூற...அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.லட்சுமியும்...மீனாட்சியும் நித்திலாவைக் கட்டிக் கொண்டு அழுதே விட்டனர்.வெகு நாட்களுக்குப் பிறகு...குடும்பத்தினர் அனைவரின் முகங்களிலும் நிம்மதி கலந்த புன்னகை தோன்றியது.

 

அடுத்த இரண்டு வாரங்களில்...நித்திலா நார்மல் வார்டுக்கு மாற்றப்பட...அவளுக்குத் தேவையான அனைத்தையும் உடன் இருந்து ஆதித்யனே கவனித்துக் கொண்டான்.நித்திலா ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல்தான் இருந்தாள்.மூன்று மாதங்களாக கோமாவில் இருந்தது அவளுக்குத் தெரியவில்லை.மீனாட்சிதான் அனைத்தையும் கூறி...இரவும் பகலும் அவளை விட்டு நீங்காமல் அடைகாத்த ஆதித்யனைப் பற்றி கூறியிருந்தார்.

 

தன்னவன் தனக்காக தவித்த தவிப்பு...அவளது ஒரு மனதை உருக்கினாலும்...காதல் கொண்ட இன்னொரு மனது...அவனுடைய காதலை எண்ணி சுகமாய் தொலைந்து போகத்தான் செய்தது...!

 

நித்திலா படிப்படியாக குணமடைந்து வந்தாள்.இரண்டு வார மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு...அன்று வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்...!மகனையும் மருமகளையும் ஆரத்தி எடுத்து லட்சுமி வரவேற்க...தன்னவளுடன் வீட்டிற்குள் நுழைந்தான் ஆதித்யன்.

 

மதிய உணவுக்குப் பிறகு...ஓய்வாக படுக்கையில் சாய்ந்திருந்த நித்திலாவிடம் வந்த ஆதித்யன்...அவள் உண்ண வேண்டிய மாத்திரைகளை எடுத்து நீட்டினான்.மாத்திரையை வாயில் போட்டவளின் கையில்...தண்ணீர் டம்ளரை திணித்தான்.அவனது அக்கறையில்...அவளுடைய மனம் நெகிழ்ந்தது.

 

காதலுடன் அவனை நோக்கியவளின் முகம் ஒருகணம் வேதனையில் கசங்கியது.மூன்று மாதங்களாக மழிக்கப்படாத தாடியுடன்...சரியான உணவும் உறக்கமும் இல்லாததால்...சற்று இளைத்து...கறுத்துப் போய் இருந்தவனின் தோற்றம் அவளுக்கு வருத்தத்தைத் தந்தது.

 

"ஆது....!",மெதுவாக அவள் அழைக்க..

 

"ம்....!",மருந்து மாத்திரைகளை அதற்குரிய கப்போர்டில் வைத்தபடி முணுமுணுத்தான் அவன்.

 

"ஏன் ஆது இப்படி இருக்கறீங்க....?தாடியை ஷேவ் பண்ணாம...சரியா முடி வெட்டிக்காம...நீங்க இப்படி  இருக்க வேண்டாம் ஆது...!என்னுடைய ஆது அத்தான்...எப்பவும் கம்பீரமா இருக்கணும்....!",

 

சரி...!நீ படுத்து தூங்கு....!",உணர்ச்சியில்லாத குரலில் உரைத்தவன் உடனே வெளியேறிவிட்டான்.

 

ஆனால்...அடுத்த நாளே அவள் கூறியிருந்த படி...தாடியை அழகாக மழித்து..ட்ரிம் செய்து...தலைமுடியை வழக்கம் போல் வெட்டி...பழைய கம்பீரத்துடன் மிளிர்ந்திருந்தான்...!

 

அகம் தொட வருவான்...!!!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! -    அகம் 1

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - Final

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...! - அகம் 8